ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது- கலெக்டர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு கடந்த 10-ந்தேதி தொடங்கியது.
முதல் நாள் காலையில் நடந்த மாநாட்டில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். பிற்பகலில் நடந்த மாநாட்டில் போலீஸ் அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர்.
முதல் நாள் மாநாட்டில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “சட்டம்- ஒழுங்கில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். ரவுடிகள் மீது இரும்பு கரம்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
2-வது நாளாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் கலெக்டர்கள் மட்டும் பங்கேற்றனர். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது, “அரசு ஒரு ரூபாய் செலவழித்தாலும் அது கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்று வலியுறுத்தி பேசினார்.
இன்று (சனிக்கிழமை) கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்து பேசியதாவது:-
தேசத்திற்கு நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த அரசு தொழில் வளர்ச்சி சுற்றுச்சூழல் என இரண்டையும் ஒரே தராசில் இருக்கும் இரு தட்டுகளை போல் எண்ணுகிறது.
புவி வெப்பமயமாதல் உலக அளவில் அதிகமாக பேசப்படுகிறது. அதற்காக இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாகிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போதும் சுற்றுச்சூழலை மனதில் வைத்துக்கொண்டு மரக்கன்றுகளை நட்டு வந்தோம். அதை மனதில் வைத்தே தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் என துறைக்கு பெயர் சூட்டினோம்.
பிளாஸ்டிக்கை ஒழிக்க மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கி வைத்தோம்.
முதல் முறையாக மாவட்ட கலெக்டர்களுடன் சேர்ந்து வன அலுவலர் மாநாட்டையும் நடத்தி இருக்கிறோம். சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020 தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
தொழில், சுற்றுச்சூழல் இரண்டும் சமுதாயத்தில் சம நண்பர்கள். தொழில் மேலும் முன்னேறுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பிறகு வனத்துறை அதிகாரிகளை பேசுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதன்படி உயர் அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.
மாநாட்டில் இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மன நிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது.
எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துக்களை இங்கே சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் சொல்வதாக இருந்தால் இந்த ஆட்சி சரியான திசை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது என்பதை உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.
இந்த ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வரக்கூடிய அடிப்படையில் உங்கள் கருத்துக்களின் மூலமாக நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.
நாங்கள் உருவாக்கிய திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய திட்டங்களாக அமைந்து இருக்கிறது என்பதை உங்களுடைய எண்ணங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன்.
சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் மூலமாக தமிழ்நாட்டில் முழு நிலைமையை நான் அறிந்து கொண்டிருக்கிறேன். எனவே அரசின் சார்பில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் எல்லாம் என்னால்தான் என்று நினைக்கும் அளவுக்கு நான் நிச்சயமாக இருக்க மாட்டேன். இருக்கவும் இல்லை.
என்னை தொடர்ந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள், துறைகளின் செயலாளர்கள் இருக்கிறார்கள், மாவட்ட கலெக்டர்கள் இருக்கிறார்கள், காவல் துறை கண்காணிப்பாளர்களும் இருக்கிறார்கள். நாம் அனைவரும் சேர்ந்துதான் இந்த அரசு. இத்தனை உயிர்கள் சேர்ந்துதான் அரசுக்கு நாம் உயிர் கொடுத்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்துதான் மக்களுக்கு உயிராய், உணர்வாய் இருந்து வருகிறோம்.
மக்கள் நம்மை நம்பி ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்கள். மக்கள் நம்மை நம்பி அதிகாரத்தையும் ஒப்படைத்து இருக்கிறார்கள். நம்மை நம்பிதான் கோட்டையையும் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
கடைக்கோடி மனிதனின் கவலையையும் தீர்க்கும் வகையில் இந்த அரசு அமைய வேண்டும். அப்படிதான் அமைந்து இருக்கிறது. அத்தகைய அரசுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட வன அலுவலர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது நமது அரசு என்ற எண்ணத்தோடு, திறந்த மனதோடு, நீங்கள் உங்கள் கருத்துக்களை 3 நாளும் எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். சில முக்கியமான ஆலோசனைகளை மட்டும் நான் இங்கே நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
அரசின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், சட்டம்- ஒழுங்கை காப்பது குறித்தும் உங்களுடைய ஆலோசனைகள் அதிகமாக அமைந்துள்ளது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்தி விடுவதாகவும் காவல் துறை இயக்குனர் சொன்னார். கட்டுப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
சட்டம்-ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குனர் இங்கு பேசும்போது, குற்றங்கள் குறைந்து இருப்பது பற்றி குறிப்பிட்டு பேசினார். அது மட்டுமல்ல அதன் விழுக்காட்டையும் எடுத்து சொன்னார். குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பது அல்ல. குற்றங்களே நடக்கவில்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
ஜாதி மோதல்கள் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே விரிவாக பேசினார். ஜாதி மோதல்களை சட்டம்- ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுக்க பிரச்சினை.
