தமிழக சட்டசபை தேர்தல் : அனைவருக்கும் இலவச மருத்துவம்- பாமக தேர்தல் அறிக்கை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் சட்டசபை தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும்.
* தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்.
* 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம்.
* மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
* பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை அரசே செலுத்தும்.
* அரசு பள்ளிகளில் ஒப்பந்த, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர்.
* அனைவருக்கும் இலவச மருத்துவம், வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்து காப்பீடு வழங்கப்படும்.
* 50 வயதைக் கடந்த அனைவருக்கும் முழு மருத்துவப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
* கருவுற்றப் பெண்களுக்கான மகப்பேறு கால நிதியுதவி ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.
* வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும்.
* உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இடுபொருள் மானியம் வழங்கப்படும்.
* பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடனில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் லோக்அயுக்தா அமைப்பு வலிமையானதாக மாற்றப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்குக் காலமுறை ஊதியத்துடன் கூடிய வேலை உறுதி செய்யப்படும்.
இவ்வாறு பாமகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.