திருவள்ளுவர் சிலை – வெள்ளி விழா விழிப்புணர்வு பேருந்துகள்! : சேவையை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
கன்னியாகுமரியில் 2000ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, உலக பொதுமறையை எழுதிய திருவள்ளுவருக்கு 133அடி உயர சிலை திறக்கப்பட்டது.
வாழ்வியலை உலக மக்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்து, இரு வரியில் ஆயிரம் பொருள் கூறிய தகைசால் தலைவரான திருவள்ளுவருக்கு செய்யப்பட்ட சிறப்பு சிலை நிறுவி, 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இன்றைய காலகட்டத்தில், ஒன்றிய பா.ஜ.க அரசால் பல நூறு கோடி செலவில் நிறுவப்படும் சிலைகள், சிறிய காற்றுக்கே தரைமட்டமாகி வருகிற சூழலில், முக்கடல் கூடும் பகுதியில் இருந்து தலைநிமிர நிலைக்கொண்டிருக்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை கொண்டாட தமிழ்நாடு அரசு பெருமளவில் திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில், வெள்ளிவிழாவினை முன்னிட்டு, திருவள்ளுவர் சிலை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா ஒட்டிகளை தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஒட்டி, திருவள்ளுவருக்கு புகழ் சேர்த்திருகிறது தமிழ்நாடு அரசு.
இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது x வலைதளப் பக்கத்தில், “முக்கடல் கூடும் குமரியில் முப்பால் தந்த அய்யன் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வைத்த வானுயர்ந்த சிலை வெள்ளி விழா காண்கிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் விழா நடக்கவிருக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புக்குறிய நிகழ்வைக் கொண்டாடுகிற வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாட்டிலான விழிப்புணர்வு பேருந்துகளை சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம்” என பதிவிட்டுள்ளார்.