ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
சென்னை: வரும் ஜூலை 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் நிலையில், அதை நீட்டிப்பது அல்லது கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 25) மட்டும் 6,988 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூல 31 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படாமல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 29 ல் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் முதல்வர் இ.பி.எஸ்., வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது மேலும் தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்தும், ஆகஸ்ட் மாதத்திலும் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.