பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுதினம்.. மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

0
75

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுதினம்.. மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரின் திருவுருவப் படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து கலைஞர் நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக “I belong to the Dravidian stock “ என்று 1962ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தவர் பேரறிஞர் அண்ணா; அது இமயம் முதல் குமரி முனை வரை எதிரொலித்தது.

மாநில உரிமைகளின் குரல், வலிமையாக -ஒற்றுமையாக ஒலித்திட வேண்டிய காலம் இது. அந்தக் குரலை, இந்திய அரசியல் களத்தில் முதன்மையாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் லட்சியச் சுடரை, அவருடைய நினைவிடத்தில் எரிகின்ற அணையா விளக்கு போலக் காத்திட வேண்டிய கடமை, தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் உள்ளது” என பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினத்தில் அவரை நினைவு கூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழக தொண்டர்களுக்குக் கடித எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பேரறிஞர் காட்டிய வழியில் பயணிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டரில், “அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது. பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம்” என தெரிவித்துள்ளார்.