ஜெய்பீம் விமர்சனம்:
‘ஜெய்பீம்’ ஞானவேல்
2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் ஜெய்பீம்.
இதில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், தமிழ், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், சின்ராசு, ராஜேந்திரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து ஜெய்பீம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்-த.செ.ஞானவேல்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-ஷான் ரோல்டன், ஒளி;ப்பதிவு- எஸ்.ஆர்.கதிர், படத்தொகுப்பு-பிலோமின் ராஜ், கலை-கே.கதிர், சண்டை-அன்பறிவு, திரைக்கதை-பா.கிருத்திகா, பாடல்கள் -யுகபாரதி, ராஜுமுருகன், அறிவு, நடனம்-தினேஷ், ஆடை-பெருமாள் செல்வம், பூர்ணிமா ராமசாமி, ஒப்பனை – பட்டணம் ரஷீத், ஸ்டில்ஸ்-எஸ்.ஆர்.முருகன், தயரிப்பு மேற்பார்வை-எஸ்.கார்த்திகேயன், தயாரிப்பு மேலான்மை-பி.செந்தில்குமார், பிஆர்ஒ-யுவராஜ்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோணமலைக் கிராமத்தில் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு(மணிகண்டன்)பாம்பு பிடிக்கும் தொழிலும், மீதி நேரத்தில் செங்கல் சூளையில் வேலை செய்தும் தன் மனைவி செங்கேணி( லிஜோமோல் ஜோஸ்)மற்றும் மகளை காப்பாற்றுகிறார். இருவரும் கிடைத்ததை கொண்டு நிம்மதியாக, அன்பாக வாழ்கின்றனர்.ஆளுங்கட்சி ஊர்த்தலைவர் வீட்டில் நகைகள் வைக்கும் இடத்தில் பாம்பு புகுந்து விட அதை ராஜாகண்ணு விரட்டுகிறார். அதன் பின் கர்ப்பிணியாக இருக்கும் செங்கேணி மற்றும் மகளை மட்டும் விட்டு விட்டு ராஜாகண்ணு சூரலூரில் செங்கல் சூளையில் வேலைக்கு செல்கிறார். சில நாட்களுக்கு பின் ஊர்த்தலைவர் வீட்டில் நகைகள் காணாமல் போக அதற்கு காரணம் ராஜாகண்ணு தான் என்று சந்தேகப்பட்டு அவரது குடும்பத்தினரை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறது. போலீஸ் நிலையத்தில் செங்கேணி, ராஜாகண்ணுவின் அக்கா, உறவினர்கள் இருட்டப்பன், மொசக்குட்டி ஆகியோரை கொடூரமாக அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். இதனிடையே குடும்பத்தை பார்க்க ராஜாகண்ணு வர அவரையும் பிடித்து திருட்டை ஒப்புக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்துகின்றனர். ராஜாகண்ணு, இருட்டப்பன்,மொசக்குட்டி ஆகிய மூன்று பேரைத்தவிர அனைவரையும் விடுவிக்கிறது போலீஸ். மறுநாள் செங்கேணியிடம் மூன்று பேரும் போலீஸ் நிலையத்திலிருந்து தப்பித்து போய் விட்டதாக எஸ்.ஐ. குருமூர்த்தி தெரிவிக்கிறார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியாகும் செங்கேணி எங்கு தேடியும் கிடைக்காமல் போக அறிவொளி இயக்கத்தின் ஆசிரியர் மைத்ராவின் (ரஜிஷா விஜயன்) உதவியுடன் வழக்கறிஞர் சந்துருவை(சூர்யா) சந்தித்து இன்னல்களை விவரிக்கிறார். வழக்கறிஞர் சந்துரு எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் தவிக்க, (ஹேபியஸ் கார்பஸ்)ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து ராஜாகண்ணுவை கண்டுபிடித்துதரச் சொல்கிறார்.அதன் பின் நடந்தது என்ன? ராஜாகண்ணு கிடைத்தாரா? போலீஸ் தரப்பில் கொடுத்த சாட்சியங்கள் என்ன? இறுதியில் மூவரின் நிலை என்ன? நியாயம் கிடைத்ததா? என்பதே படத்தின் மனதை கதிகலங்கடிக்கும் முடிவு.
