பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய குழு அமைக்கப்படவேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

0
220

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய குழு அமைக்கப்படவேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

100க்கு 25 பள்ளிகளில் மைதானம் இல்லை!
100க்கு 20 பள்ளிகளில் கழிப்பறையில் உரிய வசதிகள் இல்லை!
நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

சென்னையில் மொத்தமுள்ள 1434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என்றும், 290 பள்ளிகளில் கழிப்பறையில் உரிய வசதி இல்லை மற்றும் 21 பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்பது உள்ளிட்ட பல விவரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இச்செய்தியானது அதிர்ச்சியளிப்பதோடு பல கேள்விகளையும் எழுப்புகிறது.

மைதானம், கழிப்பறை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி? இதுநாள்வரை அப்பள்ளிகள் இயங்கியது எப்படி? என்ற கேள்விகளை எழுப்புவதோடு, உடனடியாக இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மைதானம் இல்லாத பள்ளிகள் அருகிலுள்ள மாநகராட்சி மைதானங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் நடைமுறை எந்த அளவு சாத்தியமானது என்பது கேள்விக்குறியே!.

தலைநகரான சென்னையிலேயே இந்த அவல நிலை என்றால், பிற நகரங்களில், கிராமங்களில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழகமெங்கும் உள்ள அனைத்துப் பள்ளிகளின் அடிப்படை வசதி குறித்த நிலையினை அறிந்திட, சமூக ஆர்வலர்கள், சமூகநல இயக்கங்களை உள்ளடக்கிய குழுவினை அமைத்து எந்தெந்தப் பள்ளிகளில் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதை முழுமையாக ஆவணப்படுத்தி தீர்த்து வைக்கப்படவேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா?