“தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

0
105

“தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையின் விவரம் வருமாறு:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உங்களால் வாக்களிக்கப்பட்டு – மாபெரும் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியானது சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டு ஊடகங்களைத் தாண்டி – தென் மாநில ஊடகங்கள் பலவும் பாராட்டும் ஆட்சியாக – வட மாநிலங்களும் பாராட்டும் ஆட்சியாக – திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இத்தகைய வாய்ப்பை நீங்கள் வழங்கிய காரணத்தால்தான் – இத்தகைய பெருமையையும் புகழையும் அடைய முடிந்தது. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை வட இந்திய ஊடகங்கள் – குறிப்பாக இந்தியா டுடே ஏடு எனக்கு வழங்கியது. இதனைத் தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பாராட்டாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை நான் அர்ப்பணித்துள்ளேன் என்பதை அகில இந்திய ஊடகம் ஒன்று அங்கீகரித்து இருக்கிறது என்ற அளவில் மகிழ்ச்சியோடு, அதே நேரத்தில் அடக்கத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.

‘நான் நம்பர் ஒன் என்பதை விட – தமிழ்நாடு நம்பர் ஒன் என்று பெயரெடுக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். அதுதான் என்னுடைய இலட்சியமும் இலக்கும் ஆகும். ஏதோ ஒரு துறையில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலுமே தமிழ்நாடு நம்பர் ஒன் ஆக வேண்டும். தொழில்துறையில் தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற சூழ்நிலை விரைவில் உருவாகப் போகிறது. சில நாட்களுக்கு முன்னால் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் வந்திருப்பதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய முதலீட்டாளர் மாநாடுதான் உண்மையான முதலீட்டாளர் மாநாடு என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு எழுதி இருக்கிறது.

தமிழ்நாட்டில் கழக ஆட்சி பொறுப்பேற்றதும் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை ஏதோ சும்மா ஒப்புக்குச் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல. கடந்த கால அதிமுக ஆட்சியில் இது போன்ற மாநாடுகளை நடத்தி அத்தனை இலட்சம் கோடி வந்தது – இத்தனை லட்சம் கோடி முதலீடு வந்தது என்று சும்மா கணக்கு காட்டினார்கள். அது போல இல்லாமல் உண்மையாகவே தமிழ்நாட்டில் முதலீடுகளை கழக அரசு ஈர்த்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதி உள்ளது.

‘ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்பதே மாதங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 610 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரப்பெற்றுள்ளதாகவும் அந்த நாளேடு செய்தி வெளியிட்டுப் பாராட்டு தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 70 விழுக்காட்டுக்கும் மேலான முதலீடுகளை ஒன்பதே மாதங்களில் பெற்றுள்ளதால் திமுக ஆட்சியின் முதலீட்டாளர் மாநாடே உண்மையான முதலீட்டாளர் மாநாடு என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. தொடர் முதலீடுகள் காரணமாக இந்தியாவிலேயே அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்து வரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக மேலும் பல நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்து ஆலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன என்றும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தமிழ்நாடு அரசு மிக விரைவில் எட்டும் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தச் செய்திதான் எங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

ஒரு நிறுவனம் முதலீடு செய்கிறது என்றால் – ஏதோ அது தனிப்பட்ட அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அல்ல. அதில் மாநிலத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. நிதி மூலதனம் பரவுகிறது. அந்த வட்டாரம் வளர்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக, முதலீடுகளை அதிகமாக ஈர்க்கிறோம் என்றால் அந்த மாநிலம் அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள். சட்டம் ஒழுங்கு சீராகவும், அமைதி தவழும் மாநிலமாகவும் இருந்தால்தான் அந்த மாநிலத்தில் தொழில் முதலீடுகள் அதிகம் வரும். அந்த வகையில் அமைதி தவழும் மாநிலமாக – சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் எனக்கு உண்மையான பெருமை.

இத்தகைய பெருமைமிகு நல்லாட்சியானது, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் முழுமையாக மலர வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் வாக்குகளைக் கேட்டு நிற்கிறேன். கோவை, சேலம், கடலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்து மக்களைச் சந்திக்கிறேன். நான் உங்களுக்கு அதிக விளக்கம் சொல்லத் தேவையில்லை!

