கூட்டணி கட்சிகளுடன் 27ல் ஸ்டாலின் ஆலோசனை!

0
222

கூட்டணி கட்சிகளுடன் 27ல் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை : கொரோனா பேரிடர் கால மோசடிகள் குறித்து, கவர்னரிடம் புகார் மனு அளிக்கலாமா; நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்க, வரும், 27ம் தேதி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, சமீபத்தில், தமிழகம் முழுதும், தி.மு.க.,வினர் தங்களின் வீடுகளின் முன், கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது, ஊரடங்கு காலம் என்பதால், பொது இடங்களில், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த முடியாது. ஆனால், தங்கள் வீடுகள், கட்சி அலுவலகங்கள் முன், சமூக விலகலை கடைப்பிடித்து, குறைந்த எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த, போலீஸ் தரப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் குறைக்க வலியுறுத்தி, தி.மு.க., நடத்திய போராட்டத்திற்கு, அரசு செவி சாய்க்கவில்லை. அடுத்த கட்டமாக, கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் அ.தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகள் குறித்த பிரச்னையை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இப்பிரச்னையை, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்ள, வரும், 27ம் தேதி, கூட்டணி கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., தலைமை, நேற்று அறிவித்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: மின் கட்டணம் உயர்வை கண்டித்து, தி.மு.க., தன்னிச்சையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதில், கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. தங்களை அழைக்கவில்லை என்ற ஆதங்கம், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு இருந்தது.

ஆன்மிக அரசியலுக்கு, நடிகர் ரஜினி ஆயத்தமாகியுள்ள நிலையில், கறுப்பர் கூட்டம் விவகாரத்தால், தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்னைகளை எப்படி முறியடிப்பது என்பது குறித்து, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க, ஸ்டாலின் விரும்புகிறார்.

கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டது மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமா அல்லது கவர்னரிடம் புகார் கொடுக்கலாமா அல்லது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தலாமா என்பது குறித்து, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.