செமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அண்ணா பல்கலை

0
272

செமஸ்டர் கட்டணம் செலுத்த தவறினால் PhD படிப்பிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அண்ணா பல்கலை

தனியார் பொறியியல் கல்லூரிகள் 4 மாத காலமாக ஊதியம் வழங்காததால் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் கல்லூரி பேராசிரியர்கள் செமஸ்டர் கட்டணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை மாதத்திற்கான செமஸ்டர் கட்டணத்தை அபராதமின்றி நாளைக்குள் (19-8-2020) செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் 1000 ரூபாய் அபராதத்துடன் வருகின்ற 26-ம் தேதியும், இறுதி வாய்ப்பாக செப்டம்பர் 2-ம் தேதி 3,500 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

செமஸ்டர் கட்டணத்தை குறிப்பிட்ட தேதிகளில் செலுத்த தவறினால் PhD படிப்பில் பதிவு செய்துள்ள நபர்களின் பதிவு நீக்கப்படும் என்பதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவாகும். இந்த அறிவிப்பு கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக PhD பயின்று வருபவர்கள், தாங்கள் படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் கொரோனோ பாதிப்பால் கடந்த 4 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போதைய சூழலில் 10,000 முதல் 15,000 ரூபாய் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருப்பதால், செமஸ்டர் கட்டணத்தை தற்போதைக்கு வசூலிக்கக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .