தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள்
PIB Chennai: மத்திய அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 5
ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள அவர் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கலசபாடி கிராமத்தில், உள்ளூர் தேனீ வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து 20 தேனீவளர்ப்பு பயிற்சியாளர்களுக்கு, 200 தேனீ வளர்ப்புப் பெட்டிகள் உள்ளிட்ட தேனீவளர்ப்புக்கானப் பொருட்களை வழங்கினார். அவர்கள் மத்தியில் பேசிய திரு. மனோஜ் குமார், மத்திய அரசின் இனிப்பு புரட்சி எனப்படும் தேன் இயக்கம் சார்பில், தேனீ வளர்ப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
கடந்த 2017ம் ஆண்டு முதல், இதுவரை, தமிழகத்தில் 550 தேனீ வளர்ப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, முறையான பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு 5 ஆயிரத்து 500 தேனீ பெட்டிகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தேனீ வளர்ப்பு என்பது ஊரக மற்றும் கிராமப்புற மக்களுக்கு உகந்த வருமானம் ஈட்டும் தொழில் என்பதால், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், தேனீயைப் பதப்படுத்தும் வசதி காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் பயிற்சி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் தேனீவளர்ப்பாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேனை, காதி இந்தியா திட்டத்தின் மூலம் சந்தைப்படுத்தவும் ஆணையம் உதவுவதாகவும் திரு.மனோஜ் குமார் கூறினார்.
இந்த கலந்துரையாடலின்போது, ஆணையத்தின் மண்டல தலைமை செயல் அதிகாரி மற்றும் மாநில இயக்குநரும் உடனிருந்தனர்.
முன்னதாக, சேலம் மற்றும் கோயம்புத்தூரில் கைத்தறி நெசவாளர்களை சந்தித்து பேசிய மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார், நெசவாளர்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் மானியத் தொகை நேரடி பணப் பரிமாற்ற முறையில் வரவு வைக்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.