கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

0
185

கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நீடிப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா். மேலும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வழிகள் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என கூறியிருந்தாா்.

இந்தநிலையில் கல்வித் தொலைக்காட்சி மூலமாக புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்கள் சார்ந்த காணொலிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமை (நாளை) காலை தொடங்கி வைக்கவுள்ளார். இதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்களையும் அவா் வழங்கவுள்ளாா்.