”திராவிட தலைவர் 70 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 பொன்மொழிகள்” – பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு!

0
363

”திராவிட தலைவர் 70 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 பொன்மொழிகள்” – பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளில் அவரின் பொன்மொழிகள் சிறப்பு தொகுப்புகள்.

1. என்னைச் செதுக்கிய சிற்பிகள்

சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார் – இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா – இயக்கத்தை வழிநடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர் – மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் -ஆகிய நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள்.

2. எனது களம்

எனக்கு உயிரும் – உணர்வுமாய் – தந்தையும் – தாயுமாய் – தலைவருமாய் இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் என்றாவது ஒருநாள் நான் உட்காருவேன் என்றும் அந்தக் காலத்தில் நினைத்தது இல்லை. ஆனாலும் எனது இலக்கை நான் மிகச் சரியாகத் தீர்மானித்தேன். கழகம் தான் என் களம். திராவிடம் தான் என்னுயிர்க் கொள்கை. தமிழ்நாட்டுக்குச் செய்யும் நன்மையே நமது அன்றாடப் பணி என்பதாக என்னை எனது சிறுவயதில் இருந்து வடிவமைத்துக் கொண்டேன்.

3.எனது வாழ்க்கை

மிகச்சிறு வயதில் ஒருவன் இலக்கை மிகச் சரியாகத் தீர்மானித்தால் வெற்றி பெற முடியும் என்பதுதான் இன்றைய தலைமுறைக்கு நான் சொல்லும் ஒற்றை வழிகாட்டி நெறிமுறை. மிகச் சரியான இலக்கு – மிகத் தெளிவான பாதையை அடையாளம் காட்டும். மிகத் தெளிவான பாதை – மிகச் சரியான இலக்குக்கு நம்மைக் கொண்டு சேர்க்கும். இதுதான் எனது வாழ்க்கை.

4. நான் உங்கள் வீட்டுக்கு விளக்காவேன். நாட்டுக்குத் தொண்டனாவேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்!

5. திராவிட மாடல்

* திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும்!

* திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது! சீர் செய்யும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும்!

* திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும்!

6. கலைஞரும் பேராசிரியரும்

கலைஞர் பேச்சு புயல் என்றால்

பேராசிரியர் பேச்சு அமைதி!

கலைஞர் பேச்சு மழை என்றால்

பேராசிரியர் பேச்சு வெள்ளம்!

கலைஞர் பேச்சு சூரியன் என்றால்

பேராசிரியர் பேச்சு நிலா!

கலைஞர் பேச்சு இடிமுழக்கம் என்றால்

பேராசிரியர் பேச்சு எதிரொலி!

7. பேராசிரியர்

தமிழன் இருக்கும் வரை

தமிழ்நாடு இருக்கும் வரை

திராவிடம் இருக்கும் வரை

திருக்குறள் இருக்கும் வரை

பேராசிரியரின் புகழும் இருக்கும்.

8. அரசின் இலக்கணம்

ஒரு விவசாயிக்கு மழையாகவும் – ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும் – ஒரு ஊழியர்க்கு மாதத்தின் முதல் நாளாகவும் – ஒரு தொழில் அதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் திமுக அரசு செயல்படும்.

9. கற்றுக் கொடுத்தார் கலைஞர்

தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்குச் செல்லக் கற்றுக் கொடுத்தார். சித்ரவதைக்குப் பயப்படக் கூடாது என்று கற்றுக் கொடுத்தார்.

மக்கள் எப்போது, எங்கு பாதிக்கப்பட்டாலும் உடனே சென்று அவர்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். மக்களின் வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும் உங்களில் ஒருவனாக இருக்கக் கற்றுக் கொடுத்தார்.

9. அண்ணாவும் கலைஞரும்

அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை. கலைஞர் இல்லை என்றால் நாம் இல்லை.

10. நம் பாதை

கலைஞர் அவர்கள் நமக்கு உருவாக்கிக் கொடுத்த ஐம்பெரும் முழக்கமே என்றும் நம் பாதை ஆகும். * அண்ணா வழியில் அயராது உழைப்போம். * ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். * இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். * வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். * மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி.

“திராவிட தலைவர் 70 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 பொன்மொழிகள்” – பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு !
11. எனது ஐம்பெரும் முழக்கங்கள்

2018 ஈரோடு மாநாட்டில் கழகத்துக்கான எனது ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன்.

* கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்.

* தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்.

* அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்.

* மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்.

* வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்.

12. திராவிடம் என்பது…

திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இடத்தின் பெயராக – இனத்தின் பெயராக – மொழியின் பெயராக – வழங்கப்பட்டு வந்திருந்தாலும் இன்று திராவிடம் என்றால் அது ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது.