நாடாளுமன்றத் தேர்தலிலும் – சட்டமன்றத் தேர்தலிலும் கழகத்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம். அதேபோன்ற வெற்றியை உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட மண் என்பது வீரம் விளைந்த மண்! நாடு காக்க, நாட்டின் விடுதலைக்காக உயிரையே தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் -கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் – எழுச்சிக்கவி பாரதியார் ஆகியோர் பிறந்த மண்!

* வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று கோட்டை அமைந்திருக்கிறது என்றால் அதனை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். கட்டபொம்மன் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர். அரசுப் பதிவேட்டில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரைப் பொறித்தவர் முதல்வர் கலைஞர். மாவீரர் கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் 1952-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதனை 1969-ஆம் ஆண்டு மீண்டும் தொடர்ந்து வழங்கச் செய்தவர் நமது தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

* கழக ஆட்சியில் 1968-ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடத்தப்பட்டபோது தலைநகர் சென்னையில் வைக்கப்பட்ட பத்துச் சிலைகளில் ஒன்று வ.உ. சிதம்பரனார் சிலை! கோவைச் சிறையில் இருந்தபோது செக்கு இழுக்க வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் வ.உ.சி. அந்த செக்கை நினைவுச்சின்னமாக ஆக்கியவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

1972-ஆம் ஆண்டு வ.உ.சி.யின் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் அளவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடியவர் முதல்வர் கலைஞர். அதே ஆண்டுதான் இந்திய நாடும் தனது 25-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இரண்டையும் இணைத்து தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாருக்குச் சிலை அமைத்தவர் முதல்வர் கலைஞர்.

* எட்டையபுரத்தில் பாரதியார் வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவுச்சின்னம் ஆக்கியவர் முதல்வர் கலைஞர். 12.5.1973 அன்று அன்றைய அமைச்சர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் நடந்த விழாவில் திறந்து வைத்தவர் முதல்வர் கலைஞர்.

* இப்போது கழக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும்- வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளையும் – பாரதியாரின் நினைவு நூற்றாண்டையும் சிறப்பிக்கும் வகையில் ஏராளமான அறிவிப்புகளைச் செய்தோம்.

வீரமங்கை வேலுநாச்சியாரையும், வ.உ,.சி.யையும் பாரதியையும் டெல்லி குடியரசு தின விழா ஊர்தி அணிவகுப்பில் அனுமதிக்க மறுத்தார்கள். அதனால் என்ன? எங்கள் தமிழ்நாட்டு வீதிகள்தோறும் அவர்கள் வலம் வரட்டும் என்று அந்த அலங்கார ஊர்தியை விடுதலைப் போராட்ட எழுச்சியோடு அனுப்பிய இனமான ஆட்சிதான் நமது கழக ஆட்சி. அந்த அலங்கார ஊர்தி உங்கள் மாவட்டத்துக்கு வந்தபோதும் நீங்கள் அளித்த மகத்தான வரவேற்பை ஊடகங்களில் நானும் பார்த்தேன். இப்படி தூத்துக்குடி மண் உருவாக்கிய எழுச்சியைத் தமிழ்நாடு மாநிலம் முழுக்க உருவாக்கிய ஆட்சிதான் கழக ஆட்சி என்பதை மறந்து விடாதீர்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லா மூலையிலும் கழகத்தின் பெயர் சொல்லும் சாதனைச் சின்னங்களைப் படைத்த ஆட்சிதான் கழக ஆட்சி.

* தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அமைத்தது கழக அரசுதான்!

*மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தனியாக மீன்வளத்துறையை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர்தான்!

*மீனவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் முதலமைச்சர் கலைஞர்! மீனவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை 1975-ஆம் ஆண்டு தொடங்கி 5 ஆயிரம் வீடுகளுக்கான அடித்தளம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்! கழக ஆட்சியில்தான் தூத்துக்குடியில் கடல்சார் பயிற்சிப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் கடல்சார் பயிற்சிப்பள்ளி அமைக்கப்பட்து.

*நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் தூத்துக்குடி, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது! 33 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பக்கிள் ஓடையானது தடுப்புச் சுவர்களுடன் கடற்கரையில் இருந்து 3-ஆம் மைல் வரை சீரமைக்கப்பட்டுப் புதிதாக அமைக்கப்பட்டது.

*ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்கப்பட்டதும் கழக ஆட்சியில்தான்! திரேஸ்புரம் மற்றும் வீரபாண்டியன்பட்டிணம் கடற்கரைப் பகுதிகளில் தூண்டில் வளைவுகள் கட்டப்பட்டன. மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை 17 கோடி ரூபாய் மதிப்பில் 550 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டது.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையை அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தியது திமுக ஆட்சிதான். சீவலப்பேரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை உயர்மட்டப் பாலமாக மாற்றிக் கொடுத்தது திமுக ஆட்சிதான். -இப்படி தூத்துக்குடி மாவட்டத்துக்குக் கழக ஆட்சியில் செய்து தரப்பட்ட பணிகளை நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். அந்தளவுக்குப் பணிகளைச் செய்து காட்டி இருக்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்றால் எதைச் சொல்வது? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொலை செய்ததைச் சொல்வதா? சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற தந்தையையும் மகனையும் அடித்தே கொன்றதைச் சொல்லவா? என்னைப் பார்த்து சர்வாதிகாரி என்கிறார் பழனிசாமி. மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க அமைதியாக ஊர்வலம் வந்த கூட்டத்தைக் கலைத்து –

* தூத்துக்குடி ரஞ்சித்குமார், லூர்தம்மாள்புரம் கிளாஸ்டன், சிலோன் காலனி கந்தையா, ஓட்டப்பிடாரம் தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், தூத்துக்குடி ஸ்னோலின், தூத்துக்குடி அந்தோணி செல்வராஜ், தாமோதரன் நகர் மணிராஜ், தூத்துக்குடி கார்த்திக், திரேஸ்புரம் ஜான்சி, தூத்துக்குடி செல்வசேகர், தாளமுத்துநகர் காளியப்பன், உசிலம்பட்டி ஜெயராமன் – உள்ளிட்ட 13 பேரைக் கொலை செய்தவரைச் சர்வாதிகாரி என்று சொல்லாமல் என்ன சொல்வது?

ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது மன்னன் நீரோ எதையோ வாசித்தானாமே – மக்களுக்குச் சாப்பிட ரொட்டி கிடைக்கவில்லை என்ற போது, கேக் வாங்கிச் சாப்பிடட்டும் என்று ஒரு ராணி சொன்னாரே – அதைப் போல, ‘துப்பாக்கிச்சூடு குறித்து நான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன்’ என்று சொன்னவர் சர்வாதிகாரி அல்லவா?

இந்த ஆட்சி மலர்ந்த இந்த எட்டு மாத காலத்தில் இதுவரை 5 அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்த அரசு நடத்தி இருக்கிறது. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்? சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள்தான் அதிக நேரம் பேசுகிறார்கள். பேச அனுமதிக்கப்படுகிறார்கள். சட்டமன்றத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கு முழுமையாக அவர்களுக்கு நேரம் தரப்படுகிறது. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்?

என்னைச் சர்வாதிகாரி என்று சொல்லிய பழனிசாமி – நான் பொம்மை என்றும் சொல்லி இருக்கிறார். இப்படி வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கிறார் அவர். மக்கள் கொடுத்த தோல்வியில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தேர்தல் முடிந்து எட்டு மாதம்தான் ஆகி இருக்கிறது. ஆட்சி பறிபோயிருக்கிறது அவருக்கு. இந்த நிலையில் நேற்றைய தினம் பேசிய பழனிசாமி, ‘அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது’ என்று பேசி இருக்கிறார். அதுதான் தோற்றுவிட்டீர்களே! அதன்பிறகும் யாராலும் தோற்கடிக்கமுடியாது என்றால் என்ன அர்த்தம்? ஆட்சி மாறிவிட்டது என்பதையே உணராதவராக இருக்கிறார் பழனிசாமி.

அதிமுக ஆட்சியின்போது பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார் ஸ்டாலின், இப்போது 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று பேசி இருக்கிறார். நான் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியாகத்தான் கொடுக்கச் சொன்னேன். திமுக ஆட்சி மலர்ந்த உடனேயே 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டோம். ஆனாலும் திசை திருப்பும் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

“தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, 110-ன் கீழான அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்த 8 மாதங்களில் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் – 1,238 அறிவிப்புகளுக்கு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு விட்டன. தூத்துக்குடியில் நடக்கும் கூட்டம் என்பதால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்த மாவட்டத்துக்கு செய்து தரப்பட்ட சில பணிகளை மட்டும் சொல்கிறேன்.

