பத்மபூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்..! ஜனாதிபதி திரவுபதி முர்மு கௌரவிப்பு..!
பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.
அந்த வகையில், பத்மபூஷன் விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கலைத்துறையில் செய்த சாதனைக்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பத்ம விருதுகள் 2025 வழங்கும் விழா இன்று ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, நடிகர் அஜித் குமார், சேகர் கபூர், அரிஜித் சிங் மற்றும் ரிக்கி கேஜ் போன்ற பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். பங்கஜ் உதாஸுக்கு மரணத்திற்குப் பின் கௌரவம் அளிக்கப்பட்டது.
2025-ல் பத்ம விருதுகள் பெற்ற பிரபலங்கள்
பத்ம விருதுகளைப் பெற நாடு முழுவதிலுமிருந்து இந்திய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர். நந்தமுரி பாலகிருஷ்ணா தனது பத்ம பூஷன் விருதைப் பெற பாரம்பரிய ஆந்திரப் பிரதேச உடையில் வந்திருந்தார், அதே சமயம் அஜித் குமார் கௌரவ விருதினைப் பெர சூட் அணிந்து வந்திருந்தார். இவர்களுடன் சேகர் கபூர் மற்றும் ஷோபனா ஆகியோரும் பத்ம பூஷன் விருதைப் பெற்றனர், அதே நேரத்தில் பங்கஜ் உதாஸின் மனைவி அவரது விருதை கௌரவிக்கும் விதமாக பெற்றுக்கொண்டார்.
அரிஜித் சிங் மற்றும் ரிக்கி கேஜ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா யூடியூப்பில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. விளையாட்டு, மருத்துவம், வணிகம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பலரும் இன்று குடியரசுத் தலைவர் கையால் விருதுகளைப் பெற்றனர்.
பத்ம விருது குறித்து அஜித் குமார்
கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அப்போது தனக்கு விருது அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்ரை நடிகர் அஜித் வெளியிட்டார். அதில், “இந்திய ஜனாதிபதியால் மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவுடனும் பெருமையுடனும் இருக்கிறேன். இந்திய ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் இந்த மதிப்புமிக்க கௌரவத்திற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய உயரிய மட்டத்தில் அங்கீகரிக்கப்படுவது ஒரு பாக்கியம், மேலும் நமது தேசத்திற்கு நான் செய்த பங்களிப்புகளுக்கு இந்த தாராளமான அங்கீகாரத்திற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்கு முன் அஜித் குமார் கார் ரேஸில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பத்ம விருது குறித்து சேகர் கபூர்
சேகர் கபூர் அவரது எக்ஸ் பக்கத்தில் (முன்னர் ட்விட்டர்) ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “என்ன ஒரு கௌரவம்! இந்திய அரசு என்னை #பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவராக கருதியதற்கு நான் பணிந்து போகிறேன். இந்த விருது நான் ஒரு பகுதியாக இருக்கும் தொழிலுக்கும், நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் அழகான தேசத்திற்கும் சேவை செய்ய என்னை மேலும் கடினமாக உழைக்க வைக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் திரைப்பட பார்வையாளர்களுக்கும் நன்றி, ஏனென்றால் நீங்கள் இருப்பதால் தான் நான் இருக்கிறேன்.” என உணர்ச்சி பொங்க கருத்து தெரிவித்திருந்தார்.
பத்ம ஸ்ரீ அஸ்வின் ரவிச்சந்திரன்
இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை அளித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அஸ்வினின் மனைவி உடன் இருந்தார்.
இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.