13. ஆறும் ஆறாக…

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம்- கருப்பு சிவப்புக் கொடி – உதயசூரியன் சின்னம் – ஆகிய ஆறும் தமிழ்நாட்டு மக்கள் மனத்தில் – இதயத்தில் – சிந்தனையில் – செயலில் ஆறாக ஓட வேண்டும்.

14. தீண்டாமை

தீண்டாமை என்பது சமூகத்தில் எந்த வடிவத்திலும் இருக்கக் கூடாது என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். சட்டம் தடை செய்கிறது என்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கை நெறிகளில் ஒன்றாக தீண்டாமை ஒழிப்பு இருக்க வேண்டும்.

சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது. எனவே மனமாற்றம் அவசியம். மனம் மாறுவார்கள் என்று காத்திருக்க முடியாது.எனவே சட்டங்களும் ஏராளமாகத் தேவை. ஒரு பக்கம் சட்டங்கள், இன்னொரு பக்கம் பிரச்சாரங்கள் – ஆகியவை மூலமாக தீண்டாமை ஒழிப்புக்கு முன்னுரிமை தர வேண்டும்.

15. இரண்டு அடிப்படைகள்

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது சாதி ஒழிப்பும், பெண்ணுரிமையும் ஆகும். ஒன்று இரத்த பேதம் இல்லை என்பது. இன்னொன்று பால் பேதம் இல்லை என்பது.

16. திராவிட மாடல்

சுயமரியாதை – சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம் – மதசார்பின்மை – கூட்டாட்சித் தத்துவம் – அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் – அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம உரிமை – ஆகியவை தான் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம் ஆகும்.

17. கொள்கையும் ஆட்சியும்

தந்தை பெரியார் காலத்தில் பேசியது சமூகசீர்திருத்தம். நாம் இன்று நடைமுறைப்படுத்தி வருவது சமூக வளர்ச்சி. சீர்திருத்தத்தின் அடுத்த பரிமாணம் தான் இன்றைய கழக அரசு உருவாக்கி வரும் சமூக, அரசியல்,பொருளாதார,கல்வி, தொழில் வளர்ச்சியாகும். இதைத் தான் திராவிட மாடல் என்கிறோம்.

ஒரு சீர்திருத்த இயக்கம் ஆட்சிக்கு வந்தால் எத்தகைய கொள்கையைச் சட்டமாகவும் திட்டமாகவும் நிறைவேற்றுமோ அவை அனைத்தையும் நிறைவேற்றிக் காட்டிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் அரசும்.

18. இந்த நாடே…

இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எங்களது இலட்சியம், கொள்கை, இலக்கு ஆகும்.

19. நான் சொன்னேன்…

அரசியலில் இறங்காமல் போயிருந்தால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். ‘அரசியலில் தான் இருந்திருப்பேன்’ என்று சொன்னவன் நான்.

20. அண்ணா வழிகாட்டுகிறார்

எனக்குத் திரும்பத் திரும்ப நினைவில் வரும் சொற்களாக பேரறிஞர் அண்ணாவின், ‘மக்களோடு செல், மக்களோடு வாழ்’ என்பதே இருக்கிறது.

“திராவிட தலைவர் 70 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 பொன்மொழிகள்” – பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு !
21. அப்படியே!

கலைஞர் மட்டுமல்ல, கலைஞரின் பிள்ளையும் அப்படிப்பட்டவன் தான் என்று பெயரெடுக்கவே நான் என்னைப் பக்குவப்படுத்திக் கொண்டேன்.

22. தமிழின் ஆற்றல்

தமிழுக்கு மட்டும் தான் இணைக்கும் ஆற்றல் உண்டு. தமிழால் நாம் இணைந்தால் நம்மை மதத்தால், சாதியால், யாராலும் பிரிக்க முடியாது.

தமிழைக் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது. ஏனென்றால் இது மூல மொழிகளில் ஒன்று. தமிழ் எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்து தான் ஏராளமான மொழிகள் உருவானது.

மொழிக்காக உயிரையே தரத் தயாராக இருந்த தியாகிகளைப் பெற்ற மொழியும் நம் தமிழ் மொழி ஆகும்.

23. திராவிட இயக்கத்தின் விதை

சீர்திருத்தவாதிகள் பேசிவிட்டுப் போயிருப்பார்கள். ஆட்சியாளர்களுக்கு அதன் வாசனையே இருக்காது. தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு சீர்திருத்த இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி, அந்த இயக்கம் சீர்திருத்தக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி – சட்டமாகவும் ஆக்கி அந்த சமுதாயத்தை மேன்மை அடைய வைத்து வருகிறது.

