அணு சக்தி தொழில் வளாகத்தில் கதிரியக்க அவசர நிலை ஒத்திகை…

0
99

அணு சக்தி தொழில் வளாகத்தில் கதிரியக்க அவசர நிலை ஒத்திகை…

இந்திய அணுசக்தி துறையின் கல்பாக்கம் வளாகத்தில், சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), கல்பாக்கம் அணு மறுசுழற்சி முன்மாதிரி அதிவேக ஈனுலை (PFBR) (அணு மின் திட்டம்) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மைய (BARCF) பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த வளாகத்தில் அவசரகால தயார் நிலை திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் வளாக அவசர நிலை ஒத்திகை, நேற்று (21.10.2019) நடத்தப்பட்டது.

பல அடுக்கு பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய சென்னை அணுமின் நிலைய அணு உலையில், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகமிகக் குறைவு என்றாலும், நிலையத்தின் அவசர நிலை தயார்நிலை செயல்பாட்டை சோதிப்பதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.

கல்பாக்கம் வளாக அவசர நிலை நிர்வாகக்குழுவின் தலைவரான, சென்னை அணு மின் நிலைய இயக்குனர் திரு. எம். ஸ்ரீநிவாஸ் இந்த ஒத்திகையை முன்நின்று நடத்தினார். இந்த ஒத்திகை எந்தவித முன் அறிவிப்பின்றி திடீரென நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒத்திகையின் போது, கீழ்கண்ட ஒத்திகைகள் நிகழ்த்தப்பட்டன:

  • நிலைய ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் இருக்க செய்தல்.
  • காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சையளித்தல்
  • இனிப்பு மிட்டாய் வழங்குதல் (அயோடின் மாத்திரைகளுக்கான ஒத்திகை).
  • அத்தியாவசிய ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களை வளாகத்தில் இருந்து வெளியேற்றி நகரியத்தில் சேர்த்தல்.
  • கதிரியக்க மாசுபட்ட வண்டியை சுத்தம் செய்யும் ஒத்திகை.

கல்பாக்கம் வளாகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளின் இயக்குனர்கள் மற்றும் இந்திய அணு சக்தி கட்டுப்பாட்டு வாரிய (AERB) அதிகாரிகள் இந்த ஒத்திகையை கண்காணித்தனர்.  வளாகத்தில் பணியாற்றும் 8,000 பேர் இதில் பங்கேற்றனர். ஒத்திகையின் ஒருபகுதியாக, அணுசக்தித் துறையின் பேருந்துகள் மூலமாக 3,500 பேரும், மற்றவர்கள் அவரவர் சொந்த வாகனங்கள் மூலமாகவும் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  ஒட்டுமொத்த ஒத்திகையும் மூன்றரை மணிநேரம் நடைபெற்றதாக சென்னை அணு மின் நிலைய இயக்குனர் திரு எம். ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.