மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் சோதனை வெற்றி – இஸ்ரோ சாதனை
பெங்களூரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பெங்களூருவில் அமைந்துள்ளது. அங்கு தகவல் தொடர்பு, காலநிலை தகவல்கள் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்புதல், கிரகங்களை ஆய்வு செய்ய விண்கலன்களை அனுப்புதல் போன்ற விண்வெளி ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் செயற்கைகோள்களை அனுப்ப புதிய ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. அந்த ராக்கெட் செயற்கைகோள்களை சுமந்து சென்று மேலே அனுப்பிவிட்டு அதன் பாகங்கள் கடலில் விழுந்துவிடும். அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த நிலையில் இந்த ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியது. இதற்கான ராக்கெட் வாகனத்தை (ஆர்.எல்.வி.) இஸ்ரோ தயாரித்து உள்ளது.
இதற்கான சோதனை நேற்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகாவில் உள்ள விமானவியல் சோதனை தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலை 7.10 மணிக்கு இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் அந்த ராக்கெட் வாகனத்தை சுமந்து மேலே சென்றது. 4½ கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்ற அந்த ஹெலிகாப்டர், அந்த ராக்கெட் வாகனத்தை தனியாக அனுப்பியது.
அதன் பிறகு அந்த ராக்கெட் தன்னிச்சையாக செயல்பட தொடங்கியது. அதில் பொருத்தப்பட்டு இருந்த ஒருங்கிணைந்த நேவிகேசன் வழிகாட்டி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த வாகனம் மீண்டும் தரையை, அதாவது இலக்கை நோக்கி வந்தது.
சரியாக காலை 7.40 மணிக்கு அந்த ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இறங்கியது. அதாவது ஹெலிகாப்டரில் இருந்து பிரிந்து சென்ற 30 நிமிடங்களுக்கு பிறகு அந்த ராக்கெட் தரை இறங்கியது. தானியங்கி அடிப்படையில் இயங்கும் அந்த ராக்கெட் வெற்றிகரமாக தரை இறங்கியதை கண்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக இஸ்ரோ பெருமிதத்துடன் கூறியுள்ளது. அந்த ராக்கெட் தரை இறங்கியபோது, 350 கி.மீ. வேகத்தில் இயங்கி கொண்டிருந்தது. இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சென்சார் உள்ளிட்ட பல்வேறு கருவிகள்தான் அதில் பொருத்தப்பட்டு இருந்தன.
இந்த ராக்கெட் வாகனம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது தரை இறங்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.
இந்த ராக்கெட் சோதனைக்கு இஸ்ரோவுடன் இந்திய விமானப்படை, விமானவியல் வளர்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை ஓட்ட நிகழ்ச்சியின்போது இயக்குனர் உன்னி கிருஷ்ணன் நாயர், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் முத்து பாண்டியன் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர்.
இந்த சோதனையை நேரில் பார்த்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட குழுவினரை பாராட்டினார். இதன் மூலம் மறுபயன்பாட்டு ராக்கெட் உருவாக்க வேண்டும் என்ற கனவு நனவாகும் நிலை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.