மக்களை கசக்கிப் பிழியும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

0
119

மக்களை கசக்கிப் பிழியும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் R.தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வீட்டு உபயோக சிலிண்டர் காஸ் விலையை உயர்த்தி மக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது மத்திய பாஜக அரசு. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஏழை, நடுத்தர மக்கள் தற்போது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை தற்போது மிகவும் சரிந்திருக்கிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் விலையைக் குறைக்காமல், கலால் வரியைக் கூடுதலாக விதித்திருக்கிறது மத்திய பாஜக அரசு. கச்சா எண்ணெய் விலை சரிவால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஏழை, எளிய மக்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணில் பறந்துகொண்டிருக்கும் காஸ் சிலிண்டர் விலையை மேலும் உயர்த்துவது, சாதாரண மக்களைக் கசக்கிப் பிழியும் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

வரி விதிப்பில் தீவிரவாதம் என்றும் சொல்லும் அளவுக்கு, வரிக்கு மேல் வரி விதிப்பதையே பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, எவ்வளவு அடித்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று கருதி, சமையல் காஸ் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுக்கும் வேலையைக் கூசாமல் செய்யலாமா?

அண்மையில் சுங்கக் கட்டணங்களை உயர்த்தியதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதேபோல, ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தையும் மத்திய பாஜக அரசு உயர்த்திவிட்டது. இப்படி மக்களின் மீது வரிகளையும், கட்டண உயர்வையும் திணித்துக் கொண்டே செல்வது அப்பட்டமான மக்கள் விரோதப் போக்காகும். இதற்கெல்லாம் வரும் தேர்தல்களில் மத்திய பாஜக அரசு பதில் சொல்ல வேண்டும். மக்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருக்குமானால், சமையல் காஸ் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.