பெரியாரால் கல்வி பெற்றவர்கள், அவரால் வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள், அவரால் அதிகாரத்தைப் பெற்றவர்கள், அவரால் பெண்ணினம் அடைந்த வளர்ச்சிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த எழுச்சிகள் ஆகியவற்றுக்கு இன்றைய தமிழ்நாடே சாட்சி. இது தந்தை பெரியார் போட்ட விதை. பேரறிஞர் அண்ணா அதற்கு எருவூட்டினார். வளர்த்தார் தலைவர் கலைஞர். அதனை மாபெரும் விருட்சமாகக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

24. முதல் முதலீடு & நம்பிக்கை

முதலீடுகளை அதிகம் பெற முதலில் தேவையானது நிதியல்ல, நம்பிக்கைதான். அதுதான் முதல் முதலீடு. அந்த நம்பிக்கை கொண்ட அரசாக தமிழ்நாடு அரசு அடையாளம் காணப்படுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொழில்துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டினை உறுதிப்படுத்த வேண்டும்; பன்முகத் தொழில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும்;

புதிய தொழிற்சாலைகளை ஏராளமாக உருவாக்க வேண்டும்; ஏற்கெனவே இருக்கக்கூடிய தொழிற்சாலைகளை விரிவுபடுத்த வேண்டும், ஒரே இடத்தில் தொழில்கள் குவிந்துவிடக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் தொழில்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும்; அப்படி அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் அந்தந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருவாரியான வேலைவாய்ப்பைப் பெற வேண்டும்.

25. காவிரி நமது வாழ்வுரிமை

தமிழ்நாட்டுக்குக் காவிரி என்பது வாழ்வுரிமையாகும். அது எந்தளவு உண்மையோ, அந்த அளவுக்குக் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மை.

காவிரியின் உரிமைக்காக நாம் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “காவிரிப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என்று ஒன்றிய அரசுக்கு 05.09.1969இல் கடிதம் எழுதியவர். நடுவர் மன்றம் அமைக்க முதன்முதலில் 17.2.1970இல் கோரிக்கை விடுத்தவர்.

02.06.1990 அன்று நடுவர் மன்றம் அமைய, காரணமாக இருந்தவர். 20.07.1990இல் அதன் முதல் விசாரணை நடைபெற்றது. அந்த நடுவர் மன்றத்திற்கு “இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு” என்ற உத்தரவினை உச்சநீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொடுத்தவர் தலைவர் கலைஞர். இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் 11.08.1998 அன்று வரைவுத் திட்டம் உருவாக்கி,

அதற்குப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் முதலமைச்சர்கள் இடம்பெற்ற காவிரி நதிநீர் வாரியம் அமையப் பாடுபட்டவர். காவிரி நடுவர் மன்ற விசாரணையை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து 05.02.2007 அன்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைப் பெற்றதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசுதான்.

26. 2030-க்குள் 1 இலட்சம் கோடி டாலர்

2030ஆம் ஆண்டிற்குள் ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டினை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள். தொழில்புரிவதை மிகவும் எளிதாக்கிடவும், அதற்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கிடவும், நான் உறுதி பூண்டுள்ளேன். முதலீட்டாளர்கள் தொழில் துவங்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்களது திட்டத்தினை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுவதற்குஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 தொடங்கப்பட்டுள்ளது.

தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே தமிழ்நாடு அரசின் கதவுகள் திறக்கும் என்ற உறுதியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.

27 . குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்

அரசாங்கத்தில் இருக்கும் எத்தனையோ துறைகளைப்போல காவல்துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. ஒரு அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது, அமைதியைத்தான். அந்த அமைதியை ஏற்படுத்தித் தரவேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்குத்தான் உண்டு. எந்த ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்துவிட்டால், பொதுமக்கள் பாதுகாப்பான சூழலை உணர்ந்துவிட்டால் அந்த நாட்டில் மற்ற செயல்களைச் சரியாகச் செய்யலாம்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும். முதலீடுகள் பெருகும். அச்சமற்று மனிதர்கள் தங்களது உழைப்பைச் செலுத்துவார்கள். கல்வி மேன்மை அடையும். வேலைவாய்ப்புகள் பெருகும். அத்தகைய அமைதியை உருவாக்கும் பணியைக் காவல்துறை செய்கிறீர்கள்.

குற்றங்களுக்குத் தண்டனை வாங்கித்தரும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக காவல்துறை மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.

28. காலநிலை மாற்றம்

இன்று காலநிலை மாறுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. வெப்பச் சலனம் அதிகமாகி வருகிறது. வடமாநிலங்கள் சிலவற்றில், பல நேரங்களில் வெப்ப அலை அடிக்கத் தொடங்கி இருக்கிறது. உலகின் ஒரு சில பகுதிகள் ‘வெட் பல்ப் டெம்பரேச்சர்’ தன்மையை எட்டிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல் தன்னைத்தானே குளிர்விக்கும் தன்மையை இதனால் இழக்கும். இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். சீரான பருவம் என்பது குறைந்து வருகிறது. பருவ மழைக்காலம் என்பது கூட வரையறுக்க முடியாததாக இருக்கிறது. காலநிலை மாற்றம் என்பதை மானுடத்தின் மிக முக்கியமான பிரச்சினையாகத் தமிழ்நாடு அரசு கருதுகிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து மேற்கொள்வோம். இயற்கையைச் சீரழித்துவிடாமல், சீர் செய்யும் கடமை நமக்கு உள்ளது.

