சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்பு ; மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சென்னை,
தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் திமுக சார்பாக ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மு.அப்பாவு பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல பேரவை துணைத்தலைவருக்கான பதவிக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கு.பிச்சாண்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் பேரவைத் தலைவராக அப்பாவுவும், துணைத்தலைவராக பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வாகினர்.
இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். அப்போது சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார். அவரை சபாநாயகர் இருக்கைக்கு வந்து அமரும்படி அழைப்பு விடுத்தார். சபாநாயகர் இருக்கையில் இருந்து கு.பிச்சாண்டி இறங்கினார்.
இதைத் தொடர்ந்து அப்பாவுவை சபை உறுப்பினர்கள் வரவேற்று மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் எழுந்து அப்பாவுவின் கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அனைவரையும் வணங்கி சபை நிகழ்ச்சியை நடத்தினார்.
இதையடுத்து துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவியேற்றார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர்கள், சபை உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
இறுதியாக சபாநாயகர் அப்பாவு ஏற்புரை நிகழ்த்தி பேசினார்.
தமிழக சட்டசபையில் சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு சட்டசபையின் 18-வது சபாநாயகர் ஆவார்.
சட்டசபையில் இதற்கு முன்பு சபாநாயகராக சிவசண்முகம் பிள்ளை, கோபாலமேனன், கிருஷ்ண ராவ், செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், கோவிந்தன், மதியழகன், முனுஆதி, ராஜாராம், பி.எச்.பாண்டியன், தமிழ்க்குடிமகன், சேடப்பட்டி முத்தையா, பி.டி.ஆர்.பழனி வேல்ராஜன், காளிமுத்து, ஆவுடையப்பன், டி.ஜெயக்குமார், தனபால் ஆகியோர் சபாநாயகராக பதவி வகித்துள்ளனர்.
இதில் கோவிந்தன், தனபால் ஆகியோர் இருமுறை சபாநாயகர்களாக இருந்துள்ளனர்.
இப்போது 18-வது சபாநாயகராக பதவி ஏற்றுள்ள அப்பாவு 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. சார்பில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக சிறப்பாக பணியாற்றியவர். 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர்.
2006-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 2011-ம் ஆண்டு இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. 2016-ம் ஆண்டு தேர்தலில் இதே ‘ராதாபுரம்’ தொகுதியில் அப்பாவு மீண்டும் போட்டியிட்டபோது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி அவர் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.
அந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் கோர்ட்டில் மீண்டும் எண்ணப்பட்டது. ஆனால் இதுவரை தீர்ப்பு வரவில்லை.
இந்த நிலையில் தற்போது நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் அதே ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்று சட்டசபை சபாநாயகர் ஆகி உள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த முறை அவர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அதே சட்டபைக்கு இப்போது அவர் தலைவராகி உள்ளார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் சபாநாயகரை வாழ்த்தி பேசினார். அப்போது
சட்டப்பேரவையில் சபாநாயகரின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். சபாநாயகராக அப்பாவு அமர்ந்திருப்பதை பார்க்கும் போது என் மனம் பூரிப்படைகிறது.
அனைத்து தொலைக்காட்சிகளிலும் கருத்தோடும் சுவையோடும் பேசுபவர் அப்பாவு, அவர் போட்டியின்றி தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அண்ணாவின் தம்பிகளாகிய எங்களுக்கு ஆண்வம் இருக்காது. கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை நாட்கள் முழுமையாக நடைபெற ஒத்துழைப்போம் என்றார். இதையடுத்து அப்பாவுவிற்கு வாழ்த்து தெரிவித்து பேசிய அவர், பேரவைத் தலைவர் ஆசிரியரைப் போல் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சபாநாயகர் பதவி ஏற்பு, வாழ்த்துரை முடிந்ததை அடுத்து தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
தமிழக சட்டசபை செய்திகள், முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ,சபாநாயகர் அப்பாவு