கிராமங்களில் இந்த பிரச்சினை அதிகம் உருவாக்கி இருக்கிறது என்று போலீஸ் சூப்பிரண்டு இங்கே பேசும்போது சொன்னார். படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல, படித்து முடித்து விட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்கும் ஒரு சிலராலும் இது போன்ற மோதல்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளது.
இதுபோன்ற இளைஞர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். ஆக்கப்பூர்வமான வழிகளில் விளையாட்டு போட்டிகள், ஊர்க்காவல் படைகள் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதாக நெல்லை போலீஸ் சூப்பிரண்டு பேசும்போது சொன்னார். அதுபோல் மற்ற மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும்.
இதுபோல் மத மோதல்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் இங்கே பேசினார். மத மோதல்கள் குறித்து கோவையில் இயங்குவதை போல சிறப்பு பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் அமைய வேண்டும் என்று அவர் சொன்ன ஆலோசனை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
ஒரு காலத்தில் மதம் என்பது மதம் சம்பந்தபட்டதாக மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கம் உள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது. எனவே அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இதை தடுக்க வேண்டும்.
ஜாதி மோதல்களுக்கும், மத பிரச்சினைகளுக்கும், சமூக வலைதளங்கள் முக்கியமான காரணங்களாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அது உள்ளபடியே முழுமையான உண்மைதான்.
இது நவீன தொழில்நுட்ப யுகம். இந்த தொழில்நுட்பத்தை நல்லதுக்கும் பயன்படுத்தலாம், கெட்டதுக்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஜாதி, மத வக்கிரம் பிடித்தவர்கள் அழிவுக்கு பயன்படுத்தி சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இதை முளையிலேயே நாம் களை எடுக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பதிவுகளை போடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சோசியல் மீடியா சென்டருக்கு புதிய அலுவலகம் தேவை என்று திருவள்ளூர் எஸ்.பி. கூறினார். அவரது கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
மத்திய அரசில் இருப்பதை போல நேஷனல் மீடியா அனலைசஸ் சென்டர், சோசியல் மீடியா லேப் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று சொன்னார். சோசியல் மீடியா மூலமாக நடக்கின்ற வன்மங்களுக்கு எல்லா வகையிலும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி காவல் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பேசும்போது, கைதிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர் செய்தால் நேரமும் மிச்சம், செலவும் மிச்சம் என்று சொன்னார். அதை செயல்படுத்தலாம். நல்ல யோசனை.
நாகை ஆட்சியரும், கண் காணிப்பாளரும் சொன்ன சுருக்குமடி வலை பிரச்சினை குறித்து பேசினார்கள். அரசு அதிகாரிகள் மட்டத்தில் முழுமையான ஆலோசனை நடத்தி சுருக்குமடி வலை பிரச்சினை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்.
போக்சோ வழக்குகள் அதிகமாகி வருவதை குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசினார். அங்கு மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன.
ஏதோ இப்போதுதான் அதிகமாக நடப்பதாக நினைக்க வேண்டாம். இப்போதுதான் துணிச்சலாக புகார் தருகிறார்கள். இதற்கு உரிய நீதி கிடைக்க செய்ய வேண்டியது உங்கள் தலையாய கடமையாகும்.
குறிப்பாக இத்தகைய வழக்குகளில் தாமதங்கள் இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்க்கிறேன். தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கக் கூடிய பகுதிகளில் ரவுடிகள் தொல்லை இருப்பதாக தாம்பரம் ஆணையரும், காஞ்சிபுரம் எஸ்.பி.யும் சொன்னார்கள்.
அத்தகைய இடங்களில் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று. அதேபோல் தொழிற்சாலைகளில் இருக்கக் கூடிய உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை வருவாய்த்துறை, காவல் துறை இணைந்து டாக்குமெண்ட் செய்ய வேண்டும்.
அமைதியான மாவட்டங்களில்தான் அதிகமான நிறுவனங்கள், தொழில்கள் தொடங்க முன் வருவார்கள். கல்குவாரிகளால் ரவுடிகள் வளருகிறார்கள் என்று தாம்பரம் ஆணையர் குறிப்பிட்டார்.