* தூத்துக்குடியில் 9 ஏக்கர் பரப்பளவில் சுமார் 29 கோடி ரூபாய் மதிப்புள்ள அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு அரசாணை மற்றும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ. 25 கோடி ரூபாய் மதிப்பில் படகுகள் நிறுத்துமிடம் மற்றும் அகலப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

*தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரம் பகுதியில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்த 4 பேருக்கும் அவர்கள் தகுதிக்குரிய அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் கலைஞர் நகர், ராஜீவ்நகர், மசூதி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.

*தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்கா அருகே தெற்கு பகுதி மீன்பிடி படகு நிறுத்தம் அருகே சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ‘மினி மாஸ்ட் விளக்கு’ அமைக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகரம் சிதம்பரநகர் ஆட்டோ காலனியில் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் ஐம்பதாண்டுகள் பழமையான பள்ளிக்கு சிஎஸ்ஆர் நிதி ரூ. 17.4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது.

*தூத்துக்குடி மாநகராட்சி கோவில்பிள்ளை விளையில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமையவிருக்கும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் தொழில்துறை மற்றும் மக்களின் நலனுக்காக 60 MLD அளவுகள் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

*தூத்துக்குடி மாநகராட்சி மேல அலங்காரத்தட்டு பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு கழுகுமலையில் சுற்றுலாத்துறையின் சார்பாக நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலை பேரூராட்சியில் இந்திரப்பிரஸ்டம் குளம் தூர்வாரப்பட்டது. கழுகுமலையில் சிறுவர் பூங்கா மற்றும் பெரியவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டது.

*புதூர் பேரூராட்சியில் வாழ்க்குளம் தூர்வாரப்பட்டது. புதூர் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து RI அலுவலகம் புதிதாகத் திறக்கப்பட்டது. விளாத்திகுளம் பேரூராட்சியில் CSR நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

விளாத்திகுளம் பேரூராட்சியில் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. பெருங்குளம் பேரூராட்சியில் 15 லட்ச ரூபாய் மதிப்பில் பண்டாரவிளையில் சிறுவர் பூங்கா பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

*திருவைகுண்டத்தில் வாரச்சந்தை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவைகுண்டம் பேரூராட்சியில் 15 லட்சம் மதிப்புள்ள சிறுவர் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு 98 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

*திருச்செந்தூர் பேருராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் புதியதாக அன்னதான அரங்கம் அமைக்கப்பட்டு அங்கு வரும் மக்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க அன்னதான அரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையாக இருந்தாலும் எந்தத் துறையாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். அனைத்துத் துறையும் தமிழ்நாடு அரசின் துறைகள்தான். தமிழ்நாட்டு மக்களை மேம்படுத்தும் துறைகள்தான்.

அதில் எந்தப் பாகுபாடும் காட்டாமல் செயல்பட்டு வருகிறோம். எங்களைக் குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்காதவர்கள் இந்து அறநிலையத் துறையைப் பற்றி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி வருகிறார்கள். இவற்றை பொதுமக்கள், குறிப்பாக ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் நிச்சயமாக ஏற்கமாட்டார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பணி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மதத்தை வைத்தோ – சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை. சில கட்சிகள் வேண்டுமானால் தங்களது தோல்வியை மறைப்பதற்காக இதுபோல ஏதாவது ஒரு விவகாரத்தில் மறைந்து கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். எங்களுக்குச் செய்வதற்கு உருப்படியான வேறு பணிகள் இருக்கின்றன.

எட்டே மாதத்தில் நாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு செய்த பணிகளில் சிலவற்றை மட்டும்தான் சற்று முன்பு பட்டியலாக வாசித்தேன். அதுவே நீண்ட பட்டியலாக அமைந்துவிட்டது. ஆனால் இது எதையும் பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை என்பார்கள். அதைப் போல இந்த இரு யோக்கியர்களைப் பற்றியும் நாட்டுக்குத் தெரியும். இவர்கள் ஆட்சி நடத்திய முறையைப் பற்றியும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ்நாட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு – கிராமப்புற மாணவர்களுக்கு – அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு – நீட் என்ற நுழைவுத்தேர்வு அவர்களது மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் என்பதைத் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறோம்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் வாதாடியும் போராடியும் வருகிறார்கள்.

