‘இந்தியத் தொழில்துறையின் தூண் ரத்தன் டாடா’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மும்பையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் ரத்தன் டாடா திகழ்ந்தார்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த திரு. ரத்தன் டாடா அவர்கள் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் ரத்தன் டாடா அவர்கள் காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்.
இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.
இத்துயர்மிகு தருணத்தில், ரத்தன் டாடா அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.