கல்குவாரி தொழில்களால் ரவுடிகள் வளர மாட்டார்கள். தொழில் போட்டி காரணமாக அப்படி உருவாகலாம். அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது.
அதே போல் ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என்று பிரிவினை செய்வது தவறானது. ரவுடிகளை இடம், ஜாதி என்று அடையாளப்படுத்த கூடாது.
குடிசை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சேகர்பாபு சொன்னார். இது போன்ற அடையாளப்படுத்துதல் கூடாது. ரவுடிகளை கட்டுப்படுத்த வெளிச்சம், புதையல், உதயம், விடியல் ஆகிய திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தாம்பரம் காவல் ஆணையர் சொன்னார். அதனை மற்றவர்களும் பின்பற்றலாம்.
வருவாய், ஊரக வளர்ச்சி, காவல்துறை ஆகிய 3 துறைகள் தொடர்பான மனுக்கள்தான் 80 சதவீதம் வருவதாக இங்கே குறிப்பிட்டார். இந்த 3 துறையும் மாவட்டங்களில் முறையாக செயல்பட்டால், மனுக்கள் வருவது நிச்சயம் குறையும்.
இதனை இந்த 3 துறையை சார்ந்தவர்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து பேசிய கலெக்டர்கள் அவர்களுக்கான தனியாக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்கள். புதிதாக அவர்களுக்கு தனியாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைவிட இருக்கிற வேலைவாய்ப்புகளில் எதில் எல்லாம் அவர்களை பங்கெடுக்க செய்ய முடியுமோ அதில் பங்கெடுக்க செய்யக்கூடிய சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்தி தரவேண்டும்.
நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் உள்பட பலரும் பேசினார்கள். நீர் நிலைகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து இங்கு ஒரு பெரிய விவாதமே நடந்தது. நீர் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் அது நீர்நிலைதான்.
எனவே அது ஆக்கிரமிப்பு என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. நீர்நிலைகளை பராமரிக்காத காரணத்தால்தான் வெள்ளக்காலங்களில் நாம் அடையக்கூடிய பாதிப்புகளை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறோம்.
எனவே நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பதை நாம் மிகுந்த கவனத்தோடு அணுக வேண்டும். மாநிலத்தினுடைய வன பரப்பளவு 33 சதவீதம் உயர்த்துவது குறித்து பல்வேறு நல்ல ஆலோசனைகளை சொன்னீர்கள். அதையெல்லாம் நடைமுறைப்படுத்த உரிய நிதியை நிச்சயமாக ஒதுக்கீடு செய்யும்.
வனத்துறை வீரர்களுக்கு உரிய தீ தடுப்பு கருவிகள் வழங்கப்படுவதோடு துரதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
வன விலங்குகள் சிகிச்சைக்காக கால்நடை பராமரிப்புத் துறையில் தனி அலகு ஏற்படுத்தி பயிற்சிகள் அளிக்கப்படும். கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்தவர்களுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்படும். இதில் எந்த காரணத்தைக் கொண்டும் கால தாமதம் வேண்டாம் என உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
வருவாய் துறையும், தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இங்கு சொன்னதை நான் வரவேற்கிறேன். மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் பகுதி சபை, வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் களையப்படும்.
குழந்தைகள் திருமணம் நடப்பதாக விழுப்புரம் ஆட்சித் தலைவர் கூறினார். குழந்தை திருமணத்தை அனுமதிக்கக்கூடாது. ரத்தசோகை போன்றவற்றை கண்டறிய வாட்ஸ்அப் குழு தொடங்கியிருப்பதாக அவர் கூறியதும் வரவேற்கத்தக்கது.
வளர்ப்பவர்களே ஆடு, கோழிகளை இடைத்தரகர்கள் இன்றி விற்க உழவர் சந்தைகள் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்படும். இந்திராகாந்தி ஆகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளை சரிசெய்து தரவேண்டும் என்று தர்மபுரி கலெக்டரின் கோரிக்கையை நிதித்துறையில் பரிசீலிக்கப்பட்டு நிச்சயமாக அதுவும் நிறைவேற்றப்படும்.
புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளுக்கு உடனடியாக இடம் பார்த்துக் கொடுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சிறு குறு நிறுவனங்களை புதிதாக உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் இங்கே கூறினார்.