29. காந்தி & தமிழ்நாடு & தமிழர்கள்

மகாத்மா காந்திக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு ஆழமானது. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நடத்திய அத்தனைப் போராட்டங்களிலும் தமிழர்கள் முன்னின்றனர். அங்கு நடைபெற்ற இனவெறியின் உக்கிரத்தைத் தாங்கிய தமிழர்களைத் தன் உடன்பிறந்த சகோதரர்கள் என்று மகாத்மா காந்தி அறிவித்தார். தமிழர்கள் மகாத்மா காந்தியை நெஞ்சார நேசித்தார்கள்.

மகாத்மா காந்தியும் தமிழர்கள் மட்டுமின்றி தமிழ்மொழி மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தியை, மேலாடை துறந்த மகாத்மாவாகத் தமிழ்நாடு வழியனுப்பி வைத்தது. சாதி, மதம், இனம் குறித்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்தியத் திருநாட்டை வழிநடத்தக் கிடைத்த ஒப்பற்ற ஆயுதம் காந்தியச் சிந்தனைகள்.

30. படிப்பு & படிப்பு & படிப்பு

திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பதுதான். இந்த இயக்கமே அதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆட்சியைப் பிடித்தபிறகு அந்த நோக்கத்தை நிறைவேற்றும் காரியங்களையே அதிகம் செய்தும் வருகிறது. நிறைவேற்றியும் வருகிறது.

தமிழகத்தின் இளைய சக்தி அனைத்தும் உயர் கல்வியை அடைந்ததாக மாற்றுவதுதான் இந்த அரசின் உயரிய இலக்கு ஆகும். கல்லூரிச் சாலைக்குள் செல்லும் மாணவர்களுக்கு மூன்று முக்கிய இலக்குகள் இருக்க வேண்டும் என்று புரட்சியாளர் இலெனின் அவர்கள் சொன்னார்கள். படிப்பு, படிப்பு, படிப்பு ஆகிய மூன்றையும்தான் இலக்காகச் சொன்னார்கள். மூன்று முறை சொன்னதற்குக் காரணம், படிப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

31. வழிகாட்டும் திராவிட மாடல்

இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், அதுதான் எங்களுடைய இலட்சியம். அதுதான்எங்களுடையஇலக்கு. சாதியால், மதத்தால் பிளவுபடாமல் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி, என்று நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்குக் காரணமே சமத்துவச் சிந்தனைதான்.

இந்தத் தமிழ்நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். இந்த இந்திய நாடே சமத்துவ நாடாகவும், சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். இதற்குத் தமிழ்நாடும் நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும்.

32. மக்களிடம் செல்

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு வாசகத்தை அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வார்.

‘‘மக்களிடம் செல் ; அவர்களோடு வாழ் ; அவர்களை நேசி ; அவர்களிடமிருந்து கற்றுக்கொள் ; அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு ; அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டுமானம் செய் !

பணி முடிந்த பிறகு அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தி விட்டுத் திரும்பி வா. இந்த வாசகத்தை நாம் இதயத்தில் எழுதி ஒட்டிக்கொள்ள வேண்டும். பணியில் எந்தச் சிக்கல் வந்தாலும் இந்த வாசகத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

33. அழாத பிள்ளைக்கும் பால்

“அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக தி.மு.க. அரசு என்றைக்கும் இருக்கும்; என தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களையும் அன்போடு அரவணைத்து அவர்களுக்கு அனைத்துமாக இருக்கும் அரசாக தி.மு.க. அரசு நிச்சயம் இருக்கும் என்று சொன்னார்கள். அதைத்தான் நானும் வழிமொழிகிறேன்.

34. இது சாமானியர்களுக்கான ஆட்சி

மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானாலும், நமக்கு நாமே திட்டமானாலும், அண்ணா மறுமலர்ச்சித் திட்டமானாலும், சமத்துவபுரங்களானாலும், அனைத்தும் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடியத் திட்டங்களாக நம்முடைய கழக அரசு அமைத்து வருகிறது. இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி, சாமானியர்களின் ஆட்சி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

35. வேறுபாடே இல்லை

ஏழை, பணக்காரர், கிராமம், நகரம், பெரிய தொழில், சிறிய தொழில், வட மாவட்டம், தென் மாவட்டம் என்ற எந்த வேற்றுமையும் நாங்கள் பார்க்கப்போவதில்லை. ஒட்டுமொத்தமாக ஒளிமயமான தமிழ்நாட்டை அமைப்பதற்கு நாங்கள் பாடுபடப் போகிறோம்.

