நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதியளித்துள்ளார்- தமிழக அரசு

0
80

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதியளித்துள்ளார்- தமிழக அரசு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் தமிழக கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பலமுறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், இந்த மசோதாவின் மீது விளக்கம் கேட்டு ஆளுநர் 142 நாட்களுக்குப் பிறகு தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பிவைத்தார்.

இதையடுத்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் மீண்டும் சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி கூட்டப்பட்ட சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றி ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை இந்த மசோதா மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். 2021-2022ஆம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக ஆளுநரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின் இறுதியில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.