கொரோனா தடுப்பூசியில் சாதனை! – 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை கடந்துள்ளது.