“உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்”- குவாட் மாநாட்டில் மோடி
“உக்ரைனில் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்” என குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷ இடா ஆகியோருடன் காணொளி வாயிலாக நடந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஆகியவை தான் குவாட் அமைப்பின் முக்கிய குறிக்கோள். எனவே அதனை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அந்தவகையில் மனிதாபிமான நடவடிக்கைள், பேரிடர் நிவாரணம், தூய்மையான எரிசக்தி ஆற்றல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் குவாட் அமைப்பின் யதார்த்தமான மற்றும் உறுதியான கூட்டுறவு அவசியம்” என்று வலியுறுத்தினார் அவர்.
இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது அதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “அமைதியான மற்றும் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு திரும்புவது தான் போரை நிறுத்த வழிவகுக்கும்” என அறிவுறுத்தினார்.