36. ஒரு தாய் மக்கள்

புலம்பெயர்ந்து நம்முடைய தாய்த் தமிழ்நாட்டிற்கு வந்து வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களை ஒரு அடையாளச் சொல்லாகத்தான் இலங்கைத் தமிழர்கள் என்று நான் அழைத்தேன். மற்றபடி தமிழர்கள் அனைவரும் எங்கே, எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான் என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. அந்த அடிப்படையில் சொன்னால், தமிழகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவர்கள்.

இன்னும் மகிழ்ச்சியாக, பெருமையாக, பூரிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் அனைவரும் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள். கடல்தான் நம்மைப் பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் நம்மை இன்றைக்கு இணைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய தாயகத்தில் பாதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களுக்காக குரல் கொடுத்துவரக்கூடிய இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

37. அஸ்வினி

நான் ஒரு சில மாதங்களுக்கு முன்னால், தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு செய்தியைப் பார்த்தேன். மாமல்லபுரம் அருகில் பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு நரிக்குறவர் பெண்ணுக்கு உணவளிக்க மறுத்து இருக்கிறார்கள். உள்ளே விட மறுத்திருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் இருக்கின்ற ஒரு பெண் அதை அப்படியே செய்தியாக்கி அதை வீடியோவில் பேசியதை நானும் பார்த்தேன்.

அந்த உணவளிக்கக்கூடிய நிகழ்ச்சியில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை அனுமதிக்காமல் இப்படி ஒரு கெட்ட காரியத்தை செய்திருக்கிறார்களே என்று நான் கோபப்பட்டேன். உடனே அறநிலையத்துறை அமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்தச் செய்தியைச் சொன்னேன்.

அங்கே சாப்பாடு போடுகின்ற இடத்தில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்து இருக்கக் கூடிய ஒரு பெண்ணை அனுமதிக்காமல், ஒரு கொடுமையைச் செய்திருக்கிறார்களே, இது நியாயமா? என்னவென்று விசாரியுங்கள். அந்தப் பெண்ணை அந்தக் கோயிலில் உட்காரவைத்து எல்லோருக்கும் மத்தியில் உட்கார்ந்து அவரை சாப்பிட வைக்க வேண்டும் அதுமட்டுமல்ல, அமைச்சராக இருக்கக்கூடிய நீங்களே அருகில் இருந்து சாப்பிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன்.

அதற்குப் பிறகு அவர் அந்த இடத்திற்குச் சென்று உடனே அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, அந்தக் கோயிலில் நடைபெறுகின்ற அன்னதானத்தில் பங்கேற்கவைத்து அருகில் உணவு அருந்தியக் காட்சியை நான் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதி ஆனது. இது எனக்குப் பெருமை என்பதை விட அந்தப் பெண் தைரியமாக வாதாடியதுதான் எனக்குப் பெருமை. அந்தப் பெண் பெயர் அஸ்வினி.

38. அடக்கம் பலவீனம் ஆகாது

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு. ஆனால், அதில் கர்வமோ, ஆணவமோ இருக்காது. ஜனநாயகமும், மரபுகளும் நிச்சயமாக அதிலே இருக்கும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆணவம் இருக்காது; கர்வம் இருக்காது. ஜனநாயகம்தான் இருக்கும். மரபுகளும் கடைப்பிடிக்கப்படும் .

தோல்வியில் துவள்வதும், வெற்றியில் இறுமாப்புக் கொள்வதும் எங்களுடைய வழக்கமல்ல, அப்படி எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்கள் எங்களை வளர்க்கவும் இல்லை. ஆகவே, தமிழக மக்கள் அளித்திருக்கக்கூடிய இந்த மாபெரும் வெற்றி, எங்களை மேலும் மேலும் அடக்கமுள்ளவர்களாக ஆக்கி இருக்கிறது. கட்டுப்பாடோடு இருப்பதோ, அடக்கத்தோடு இருப்பதோ சட்டமன்றத்தினுடைய ஜனநாயகத்தைக் காப்பாற்றிடவே. அதை எந்தவிதத்திலும் பலவீனமாக யாரும் கருதிடக் கூடாது.

39. மக்களாட்சியின் மாண்புகளைக் காப்போம்!

கோட்டையில் நாங்கள் உட்கார்ந்து கொண்டு, என்னதான் திட்டங்களைத் தீட்டினாலும், அந்தத் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால், அதை மக்களுடைய உள்ளத்தில், மக்களுடைய கையில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

மக்களாட்சியின் மாண்புகளையும், ஜனநாயகத்தின் நெறிமுறைகளையும் காப்பதில், இந்த அரசு எப்போதும் முதன்மையான மாநிலமாக இருக்கும். முதன்மையான அரசாக இருக்கும்.

எப்போதெல்லாம் ஜனநாயகம் அல்லது மக்களாட்சி தத்துவத்திற்கு ஊறு விளைகிறதோ, அப்போதெல்லாம் நம்முடைய கழக ஆட்சி அதை சரிசெய்வதோடு, களத்திலே உங்களில் ஒருவராய் இந்த அரசு நிச்சயம் நிற்கும்.

40. நம்பிக்கையைக் காப்பேன்

‘இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக நானும், பேராசிரியரும், உழைத்துக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்குப் பின்னால் இந்தப் பணியை யார் செய்வார்கள் என்று கேட்பீர்களேயானால், இந்த மேடையில் உட்கார்ந்திருக்கிற தம்பி ஸ்டாலின்தான் அதனைச் செய்ய வேண்டும். சிறப்பாகச் செய்வார் என்று நானும் பேராசிரியரும் நம்புகிறோம்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்திலே வெளிப்படையாக அறிவித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியப் பெருந்தகை அவர்களும் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறேன்.

‘நான் கலைஞர் அல்ல; அவரைப் போலப் பேசத் தெரியாது; அவரைப்போல எழுதத் தெரியாது; அவரைப் போல உழைக்க முயன்று பார்ப்பேன்’ என்று அப்போது நான் உறுதி அளித்தேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றி வருகிறேன்.

“திராவிட தலைவர் 70 : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 பொன்மொழிகள்” – பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு !
51. எல்லார்க்கும் எல்லாம்

எல்லா அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கும், இந்த அரசுக்கும் ஒரு நோக்கம், ஒரு பாதை இருக்கிறது. அதற்கு ‘திராவிட மாடல்’ என்று நான் பெயர் சூட்டி இருக்கிறேன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதுதான் இதனுடைய உள்ளடக்கம். ‘திராவிட மாடல்’ எது என்று கேட்டால், அது என்னுடைய இதயத்தில் மட்டுமல்ல; தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும் என்ற முற்போக்கான எண்ணம் கொண்ட அனைவரது உள்ளத்திலும் உள்ளது. இந்தக் கூட்டு எண்ணம்தான் அரசின் இதயத் துடிப்பாக விளங்குகிறது.

52. ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’ என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஒரு பாடல் எழுதினார். அப்படித்தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

நம்முடைய தலைவர் கலைஞரிடத்தில் ஒரு பத்திரிகை நிருபர் ஒரு கேள்வியைக் கேட்டார், உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள் என்று, கலைஞர் சொன்னார், ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று சொன்னார். அந்த உழைப்பைக் கற்றுக் கொடுத்தவரே அவர்தான். அப்படி உழைப்பதற்கு எனக்கு ஊக்கம் கொடுத்தவரே அவர்தான்.

53 . கல்வி தடம் புரளாமல் இருக்க…

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவரது சிந்தனையும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால்தான், கல்வி நீரோடை மிக சீராகச் செல்லும். அதில் எவர் ஒருவர் தடங்கல் போட்டாலும் கல்வியானது தடம் புரண்டுவிடும்.

உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் தடைபோடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள். வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை தயவுசெய்து அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும், பள்ளிகளாக இருந்தாலும் மாணவச் செல்வங்களை வளர்த்தெடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

54. வெறுப்பும் & பகையும், எதையும் சாதிக்காது!

மாணவர்களாகிய நீங்கள் சமூகத்தில் உள்ள பல நிலைகளில் பொறுப்புகளை எதிர்காலத்தில் ஏற்க இருக்கிறீர்கள். சமூகத்தின் அனைத்துப் பின்னணியில் இருந்தும் வருபவர்களையும் சமமாக, உங்களில் ஒருவராகப் பார்க்கும் பழக்கத்தை, உயர்ந்த பண்பை நீங்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஏற்றத் தாழ்வுகள், வேற்றுமைகளைக் கடந்து இங்கே நீங்கள் நண்பர்களாக இருக்கிறீர்கள்.

இந்த நட்புணர்வு பள்ளிக் காலத்தோடு நின்று விடக்கூடாது, என்றென்றும் இந்த நட்புணர்வு தொடர வேண்டும். இந்த ஒற்றுமை உணர்வு இருந்தால் தான் நம் மாநிலம் ஆனாலும், நாடானாலும் வளர்ச்சியைப் பெற முடியும். வெறுப்புணர்வால் பகைமையுணர்வால் சாதிக்கப் போவது எதுவுமே கிடையாது. தமிழர், இந்தியர் என்று நாம் சொல்கின்ற அடையாளங்கள் நம் அனைவரையும் இணைக்கின்ற அடையாளங்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் வெறுப்பதற்கான கருவிகளாக அவை அமைந்துவிடக் கூடாது.