ராஜாகண்ணு மணிகண்டன் என்ற பெயரிலேயே அவரை அழைக்கலாம் அந்த அளவிற்கு வாழ்ந்திருக்கிறார். யதார்த்தமான கிராமத்து ஏழை இளைஞர், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பயந்து நடக்கும் மனோபக்குவம், மனைவி மேல் உயிரைவே வைத்திருக்கும் கணவராக, வெகுளித்தனமான பேச்சும், உடையும், விசாரணையில் அடி உதைப்பட்டு. ரத்தம் வழிய கெஞ்சும் இடத்தில் பரிதாபமான காட்சி நெஞ்சை உலுக்கிவிடுகிறது. தப்பு செய்யாத போது அதை துணிந்து மறுத்து கடைசி வரை போராடி ஒய்ந்து போகும் அவரின் அலறல் சத்தம் இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இவரின் துணிச்சலான நடிப்புக்கு நிச்சயம் விருதும், பாராட்டும் கிடைக்கும்.
செங்கேணி என்ற லிஜோமோல் ஜோஸ் என்ன ஒரு அற்புதமான பாத்திரப்படைப்பு. இருளர் பெண்ணின் நடை, உடை, பாவனை அச்சு அசலில் அசத்திவிடுகிறார். அவரின் அப்பாவித்தனமான கொஞ்சும் பேச்சு, கணவனின் மேல் பாசம், கர்ப்பிணியான மனநிலையில் போலீசிடம் அடிபட்டு, தன் கண்முன்னே கணவன் அடி வாங்கி நடக்க முடியாமல், சாப்பிட முடியாமல் தவிக்கும் தவிப்பை பார்த்து அடி தொண்டையில் கத்தி சாபமிடுவதாகட்டும், கணவன் காணாமல் போக, என்ன நடந்தது என்று தெரியாமல் திக்கு திணறி கடைசியாக வழக்கறிஞரிடம் தன் சோகக் கதையை கூறும் இடம் ஆகட்டும், போலீசையே பின்னால் ஒடி வர வைக்கும் தில்லாகட்டும், எதற்கும் உதவாத ஊர்த்தலைவர், ஊராட்சித்தலைவர் என்று அத்தனை பேரையும் தன் பார்வையாலே கடந்து போகும் தைரியமாகட்டும், தனித்து நின்று போராடி அனைத்து இடங்களுக்கும் சென்று விசாரணைக்கு உதவுவதாகட்டும் செங்கேணி ஆணி அடித்தாற் போல் மனதில் நின்று நடிப்பால் கண்ணை கலங்க வைத்து விடுகிறார். போலீசார் சமரசம் பேச அழைக்க, மனதைரியமுடம் மறுத்து பதில் அளித்து அவர்களின் உதவியை நிராகரித்து உதாசீனப்படுத்தி நடக்கும் நடை சிம்ம நடை. ஒவ்வொரு காட்சியும் இவரின் நடிப்பு விவரிக்க முடியாத அளவு இயல்பாகவும், நீதி கிடைக்க போராட்ட குணம் கொண்ட பெண்ணாக மிளிர்கிறார். இவரின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைப்பதோடு, சிறந்த நடிகைக்கான பலமொழி விருதுகளையும் தட்டிச் செல்வார் என்பதில் ஐயமில்லை.
வழக்கறிஞர் சந்துரு 90களின் வித்தியாசமான சிகையலங்காரம்,கண்ணாடிக்குள் தீர்க்கமான பார்வை, ஆழ்ந்த சிந்தனையுடன் எடுக்கும் முடிவு, அனைத்து சாட்சியங்களையும் அலசி ஆராய்ந்து விசாரிப்பது, போலீஸ், எதிர்தரப்பு வக்கீல் என்று அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் சாதுர்யமான பேச்சு, அடக்குமுறைகளை தட்டிக் கேட்கும் பாங்கு, ஏழை மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை, வழக்கு நடத்த எடுக்கும் முயற்சிகள் என்று அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து நியாயத்திற்கு போராடும் நேர்மையும், புலமையும் வாய்ந்த கதாபாத்திரத்தில் சூர்யா ஜொலிக்கிறார்.
ஐஜி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ், டிஜிபி ராதாகிருஷ்ணனாக ஜெயபிரகாஷ் தேர்ந்த நடிப்பு பளிச்சிடுகிறது. ஏஜி ராம்மோகனாக ராவ் ரமேஷ், போலீஸ் உதவி ஆய்வாளராக தமிழ், அரசு வக்கீலாக குரு சோமசுந்தரம், வக்கீலாக எம்.எஸ்.பாஸ்கர், ஊராட்சித்தலைவராக இளவரசு, சின்ராசு, ராஜேந்திரன், அறிவொளி ஆசிரியராக ரஜிஷா விஜயன் என்று அத்தனை பேரும் படத்தின் தத்ரூபமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
ஷான் ரோல்டன் படத்தின் கதைக்களத்திற்கேற்ப கொடுத்திருக்கும் இசை அளப்பறியது. படத்தின் பல காட்சிகளில் மெய் மறந்து பார்க்கும் அளவிற்கு இடையூறு இல்லாத வண்ணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமாகவும் கொடுத்து அசத்தியுள்ளார்.
