முக ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டசபையின் முதல் கூட்டதொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது

0
207

முக ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டசபையின் முதல் கூட்டதொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது

சென்னை: தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நாளை மறுநாள் (11-ந் தேதி) சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

இதில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் புதிய எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த கூட்டத்தொடரிலேயே சபாநாயகர், துணை சபாநாயகருக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றன.

இதுதொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கில் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

அப்போது இந்திய அரசமைப்பின் கீழ் உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை தவறாமல் கொண்டு வரவேண்டும்.

பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.