திருத்தணியில் ரூ.110 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

0
381

திருத்தணியில் ரூ.110 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

* சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.18.24 கோடியில் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் கட்டிடங்கள் திறப்பு

* ஆகாய தாமரை, கழிவுகளை அகற்ற ரூ.15 கோடியே 70 லட்சத்தில் 3 நவீன உபகரணங்கள்

சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (27–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 109 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 18 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை நீங்கலாக, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. இவ்வாரியம் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கு திட்டமிடுதல், ஆய்வு, வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல், குடிநீர் தரக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு, குடிநீர் ஆதாரங்களின் நீடித்த நிலைத்தன்மைக்கான செயல்பாடுகள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

52 ஆயிரம் பேர் பயன்

2016–-17ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், நகர்ப்புர உள்ளாட்சிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் உரிய அழுத்தத்துடன் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்குதல் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் முதன்மையான நோக்கமாகும். அதன்படி திருத்தணி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 109 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இந்த குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்தப்படுவதன் மூலம், திருத்தணி நகராட்சியில் வசிக்கும் சுமார் 52 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

ஆரம்ப சுகாதார மையங்கள்

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் திருவொற்றியூர் மண்டலம் – திருவொற்றியூர் மெயின் ரோடு, தண்டையார்பேட்டை மண்டலம் – வி.ஆர். நகர், திரு.வி.க. நகர் மண்டலம் – புளியந்தோப்பு மற்றும் ஜி.கே.எம். காலனி, பெருங்குடி மண்டலம் – மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையக் கட்டடங்கள்; மணலி மண்டலம் – மணலி விரைவு சாலையில் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட நகர்ப்புர சமுதாய மையம்; ராயபுரம் மண்டலம் – எழும்பூர், வேப்பேரி மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை ஆகிய இடங்களில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சிறப்பு காப்பகங்கள், என மொத்தம் 18 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

ரூ.15.70 கோடியில் அதிநவீன கருவிகள்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 210 சிறிய குளங்கள், ஏரிகள், நீரோடைகள், ஆகியவற்றில் உள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் மிதக்கும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி கொசு உற்பத்தியை தடுத்திட 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மினி ஆம்பிபியன் உபகரணம், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 3.5 மீட்டருக்கும் குறைவான அகலமுள்ள கால்வாய்களில் உள்ள ஆகாயத் தாமரைகள், தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை அகற்ற 6 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் உபகரணம், பெரிய கால்வாய்களை தொய்வின்றி தூய்மைப்படுத்தி, சுற்றுப்புறத்தை மேம்படுத்தவும், கொசு உற்பத்தியை தடுக்கும் பணியினை மேற்கொள்ளும் பொருட்டும், 7 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ஆம்பிபியன் உபகரணம் ஆகிய 3 உபகரணங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக முதலமைச்சர் இன்று உபகரணங்களுக்கான சாவிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என். மகேஸ்வரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.