‘2026-ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்’ – புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு!
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் வெளியிடப்பட்டது. த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், நிகழ்வில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில்,
“புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன். நாட்டில் அத்தனை சக்திகளும் அம்பேத்கருக்கு தடையாக இருந்தது. அம்பேத்கரின் வைராக்கியம் பிரமிக்கத்தக்கது. அரசமைப்பை வகுத்து நமக்குப் பெருமைத் தந்தவர் அம்பேத்கர். இந்த புத்தகத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. அம்பேத்கரின் வெயிட்டிங் ஃபார் விசா என்ற பயோகிராபி என்னைப் பெரிதாத பாதித்தது. அம்பேத்கர் இன்று இருந்தால் இந்தியாவின் இன்றைய நிலைமையை எப்படிப் பார்ப்பார். ஜனநாயகத்தின் ஆணிவேரே நியாயமான தேர்தல்தான். சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளே, அன்றுதான் நம் அனைத்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஜனநாயக உரிமைகள் பிறந்த தினம். ஆகையால், அந்த நாளை, ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளை இந்திய ஒன்றிய அரசிடம் முன்வைக்கிறேன். அம்பேத்கரைப் பற்றி யோசிக்கும் கண்டிப்பாக சட்டம் மற்றும் நீதியைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், அதைப் பற்றி கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் ஓர் அரசு நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது.
சரி, அங்கேதான் அந்த அரசு இப்படி என்றால், இங்குள்ள அரசு எப்படியிருக்கிறது? இங்கே தமிழகத்தில் வேங்கைவயல் என்கிற ஓர் ஊரில் என்ன நடந்தது என நம் எல்லோருக்குமே தெரியும். சமூக நீதி பேசுகிற இங்கிருக்கிற அரசு, அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லையே. இத்தனை வருசங்கள், காலங்கள் தாண்டி ஒரு துருப்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே? இதையெல்லாம் அம்பேத்கர் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தலைகுனிந்து போவாரே?
சரி, இங்கே கொடுக்கிற பிரச்னைகள், கொடுமைகளுக்கு எல்லாம் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கும் பிரச்னைகள் ஒன்றா, இரண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக என இவற்றையெல்லாம் நாம் படிக்கிறோம்; பார்க்கிறோம். மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்கிறோம். இதற்கெல்லாம் ஒரு நிரந்தரத் தீர்வு என்ன தெரியுமா? மிகவும் சுலபம்தான். நம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன் முறையாக, முழுமையாக மக்களை உண்மையாகவே நேசிக்கிற ஓர் அரசு வேண்டும். இது, அமைந்துவிட்டால் போதும். அதைத்தான் மிகவும் சுலபம் என்றேன்.
அதனால் இங்கு தினம்தினம் நடைபெறும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும் சம்பிரதாயத்திற்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் எனக் காட்டிக் கொள்வதும் சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று போட்டோ எடுப்பதிலும் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடே இல்லை. ஆனால் என்ன செய்வது? நாமும் சம்பிரதாயத்திற்காக அதுபோல சிலசமயத்தில் செய்ய வேண்டியதாக உள்ளது. மக்களின் உரிமைகளுக்காக அவர்களுடைய உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். என்னை ஒவ்வொருத்தரும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக் கொண்டிருக்கிற அனைவருக்கும் அவர்களுடைய உரிமைகளுக்காக உணர்வுபூர்வமாக நான் இருப்பேன்.
எப்போதும் நான் அப்படித்தான் இருப்பேன். மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படை உதவி, சமூக நீதி, சரியான பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் இருநூறு வெல்வோம் என்று எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு நான் இணைந்து விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்களின் சுயநலத்திற்காக பலவழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026இல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவிற்கு திருமாவளவனுக்கு பிரஷர் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. திருமாவளவனின் மனசு முழுக்க முழுக்க நம்முடதான் இருக்கும்” என்றார்.