இந்த நீட் தேர்வு தொடர்பாக ஒரு குழுவை அமைத்து – அந்தக் குழு ஒரு லட்சம் பேர் வரைக்கும் கருத்துக்களை வாங்கி – அரசுக்கு அறிக்கையாகக் கொடுத்து – அதனைத் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு பரிசீலித்து – சட்டமுன் வடிவைத் தயாரித்து – அதனைச் சட்டமன்றத்தில் வைத்து – ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை – வெறும் நியமனப் பதவியில் உள்ள ஆளுநர் ஒருவர் நிராகரிக்கிறார் என்றால் அவருக்கு அந்த தைரியத்தைக் கொடுத்தது யார்? யாருடைய பிரதிநிதியாக அவர் இருக்கிறார்? யார் ஆட்டுவிப்பதால் அவர் ஆடுகிறார்? கோடிக்கணக்கான மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டத்தை நியமன ஆளுநர் நிராகரிக்கிறார் என்றால் இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறதா? இதனைக் கேள்வி கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா? இந்தப் பதவியில் அலங்காரப் பதுமைகளாக இருப்பதற்காக ஒன்றும் நாங்கள் வரவில்லை. பேரறிஞர் அண்ணாவோ, தமிழினத் தலைவர் கலைஞரோ எங்களை அப்படி உருவாக்கவில்லை. அனைத்தையும் கேள்வி கேள் என்று கற்றுக் கொடுத்த பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் மண், இந்த மண். ஒரு ஆளுநரைக் கேள்வி கேட்கக் கூடாதா? அனிதா உள்ளிட்ட பல மாணவக் கண்மணிகள் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டார்களே. கல்விச் சாலைகளில் மேன்மையை அடைந்து – வாழ்க்கைப் பாதையை நோக்கி முன்னேறிப் போகும் வயதில் – பிணவறைக் கூடங்களில் அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த காட்சியைப் பார்த்த பிறகும் இந்த நாட்டில் சிலருக்கு நீட் தேர்வை ஆதரிக்க எப்படி மனம் வருகிறது?

அதனால்தான் அது தேர்வு அல்ல, பலிபீடம் என்று நான் சொன்னேன். ஆளுநராக இருந்தாலும் – ஒன்றியத்தை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும் – தமிழ்நாட்டு மக்களின் கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல்காந்தி அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அவருக்குத் தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ராகுல்காந்தி அவர்கள் சொன்னார்கள். இதற்குப் பதில் சொன்ன பிரதமர் மோடி அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் தேசிய உணர்வு கொண்டவர்கள் என்றும் மறைந்த முப்படைத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தியது தமிழ்நாடு என்றும் சொல்லி இருக்கிறார்கள். பாஜகவை விமர்சிப்பது என்பதை இந்தியாவையே விமர்சிப்பதாக அவரே திசை திருப்பிக் கொள்கிறார்.

ஆனால் நாட்டுக்காகப் போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் உள்ளிட்ட விடுதலை வீரர்களின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்திகளைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அனுமதிக்க முடியாது என்று சொன்னது யார்? குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளைவிடத் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது? தன்னுடைய பேச்சில் பாரதியார் அவர்களின் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர் மோடி அவர்களுக்குப் பாரதியாரின் திருவுருவச் சிலையைக் குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுப்பில் அனுமதிப்பதில் என்ன பிரச்சினை? நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல. தமிழர்களின் நாட்டுப்பற்றுக்குப் பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது. தேசம் என்று அவர்கள் சொல்கிறார்களே… எது தேசம் என்பதில்தான் அவர்களுக்கும் நமக்குமான பிரச்சினை. வெறும் நிலப்பரப்புதான் தேசம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை, இந்த மண்ணில் வாழும் மக்கள்தான் தேசம் என்று நாம் சொல்கிறோம். இந்த மண்ணையும் மக்களையும் புரிந்துகொள்ளாதவர்களாக – மதிக்காதவர்களாக – எதிராகச் செயல்படுகிறவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு இனமும், மொழியும் கலையும் பண்பாடும் கொண்டதுதான் இந்தியத் துணைக்கண்டம் என்கிறோம் நாம். இந்த நாட்டை, பல்வேறு அழகிய மலர்களைக் கொண்ட பூங்கொத்தாக நாங்கள் பார்க்கிறோம். அதனைப் பாதுக்காக்கவே போராடுகிறோம்.

நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிராக வெளிநடப்பு செய்ததன் மூலமாக, பாஜக தமிழ்நாட்டில் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய ஜனநாயக விரோத, மக்கள் விரோத, தமிழர் விரோத, தமிழ்நாடு விரோத சக்திகள் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்லி – வளமான தமிழகத்தை உருவாக்கத் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் – ஆதரிப்பீர் உதயசூரியன்! வாக்களிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு! நன்றி வணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.