சிறு குறு நிறுவனங்களை அதிகமாக உருவாக்குவதில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும். இதுதான் சாமானியர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பருவ மழையினால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய அரசின் சார்பில் தரப்பட்ட தொகை குறைவாக இருக்கிறது என்று நீர்வளத்துறை செயலாளர் இங்கு பேசுகிறபோது சொன்னார். நிச்சயமாக அதுவும் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படக்கூடிய நிதியை வழங்குவோம்.
அரசு துறைகள் முழுமையாக கணினி மயமாக்கப்படும். அனைத்து மின்னணு சேவை மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் சீர்செய்யப்பட வேண்டும். பல இடங்களில் மிக மோசமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அனைவரும் அதை சென்று பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதிகளில் மாணவர்கள் தங்கும் எண்ணிக்கையை உறுதி செய்வதோடு, சென்னை போன்ற மாநகரங்களில் தேவைக்கேற்ப கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்.
நமக்கு நாமே, சமத்துவபுரம், தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய திட்டங்களை செயல்படுத்த மாவட்ட கலெக்டர்களின் ஒத்துழைப்பு முக்கியமென்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலாளர் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.
பட்டா மாறுதல் போன்ற வருவாய்த் துறை இனங்களில் சுணக்கம் ஏற்படாத வண்ணம் விரைவில் நடவடிக்கை எடுக்க தேவையான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேங்கியுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அந்த 3 திட்டங்களை மட்டுமல்ல, அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மாவட்ட கலெக்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர், மக்களைத் தேடி மருத்துவம், வேளாண்மை நிதிநிலை அறிக்கை, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் இதுபோன்ற திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கல்வியும், சுகாதாரமும் இந்த அரசின் இரு கண்கள். சாலை வசதி, மின்சாரம், உணவுப்பொருள் வழங்கல் ஆகியவை அடுத்த இலக்கு. இதில் எந்த தடங்கலும் இருக்கக்கூடாது. இதற்காகவே நாம் இருக்கிறோம். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது இது. கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் இவை. இதை அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு உங்களின் 2 கைகளுக்குத்தான் இருக்கிறது.
ஒவ்வொரு திட்டமும் எந்த மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாள்தோறும் நீங்கள் கண்காணித்தால் போதும். அந்த திட்டம் மிகச்சிறப்பாக செயல்படத் தொடங்கிவிடும். அனைவரும் டேஷ் போர்டு உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அதை நான் பார்க்கிறேன்.
நீங்களும் உங்கள் டேஷ் போர்டில் உங்கள் பணிகளை செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த பணிகளும் இருக்கட்டும். செய்யவேண்டிய பணிகளும் இருக்கட்டும். எந்த உயரத்தை அடைவதாக இருந்தாலும் ஒவ்வொரு படியாகத்தான் நாம் ஏறணும்.
ஒவ்வொரு நாளும் அனைத்து திட்டங்களையும் உயரத்துக்கு நகர்த்துவோம். அதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உயர்த்துவோம்.
எனக்கு நீங்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என்று நான் கேட்கலை. உங்களுடைய கனவுகளை நிறைவேற்ற என்னை கருவியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல் என்ற சொல்லில் அரசு இருக்கிறது. அரசியலும், அரசு இயலும் இணைந்து நமக்கான வளமான தமிழ்நாட்டை அமைப்போம். இது உங்களால் மட்டும்தான் முடியும்.
முன்பு இருந்ததைவிட கடந்த 3 நாட்களில் நான் அதிகமான உற்சாகத்துடன் இருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய பேச்சும் டானிக் போன்று எனக்கு ஒரு சக்தியை கொடுத்துள்ளது. ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. ஒரு ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. ஒருவரை ஒருவர் நாம் புரிந்துகொள்ள 3 நாள் மாநாடு அடித்தளமாக அமைந்துள்ளது. இதை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த நம்முடைய தலைமை செயலாளருக்கு நான் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
பட்டிமன்றங்களில் நடுவராக இருந்தவர் என்ற காரணத்தால்தான் அனைவருக்கும் பேச அனுமதி கொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவும் வைத்துள்ளார். அதேபோல் காவல்துறை இயக்குனருக்கு நன்றி. பங்கேற்ற துறையின் உயர் அதிகாரிகள், துறையின் செயலாளர்கள், அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த கூட்டத்தில் திட்டமிடுதல் குறித்து அதிகம் பேசினோம். அடுத்து நடக்க இருக்கக்கூடிய இதேபோன்ற கூட்டத்தில் சாதனைகளை பற்றி பேசவேண்டும். அந்த வகையில் அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பிறகு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் கேடயம் வழங்கினார்.
இத்துடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு இன்று நிறைவு பெற்றது.