தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்

0
132

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்

சென்னை:

சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 86.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 58.82 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

சென்னையை பொருத்த வரை 5 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ள வில்லை. அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை விரைந்து போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. உலக அளவில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.

கொரோனாவின் உருமாற்ற வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து இந்த அலையில் வேகமாக தாக்குகிறது. உலக அளவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரேநாள் தொற்று 29 லட்சத்து 4 ஆயிரமாக இருந்தது. அதுதான் உச்ச பட்சமாகவும் இருந்தது.

ஆனால் இந்த 3-வது அலையில் ஒரேநாளில் உலகம் முழுவதும் 18 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21-ந்தேதி தமிழகத்தில் ஒரேநாளில் தொற்று 36 ஆயிரத்து 84 ஆக இருந்தது. 3-வது அலையில் அந்த அளவுக்கு போகுமா? என்ற அச்சமும் உள்ளது. ஆனால் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவர்களுக்கு 3 அல்லது 4 நாட்களில் நெகட்டிவ் வந்துவிடுகிறது.

முதல் 3 நாள் முடிந்ததும், டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அப்போதே நெகட்டிவ் வந்து விடுகிறது. இருந்தாலும் 5 நாட்கள் வரை அவர்களை ஆஸ்பத்திரியில் தங்க வைத்து மீண்டும் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அப்போதும் நெகட்டிவ் வருவதால் அதன்பிறகு வீடுகளுக்கு அனுப்பி விடுகிறோம்.

எனவே இனி ஒமைக்ரான் தொற்று கண்டவர்கள் 5 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் போதும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 26 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறையும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 46 சதவீதம் பேர் முதல் தவணையும், 12 சதவீதம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். அவர்களுக்கும் தடுப்பூசியை விரைந்து செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

3-வது அலை தொடங்கி விட்டதால் அதை எதிர் கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

சென்னையில் ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொடுங்கையூர் ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு முகாம் 1000 படுக்கைகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

வீட்டுவாரிய குடியிருப்பில் 2 ஆயிரம் படுக்கைகளுடன் முகாம் தயாராகிறது. இதுதவிர கல்லூரி விடுதிகளை காலிசெய்து கூடுதலான படுக்கைகளுடன் முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக மக்கள் தேவையில்லாமல் பதட்டமோ, அச்சமோ அடைய வேண்டாம். தொற்று பரவாமலும், அணுகாமலும் இருக்க தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

60 வயதை கடந்தவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால் அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். இந்த திட்டத்தையும் வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

ஏற்கனவே 2 தவணையும், கோவேக்சின் போட்டவர்களுக்கு கோவேக்சின் தான் போட வேண்டுமா? அல்லது வேறு ஊசி போடலாமா? அதேபோல் கோவிஷீல்டு போட்டவர்களுக்கும் அதே ஊசியை தான் போட வேண்டுமா? என்பது போன்ற விவரங்கள் ஒன்றிண்டு நாட்களில் ஒன்றிய அரசிடம் இருந்து வரும். அதன் பிறகு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.