மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்

0
84

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அமல்படுத்தினால் அது மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று தமிழக அரசு கூறி வருகிறது.

மத்திய பல்கலைக்கழங்களில் நடத்த திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக்கோரி தமிழகசட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு 2022-2023-ம் கல்வியாண்டு முதல், மானியக் குழுவின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யூ.இ.டி.) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இப்பேரவை கருதுகிறது. பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள் தான்.

இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர். என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும்.

இந்த நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினை செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எனவே மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்த இருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட மத்திய அரசினை வலியுறுத்துகிறோம்.

இதையடுத்து தீர்மானம் மீது விவாதம் நடந்தது.