தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

0
239

“தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை”- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான ஆக்சிஜன் அளவை உயர்த்த வேண்டும் எனக் கோரி பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தமிழகத்திற்கு ஆக்சிஜன் அளவு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா நோய்த்தொற்று வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்லும் காரணத்தினால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். வட தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.

“தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை”- அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 165 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக 20 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது என ஐநாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் வேலூர் கடலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாண்டிச்சேரி மாநிலத்திற்கும் ஆக்சிஜன் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் மே11ம் தேதி 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. இதை 70மெட்ரிக் டன்னாக உயர்த்த முடியுமா என ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து 12ம் தேதிக்குள் தெரிவிப்பதாக ஸ்டெர்லைட் கூறியுள்ளது.

மேலும் திரவ ஆக்சிஜன் உற்பத்தியை 12 கிலோ லிட்டரிலிருந்து 16 லிட்டராக உயர்த்தி தருவதாக ஜே.எஸ். டபிள்யூ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதையடுத்து சிபிசிஎல் தொழிற்சாலையில் 300 படுக்கைகள் உருவாக்கப்பட்டு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

அதேபோல் பல்வேறு நிறுவனங்களில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஆலோசனை வழங்கியுள்ளோம். தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஆக்சிஜன் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.