55. நீதித்துறையின் சுதந்திரம்

சட்டத்தின் ஆட்சியை, சமூக நீதியின் ஆட்சியை, நீதிநெறிமுறைகளையும், விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும், சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது.

அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த அரசு செய்து வருகிறது.

56. திமுக ஆட்சி என்பது…

திமுக ஆட்சி என்பது, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக இருக்கும். பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியின் ஆட்சியாக இருக்கும். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய நவீன மேம்பாட்டு ஆட்சியாக இருக்கும். பெருந்தலைவர் காமராசரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக இருக்கும். தோழர் ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக இருக்கும்.

57. எனது ஏழு வாக்குறுதிகள்

* வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு!

* மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!

* குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!

* அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!

* எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்

* உயர்தர ஊரகக் கட்டமைப்பு

* அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!

58. முன்னோடி அயோத்தி தாசப் பண்டிதர்

தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரையில், “இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது. ஒன்று, தமிழன்; இன்னொன்று, திராவிடம். இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொல்லாக மாற்றியவர்தான், அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.

1881ஆம் ஆண்டே மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ‘பூர்வத் தமிழர்’ என்று பதியச் சொன்னவர் பண்டிதர் அவர்கள். அவர் போட்டுக்கொடுத்த பாதையில்தான் தமிழ்நாட்டு அரசியல் செயல்பட்டு வருகிறது.

59 . உழைப்பேன், உழைப்பேன், உழைப்பேன்

தடைகள் இல்லாத வாழ்க்கை ஏது? எனது வாழ்க்கையில் நான் சந்தித்த தடைகள் தான் என்னைக் கூர்தீட்டி இருக்கின்றன; பக்குவப்படுத்தி இருக்கின்றன. உறுதியானவனாக என்னை நிற்க வைத்திருக்கின்றன. மனிதர்களை அடையாளம் காட்டி இருக்கின்றன.

எனவே தடைகள் காலம் காலமாக இருப்பவைதான். இந்தத் தடைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கக்கூடிய எதிர்மறைச் சிந்தனை கொண்டவனாக இருக்கக்கூடியவன் அல்ல நான். இந்தத் தடைகளைத் தகர்த்து வெற்றிபெற வேண்டும் என்ற நேர்மறைச் சிந்தனை கொண்டவன் நான்.

60. எனது பலம்

மற்றவர்களின் பலவீனத்தை நம்பி அரசியல் செய்யக்கூடியவன் அல்ல நான். என் பலத்தை நம்பியே நான் அரசியல் செய்ய நினைக்கிறேன். எனது பலம் என்பது எனது இலக்கில் இருக்கிறது. இந்த இலக்கை எப்படியும் நான் அடைவேன்.

61. தெற்கில் இருந்து வரலாறு!

அமிழ்தினும் இனிய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். உலகில் மிக மூத்த இனமான தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மொழிப்பெருமையும், இனப்பெருமையும் கொண்டவர்கள் நாம்.

கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் ஆய்வுகள் இப்போது மீண்டும் சிறப்பாகத் தொடங்கி இருக்கின்றன.

சங்ககாலத் துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவ சமுத்திரம் ஆகியவை முக்கிய பங்காற்றின. அவற்றையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு மேற்காணும் அகழாய்வுகளும், முன்கள புல ஆய்வுப் பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும்.

62. அதிகம் பேசமாட்டேன்.

நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். ஒரு அடுக்குமொழி உண்டு. பேச்சைக் குறைத்து நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். ஆங்கிலத்திலே ஒரு வார்த்தை உண்டு. “ஞிஷீ ஷீக்ஷீ ஞிவீமீ” “செய் அல்லது செத்து மடி”.

ஆனால், அதைக்கூட வார்த்தையை கொஞ்சம் திருத்தம் செய்து சொல்ல வேண்டும் என்று சொன்னால் என்னைப் பொருத்தவரையிலே, இந்த ஞிஷீ–வுக்கும் ஞிவீமீ–க்கும் இடையில் உள்ள ஷீக்ஷீ – என்ற வார்த்தையை நீக்கி விட்டு ஞிஷீ ணீஸீபீ ஞிவீமீ செய்து முடித்து விட்டுத் தான் முடிவடைய வேண்டும்.

63. ‘நான் முதல்வன்’ திட்டம்!

புறத் தடைகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உடைக்க வருகிற திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் ஆகும்.

