திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல்

0
194

திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தல்

கொரோனா தொற்று குறைந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்க சில விதிகளை தளர்த்தி கோவில் தேவஸ்தானம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் உள்ள பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. மேலும், மலைபாதை உள்பட சாலைகளும் சேதம் அடைந்தன.

இந்நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ள பக்தர்கள் தங்கள் பயணத்தை 15 நாட்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

10 முதல் 15 நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து முன்பதிவு செய்திருந்த அதே டிக்கெட்டை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.