திமுக மீதான விஜய் விமர்சனம்.. ஒற்றை வரியில் பதில் கொடுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மேனாள் நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் திமுகவை தாக்கிப் பேசினார். அதில், “சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு, வேங்கைவயல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததுபோலவே எனக்குத் தெரியவில்லை. இத்தனை வருடங்கள் தாண்டி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.
மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் விளையாட்டுத் துறை நிகழ்வை முடித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் விஜய் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒரு வரியில் பதிலளித்த அவர், “நான் சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை” என்று கிண்டலாக பதிலளித்தார்.