சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (EIACP) மையங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கிளப்புகள் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட வெகுஜன அணிதிரட்டல் இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (LiFE) பற்றிய செய்திகளை பரப்புகின்றன.
புதுதில்லி,
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEF&CC), 2023 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை மிஷன் லைஃப் என்ற நோக்கத்துடன் கொண்டாடுகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (LIFE) என்ற கருத்து, தனிநபர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்ய ஊக்குவிப்பதன் மூலம் நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் வளங்களை பொறுப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது.
இந்தியா முழுவதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை பற்றிய பரவலான விழிப்புணர்வை, சிந்தனையை ஏற்படுத்த மிஷன் லைஃப் குறித்த ஒரு மாத காலப் பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது.
“முழு அரசாங்கம்” மற்றும் “முழு சமூகம்” என்ற அணுகுமுறையைப் பின்பற்றி, மிஷன் லைஃப் செய்தியைப் பரப்புவதற்கு, மத்திய அமைச்சகங்கள்/ துறைகள், மாநில/ யூனியன் பிரதேச அரசுகள்/ நிர்வாகங்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை அமைச்சகம் அணிதிரட்டியுள்ளது. நடந்துகொண்டிருக்கும் வெகுஜன பிரச்சாரமானது, இந்தியா முழுவதும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஜூன் 5, 2023 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுவதற்கு வழிவகுக்கும்.
சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம்: சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (EIACP) என்பது மிஷன் லைஃப் உடன் இணைந்து செயல்படுத்தப்படும் மத்தியத் துறை துணைத் திட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய வெகுஜன அணிதிரட்டல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 60 EIACP மையங்கள் தனிநபர்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 2023 மே மாதம் முழுவதும், EIACP மையங்களால் இந்தியா முழுவதும் செயல் மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (LIFE) தொடர்பான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் 89,000 க்கும் மேற்பட்ட தனி நபர்களை சுற்றுச்சூழலுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் பங்கேற்க வெற்றிகரமாக அணிதிரட்டியுள்ளன.