தமிழக அரசு தளர்வு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவிப்பு!

0
181

தமிழக அரசு தளர்வு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவிப்பு!

அரசு தளர்வு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

கொரோனா 2-ம் அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் செயல்படும் எனவும், தேநீர் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்படுவதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சரை சந்தித்து, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ள அணுமதிக்குமாறு ஒட்டுமொத்த திரையுலகத்தினர் சார்பாக வேண்டுகோள் விடுத்தோம். அதை கனிவுடன் பரிசீலிப்பதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா என்கிற பெருந்தொற்று கடுமையாக பாதித்துள்ள சூழலில், தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஊரடங்கை தமிழ் திரையுலகமும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, முதலமைச்சர் அறிவித்துள்ள ஊரடங்கில் எந்த வித படபிடிப்பையும், திரை சம்மந்தமான எந்த வித பணியையும் செய்வதில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்தவுடன் அதற்கேற்ப படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதுவரை எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.