கிராமத்தின் ஏழ்மையான சூழல், எலி, பாம்பு பிடிக்கும் தந்திரம், இருளர்களின் எளிய வாழ்க்கைமுறை, போலீஸ் நிலையம், சிறைக்குள் நடக்கும் விசாரணை, கொடுமைகள், கோர்ட் வளாகம், போலீஸ் அலுவலகம், சந்துருவின் பழமையான வீடு, மூணூறு, என்று 90களின் சாயலில் அனைத்தும் நம் கண் முன்னே கொண்டு வந்து காட்சிக் கோணங்களில் வர்ணஜாலங்களில் மயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்.
படத்தொகுப்பு-பிலோமின் ராஜ் அனைத்து காட்சிகளும் விறுவிறுப்பு குறையாமல் கொடுத்திருப்பதிலேயே இவரின் வெற்றி தெரிகிறது.
90களின் காலகட்டத்தையும், சூழலையும், வாழ்வியலையும் அச்சு பிழையாமல் அசத்தல் கலை வண்ணத்தில் ஒவியமாக தீட்டியுள்ளார் கலை இயக்குனர் கே.கதிர்.
1990ம் ஆண்டு நடந்த பழங்குடி இளைஞரின் லாக்கப் மரணத்தைப் பற்றிய கதைக்களத்தில் எந்த ஒரு ஆதாரம் கிடைக்காமல் தனிப்பட்ட முயற்சியால் துப்பு துலக்கி வழக்கு போட்டு சாதுர்யாமாக விசாரணை நடத்தி பழங்குடி மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்த வக்கீல் சந்துருவின் வழக்கு நிழ சம்பவமே ஜெய் பீமின் திரைக்கதை. வக்கீல் சந்துரு பின்னர் நீதிபதியாக பொறுப்பேற்று பல நிலுவையில் இருந்து வழக்குகளை முடித்து சாதனை படைத்தார் .இந்த வழக்கின் வெற்றிக்கு பின்னர் தான் இருளரின் உரிமைக்குரல் கேட்டு அவர்களுக்காக குரல் கொடுக்க சங்கம் உருவானது என்பது தனிக்கதை.இப்படத்தில் 1995ம் காலகட்டத்தில் துவங்கும் கதையில் இருளர்களின் மேல் சுமத்தப்படும் வீண் திருட்டு, கொள்ளை, கொலை வழக்குகள், சித்ரவதைகள், மரணங்கள், கொத்தடிமைகளாக நடத்தப்படும் விதம் அனைத்தும் துல்லியமாக பதிவு செய்து காட்சிப்படுத்தி, போலீஸ், கோர்ட், வழக்கு, விசாரணை என்று காட்சிகள் வந்தாலும் எதுவும் ஆவணப்படம் பார்த்த உணர்வு ஏற்படாத வண்ணம் உண்மையாகவே சம்பவங்கள் நம் கண் முன்னே நடப்பது போன்ற உணர்வை எழுப்பி, அவர்களின் வலியை அவர்களின் மனவேதனையை உணரச்செய்திருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் ஒவ்வொரு காட்சியும், சாட்சியும் விசாரரணையின் போது பல கோணங்களில் விரிவடையும் போது பிரமிப்பே மேலீடுகிறது. என்ன நடந்தது என்பது ஊகிக்க முடிந்தாலும், அதை எப்படி செய்தார்கள் என்பதை காணும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. போலீஸ் தங்களை காப்பாற்ற எந்த அளவிற்கும் துணிவார்கள் என்பதையும், வக்கீல்கள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள எந்த லெவலுக்கும் இறங்குவார்கள் என்பதையும். போலீஸ், வக்கீல் இரு துருவங்களை சாமர்த்தியமாக கையாளும் திறன் நீதிபதி கையில் இருக்கிறது என்பதையும், தீயது முதலில் வென்றாலும் ஒடுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட நீதி இறுதியில் வென்று நியாயம் கிடைக்கும் என்பதை நிரூபித்து திரைக்காவியமாக படைத்திருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல். இவரின் படைப்பு பல பாராட்டுக்களையும், விருதுளையும் குவித்து பேரும், புகழும் கிடைத்து ‘ஜெய்பீம்’ ஞானவேல் என்ற அடைமொழியோடு இனி வலம் வருவார்.
2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிப்பில் ஜெய்பீம் அநீதிக்கு குரல் கொடுத்து வெல்லும் தனி மனிதப் உரிமைப்போராட்டம் வசூலில் மட்டுமல்ல, மெகா ஹிட் கொடுத்து வெற்றியும் கிட்டும்.