ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி: ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்

0
317

ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி: ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்

சென்னை: சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஜெயராஜின் மகள் பெர்சிஸ்க்கு இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24-ந்தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கடந்த மாதம் 26-ந்தேதி வழங்கினார். அதனைத்தொடர்ந்து, குடும்பத்தின் வாரிசுதாரரான பெர்சிஸ்க்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், தலைமைச்செயலாளர் க.சண்முகம், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த ஜெயராஜ் மகள் பெர்சிஸ்க்கு வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் அவர் பணிபுரிவார்.

வேலைக்கான அரசாணையை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு செல்லும் வழியில், திருச்சியில் பெர்சிஸ் நேற்று மாலை ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தந்தைக்கும், தம்பிக்கும் ஏற்பட்ட கொடூரமான நிகழ்வு வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. சம்பவம் நடந்ததும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன்படி, எம்.சி.ஏ. படித்துள்ள எனக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை வழங்கி இருக்கிறார்.

ஆணையை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம் முதல்-அமைச்சரை நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நான், எனது கணவருடன் விஜயவாடாவில் வசித்து வந்தேன். எங்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் இருவர் இரட்டை குழந்தைகள். எனது கணவரின் சொந்த ஊர் புளியங்குடி. அவரது பெற்றோர், ஊரில் தான் இருக்கிறார்கள். எனவே, அங்கிருந்து நான் பணிபுரிய உள்ள இடத்திற்கு எளிதாக செல்ல முடியும்.

எனது தந்தை, தம்பி கொலை தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியாக உள்ளது. நீதித்துறை மீது நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்தால்தான் சற்று ஆறுதலாக இருக்கும். முதல்-அமைச்சரை சந்தித்த போது நான் அவரிடம் வேறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, உதவியும் கேட்கவில்லை. இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதற்கு முதல்-அமைச்சர் அரசு நடுநிலையோடு வழக்கை விசாரித்து உங்களுக்கான நீதி வழங்கப்படும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

சம்பவம் நடந்த நாளில் இருந்தே எங்களுக்காக குரல் கொடுத்த நீதித்துறை, கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு, அனைத்து கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகள், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. போலீசார், வியாபார சங்கங்கள், அனைத்து பொதுமக்கள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, அவரது கணவர் அகஸ்டினும் உடன் இருந்தார். பேட்டி முடிந்ததும் அவர்கள் சாத்தான்குளத்திற்கு புறப்பட்டு சென்றனர்.