உணவு பிரியர்களுக்காக முதல்முறை… 45 அரங்குகளுடன் மெரினா கடற்கரையில் தொடங்கியது உணவுத் திருவிழா!

0
101

உணவு பிரியர்களுக்காக முதல்முறை… 45 அரங்குகளுடன் மெரினா கடற்கரையில் தொடங்கியது உணவுத் திருவிழா!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா நிகழ்ச்சியை இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த உணவுத் திருவிழாவானது இன்று (டிச.20) தொடங்கி வரும் டிச. 24-ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. அதே போல் இன்று (டிச.20) மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் உணவு திருவிழா, நாளை (டிச.21) முதல் 24-ம் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

இந்த ஆண்டு உணவுத் திருவிழாவில் மொத்தம் 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாரம்பரிய உணவுகள், கிராமிய உணவுகள், சைவம் மற்றும் அசைவ உணவுகள், சிறுதானிய உணவுகள், இனிப்பு வகைகள், சாலையோர உணவுகள், ஊர் போற்றும் உணவுகள், தின்பண்டங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன..பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் மூன்று அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 அரங்குகளில், மகளிர், சுய உதவி குழுவின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 அரங்குகளில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னை மெரினா கடற்கரை மண் பரப்பில் பொதுமக்கள் கலை நிகழ்ச்சியை காண்பதற்காக பெரிய திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உணவு திருவிழாவிற்கு பொதுமக்கள் வருவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் உள்ளே வருவதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு வேறொரு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த உணவு திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இலவசமாக வாகனம் நிறுத்துவதற்கு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவுத் திருவிழாவில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் குற்றம் சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் கூடுதலாக பணியில் உள்ளனர். சிசிடிவி காட்சிகள் வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.