‘என்னை வர வேண்டாம் என்று சொன்னார்.. அதை மீறி நான் வந்திருக்கிறேன்’ : முதலமைச்சர் உணர்ச்சிமிகு உரை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.02.2023) சென்னையில் ஹோல்டு மெடிக்கல் அகாடமி ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற கார்டியோபேஸ் 2023 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிகழ்ச்சி நிரலை பொறுத்தவரைக்கும், நான் பேசுவதாக இல்லை. ஆனால், நான் டாக்டர் செங்கோட்டுவேலு அவர்களிடத்திலே சொல்லி நான் எப்படியும் இரண்டு நிமிடமாவது பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்து, என்னுடைய அந்த கோரிக்கையை அவரும் ஏற்றுக்கொண்டு, இங்கே பேச அனுமதித்ததற்காக முதலில் அவருக்கும், இங்கு வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நான் முதலில் என்னுடைய நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, நம்முடைய பேராசிரியர் டாக்டர் தணிகாசலம் அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் நம்முடைய டாக்டர் செங்கோட்டுவேலு அவர்கள் என்னிடத்திலே குறிப்பிட்டுச் சொல்லி, நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவீர்களா? என்று ஒரு சந்தேகத்தோடு கேள்வியை என்னிடத்திலே கேட்டார்கள்.
நான் உடனடியாக சொன்னேன், நீங்கள் சந்தேகப்பட வேண்டாம், சந்தேகத்தோடு கேட்க வேண்டாம், நிச்சயம் வருவேன், உறுதியாக வருவேன். எந்த மாதம், எந்த தேதி, எந்த நேரம் என்பதை மாத்திரம் என்னிடத்தில் சொல்லுங்கள். நான் தவறாமல் வந்து விடுவேன் என்று சொல்லி அவரிடத்தில் நான் சொன்னேன்.
அதற்கு பிறகு டாக்டர் தணிகாசலம் மூலமாக எனக்கு ஒரு செய்தி வந்தது. நீங்கள் வரவேண்டாம். உங்களுக்கு பல பணிகள் இருக்கிறது. இதற்காக நீங்கள் நேரத்தை செலவழிக்க கூடாது என்பது என் விருப்பம், நீங்கள் வர வேண்டாம் என்று சொன்னார். அவர் சொன்னதை நான் எப்பொழுதும் தட்டியது கிடையாது. மருத்துவ முறையில், அவர் சொல்லக்கூடியதாக இருந்தாலும் சரி, சில நேரங்களில் நாட்டு நடப்புகளை பற்றி, அரசியல் சூழ்நிலை பற்றியெல்லாம் கூட அவர் என்னிடத்திலே விவாதிப்பார்.
அப்பொழுதும் அவர் என்ன சொன்னாலும், அதை அப்படியே தட்டாமல் ஏற்றுக் கொள்ளக் கூடியவன் நான். ஆனால், இந்த முறைதான், நீங்கள் வர வேண்டாம் என்று சொல்லி, நான் வந்திருக்கிறேன் என்று சொன்னால், அதை அவர் சொன்னதை தட்டி இருக்கிறேன். அதை மீறி நான் வந்திருக்கிறேன். அதுதான் உண்மை. எதற்காக என்று சொன்னால், வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு கிடைக்கிறது.
அந்த விருதை நான் அவருக்கு பொன்னாடை போர்த்தி, அதற்குப்பிறகு, விருதை அவரது கையில் வழங்கிய நேரத்தில், நான் அவரிடத்திலே சொன்னேன், உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்கிறது. இந்த விருதை உங்களுக்கு கொடுப்பதன் மூலமாக வாழ்நாளில் மறக்க முடியாத, ஒரு நினைவலைகளாக என்னுடைய உள்ளத்தில் இது பதிந்திருக்கிறது என்று நான் அவரிடத்திலே சொன்னேன். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
அவரிடத்திலே, மருத்துவ ரீதியாகவும், பல்வேறு நாட்டு நடப்புகளை பற்றியும் அவரிடத்திலே விவாதிக்கிறபோது, எதையும் நிதானமாக, யோசித்து, சிந்தித்து, அழுத்தமாக, ஆணித்தரமாக எடுத்துச் சொல்லக் கூடியவர். அவருடைய அனுபவம் அப்படி. பல நேரங்களில் அவரே குறிப்பிட்டுச் சொன்னார், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், அவருக்கும் இருந்த நட்பு என்பது சாதாரண நட்பல்ல, மருத்துவ ரீதியாக ஏதாவது விவாதிக்க வேண்டும் என்று சொன்னால், உடனே எஸ்.டி-யை கூப்பிடு என்றுதான் சொல்லுவார்.
எஸ்.டி-யிடத்தில் கேட்டீர்களா? என்று தான் கேட்பார். அந்த அளவிற்கு ஒரு நம்பிக்கைகுரியவராக இருந்தவர் நம்முடைய பேராசிரியர் தணிகாசலம் அவர்கள். இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதையே வரவேற்புரை ஆற்றுகிற போது செங்கோட்டுவேல் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். நாங்கள் பெரிய பாக்கியமாக கருதுகிறோம். பல்வேறு சிரமங்களுக்கிடையில் வந்திருக்கிறீர்கள், என்றெல்லாம் குறிப்பிட்டு சொன்னார். எந்த சிரமமும் கிடையாது. இதுதான் எனக்கு சந்தோஷம், இதுதான் எனக்கு மகிழ்ச்சி, இதுதான் எனக்கு பூரிப்பு.
இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு, எவ்வளவோ நிகழ்ச்சிகளுக்கு சென்று கொண்டிருந்தாலும், அந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் செல்லுகிற போது, எந்த அளவிற்கு எனக்கு உள்ளத்தில் ஒரு துடிப்பு அல்லது ஒரு டென்ஷன் எல்லாம் இருக்குமோ, அந்த டென்ஷனெல்லாம் குறையக் கூடிய வகையில் தான் இந்த நிகழ்ச்சி அமைந்து கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, நான் பல நேரங்களில், டாக்டர் தணிகாசலம் அவர்களை அடையாளம் காட்டுகிறபோது, அவர்தான் எனக்கு காட்பாதர் என்று கூட நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.
அவரே பேசுகிறபோது சொன்னார். சுறுசுறுப்போடு, சூரியன் சுற்றி வருவதுபோல, சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கிறார், உழைத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் என்னைப் பெருமைப்படுத்தி, அவருக்கு இருக்கக்கூடிய அந்த ஆசையின் காரணமாக, அந்த உணர்வின் காரணமாக எடுத்துச் சொன்னார்.
இன்றைக்கு நான் சுற்றி சுழன்று, சுறுசுறுப்பாக பணியாற்றுகிறேன் என்று சொன்னால், அது உங்களுடைய அறிவுரை தான், உங்களுடைய மருத்துவத் துறை தான், என்னை இந்த அளவுக்கு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, வாழ்நாள் சாதனையாளர் என்கிற அந்த விருதினை பெற்றிருக்கக்கூடிய நம்முடைய பெருமதிப்பிற்குரிய டாக்டர் தணிகாசலம் அவர்களை உங்களோடு சேர்ந்து, உள்ளபடியே சொல்லுகிறேன் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்திருந்தால் எப்படி மகிழ்ச்சியோடு வாழ்த்தியிருப்பாரோ, அதேபோல், அவர் வழி நின்று நானும் அவரை வாழ்த்தி, என் உரையை நிறைவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.