திமுக வெற்றியை தடுக்க சதி: தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

0
196

திமுக வெற்றியை தடுக்க சதி: தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து வேட்பாளர்களை மாற்றக்கோரி சில இடங்களில் தி.மு.க.வி.னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தி.மு.க. தொண்டர்களுக்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

திமுக என்ற பெட்டகத்திலுள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை எழில் கூட்டுபவை. அதில் 173 உடைகளை மட்டும் இந்த சட்டமன்ற தேர்தல் களத்திற்கு பயன்படுத்தியுள்ளேன்.

இன்னும் ஏராளமான, தரமான, பயன்தரத்தக்க உடைகள் நேர்காணலில் என்னை அலங்கரித்துள்ளன. இன்னும் பல களங்கள், வாய்ப்புகள் உள்ளதால் உரிய முறையில் அப்போது பயன்படுத்திக்கொள்வேன்.

விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க ஆசைதான். ஆசைகள் கடல்போல் இருந்தாலும் தொகுதிகளின் எண்ணிக்கை கையளவுதானே.

“உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை அறிந்திருப்பவர்கள் நீங்கள். அப்படிப் பிடிவாதம் பிடித்தால் – நெருக்கடி ஏற்படுத்தினால் அத்தகையோர் உடன்பிறப்புகள் எனும் உயர்ந்த தகுதியை பெருமளவு இழந்து விடுவார்கள். அவர்களது கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு கேள்விக்குள்ளாகிவிடும்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க தந்திரம், சதி, சூழ்ச்சிகளை செய்வர். அதிகார பலம் கொண்டவர்கள் திமுகவை எளிதாக வெற்றி பெற விடமாட்டார்கள். தேர்தலில் தந்திரங்கள், சதிகள், சூழ்ச்சிகளை முறியடிக்க திமுகவினரின் உழைப்பு, ஒத்துழைப்பு தேவை.

வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியை கருணாநிதி நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.