தேசிய விருது : இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தான் காரணம் – விஜய்சேதுபதி
புதுடெல்லி, இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு பிறகு தமிழ் திரைப்படத்துறையில் இந்த விருதை ரஜினிகாந்த் பெறவுள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த விருதை அவருக்கு வழங்க முடியாத நிலை இருந்தது.
இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதைப்போல ‘போன்ஸ்லே’ என்கிற இந்தி படத்தில் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய், ‘மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி’ மற்றும் ‘பங்கா’ ஆகிய இந்தி படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரும் தேசிய விருது பெற்றார்கள்.
இதைப்போல சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற விஜய் சேதுபதி டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தற்காக எனக்கு தேசிய விருது கிடைப்பதற்கு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தான் காரணம். தேசிய விருது பெறும் அனுபவம், மிகவும் புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. விருது நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்கூட நேற்று நடந்தது. ஆகவே இங்கே கூடுதல் நேரம் செலவிட முடிந்தது என்பதால், அந்த நேரத்தில் எல்லா மொழி பேசுபவர்களையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சந்திக்க முடிந்தது. ஒவ்வொருவரின் படங்களையும் மொழிகள் கடந்து நேரடியாக இந்த இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது. விருது என்பதைவிட, கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. சில வேற்று மொழி கலைஞர்கள் என் படத்தை பார்த்ததாக கூறி பாராட்டியது, இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது” என்றார்.
முன்னதாக விருது வழங்கும் இடத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்த எடுத்துகொண்ட புகைப்படத்தை பார்த்திபன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.