புதுச்சேரி முதலமைச்சராக பதவி ஏற்றார் ரங்கசாமி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

0
172

புதுச்சேரி முதலமைச்சராக பதவி ஏற்றார் ரங்கசாமி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

புதுவை,

புதுவையில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதாவது என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்கப்படுகிறது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளும், பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகளும் ஒதுக்குவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனக்கு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ள ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார். இதையடுத்து, புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இதன்படி, புதுவை யூனியன் பிரதேசத்தின் முதல் அமைச்சராக ரங்கசாமி 4-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் புதுவை துணை நிலை கவர்னர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பாஜகவின் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், புதுச்சேரி பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், திமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. என்.ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

அவரது அரசு, புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நல்லரசாக திகழ்ந்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கட்டும்!

என டுவிட்டரில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.