அனைத்து மாணவர்களையும், இளைஞர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக, சிந்திக்கும் திறம் படைத்தவர்களாக, தனித்திறமை கொண்டவர்களாக, தொழில்திறன் கொண்டவர்களாக, நிறுவனங்களை நடத்துபவர்களாக, அவர்களை உருவாக்க எனக்கு நானே உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

64. பழம் பெருமை

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் நம்முடைய பழமையை, பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வியக்கத்தக்க வகையில் செங்கல் கட்டுமானங்கள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள், அரிய கல்மணிகள், தங்க அணிகலன்கள், சிந்துவெளி நாகரிக காலத்தில் காணப்பட்ட அதே, திமில் கொண்ட காளையின் எலும்புகள், விளையாட்டுப் பொருள்கள், தொழிற்பகுதிகள் – என ஒரு செழுமைமிக்க சமூகமாக சங்காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு இனம் கடந்த கால வரலாற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அதனை ஆவணப்படுத்த வேண்டும். அதனை வரக்கூடிய வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லித் தரவேண்டும். எத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமிதம் நமக்கு வேண்டும்.

65. அறிவியக்கம்

திராவிட இயக்கம் என்பதே அறிவியக்கம்தான். நூற்றாண்டுகளாய் அடிமைப்படுத்தப்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஊட்டியது திராவிடஇயக்கம்தான்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக அலுவலகத்தின் பெயரே அண்ணா அறிவாலயம். அந்த அறிவாலயம் தொடங்கப்படுவதற்கு முன்பு தி.மு.க.வின் முதல் தலைமையகம் எது என்று கேட்டீர்கள் என்றால் இராயபுரத்தில் இருக்கக்கூடிய அறிவகம்.

ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்குப் புத்தகம் அச்சடித்து சுயமரியாதைப் பரப்புரையில் ஈடுபட்டு அறிவுப் புரட்சியை ஏற்படுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

66 . பின்வாங்க மாட்டோம்!

தமிழ்நாட்டில் எந்தத் தனிமனிதருக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒரு நிலைமையை உருவாக்க வேண்டும். அதுதான் என் இலட்சியம். அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைந்தாக வேண்டும். அரசிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை, ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மனுக்கள் மீது நாம் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றால் மீண்டும், மீண்டும் மனுக்களை மக்களிடம் இருந்து பெறக்கூடிய நிலையைத்தான் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது உறுதியாகச் சொல்கிறேன். இத்தகைய சுழற்சி முறையை எப்போதும் நாங்கள் நிறுத்த மாட்டோம். சிலர் நினைக்கலாம், இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள், ஆரம்பத்தில் இப்படித்தான், கல்யாண ஜோர், புது மாப்பிள்ளை என்று நினைப்பார்கள். உறுதியாகச் சொல்கிறேன், நாங்கள் எப்போதும் இப்படித்தான் இருப்போம். எந்த நிலையிலும் இதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

67 . சொல்லும் செயலும்

செயல் – அதுவே சிறந்த சொல் என்று நினைக்கக் கூடியவன் நான். ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக இருந்தால், எதனையும் செயல்படுத்தக் கூடியவன் நான். அவதூறுகள், பொய்கள், விதண்டா வாதங்களுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

மக்கள் என்னை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கான முழு நன்மைகளையும் எனது ஆட்சி காலத்தில் செய்து முடிக்கப்பட வேண்டும் என்பது ஒன்றே எனது இலக்கு ஆகும். தங்களது இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காக வீண் அவதூறுகளை யார் சொன்னாலும் அதற்கு நான் பதில் அளிப்பது இல்லை. அதனை படிக்கிறேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என நினைத்துக் கொள்வேன். அடுத்த நொடியே, ஆக்கபூர்வமாக அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனைக்குள் நான் போய்விடுவேன்.

என்னுடைய இந்த பாணி, எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்துள்ளது. அவர்களுக்கு அரசியல் செய்ய நான் வாய்ப்பு அளிப்பது இல்லை என்பது தான் அவர்களது அதிகப்படியான கோபம் என்று நினைக்கிறேன்.

68. இவை இருந்தால் போதும்!

மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பது தான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பது தான் ஒற்றுமை.

ஏழைகள் மீது கருணை காட்டு என்பது தான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பது தான் தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு கொடு என்பதுதான் பகிர்தல். இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும்.

69. நானும் கலைஞரும்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசு சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது ஆகும். எனது தலைமையிலான அரசு சொல்லாததையும் செய்வோம் சொல்லாமலும் செய்வோம் என்று இயங்கும் அரசு ஆகும்.

70. நீங்கள் தெரிவித்திருக்கக்கூடிய வாழ்த்துகளை, உற்சாகத்தை உங்களுடைய நம்பிக்கையை என்றும் மனதில் வைத்துக்கொண்டு, என்னுடைய பணியை உங்களுக்காக நிறைவேற்ற காத்திருக்கிறேன், தயாராக இருக்கிறேன்