‘இசைமுரசு’ ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி!

0
104

‘இசைமுரசு’ ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி!

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்களது வணக்கங்களை தெரிவித்துள்ளனர்.

இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த நாகூர் ஹனிபா அவர்கள் தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாடல் திறத்தாலும் உலகெங்கிலும் இலட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். நாகூர் ஹனிபா அவர்கள் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்கள் மற்றும் இதர பாடல்களையும் பாடி பெரும் புகழ்பெற்றவர்.

தி.மு.கழகத் தோழர்களை தன் காந்தக் குரலில் கவர்ந்திழுத்த ‘அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’, ‘ஒடி வருகிறான் உதயசூரியன்’ மற்றும் ‘இறைவனிடம் கையேந்துங்கள்’, ‘எல்லோரும் கொண்டாடுவோம்’, ‘நட்ட நடு கடல் மீது’, ‘உன் மதமா என் மதமா’ போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை ஆகும்.

சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கிய நாகூர் ஹனிபா அவர்கள், நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கண்ணியத்தலைவர் காயிதே மில்லத் ஆகியோரது அன்பையும் பெற்றவர்.

“இசை முரசு” நாகூர் ஹனிபா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றியவர். நாகூர் ஹனிபா அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாள் மறைந்தார்.

இந்நிலையில், இசை முரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்களது வணக்கங்களை தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “கழகத்தின் கம்பீரக் குரல் “இசைமுரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்!

தலைவர் கலைஞரின் நண்பரும் – ஆருயிர்ச் சகோதரருமான “இசைமுரசு” ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்!” என புகழாரம் சூட்டியுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட இயக்கத்திற்கு கிடைத்த கம்பீர குரல்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்த பாசக்குரல்! எதிரிகளை நடுங்க செய்யும் சிம்மக்குரல்! அய்யா நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு தொடக்கம் இன்று!

மற்ற இயக்க மாநாடுகளில் நிறைவில் தான் கூட்டம் சேரும்…ஆனால், கழக மாநாடுகளின் தொடக்கத்திலேயே ‘ஓடி வருகிறான் உதய சூரியன்’ என்கிற அய்யா ஹனிபாவின் குரலுக்காகவே பெருந்திரள் கூடும்.

கழக மேடைகளிலும் – உடன்பிறப்புகளின் உள்ளங்களிலும் அய்யா ஹனிபாவின் பாடல்கள் என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

உடன்பிறப்புகளுக்கு பாடல்கள் மூலம் கொள்கை உரமூட்டிய அய்யா ஹனிபாவின் லட்சியகுரல் என்றும் நிலைத்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.