நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

0
107

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

சென்னை, தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார்.

சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் வாக்களித்தார்.

திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

கிருஷ்ணகிரியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி வாக்களித்தார்.

வேலூர், காட்பாடி வாக்குச்சாவடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாக்களித்தார்.

கோவை, சுகுணாபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்

திருச்சி, திருவெறும்பூர் வாக்குச்சாவடியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்களித்தார்

திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்

விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வாக்களித்தார்.

விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் பொன்முடி வாக்களித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் குடை பிடித்தபடி ஆர்வமுடன் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.