ஆவின் பாலின் கொள்முதல் விலையைக் கூட்டுக! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!!

0
210

ஆவின் பாலின் கொள்முதல் விலையைக் கூட்டுக! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!!

பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு பாலுக்கான உற்பத்தி செலவினங்களுக்கேற்றவாறு கொள்முதல் விலை கிடைக்கவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி பால் கிடைப்பதை உறுதி செய்யவும் 1958ல் கர்மவீரர் காமராஜர் ஆட்சி காலத்தில் பால்வளத்துறை உருவாக்கப்பட்டு தமிழ்நாடு பால்வள நிறுவனமாக செயல்பட்டு வந்தது
உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள், பொதுமக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமாக உருவாக்கப்பட்ட ஆவின் நிறுவனத்தில் கடந்த கால அதிமுக ஆட்சி தொடங்கி தற்போதைய திமுக ஆட்சி வரை “அவர்களுக்கு இவர்கள் சளைத்தவர்கள் அல்ல” என்பதைப் போல சர்ச்சைகளுக்கும், ஊழல், முறைகேடுகளுக்கும் குறைவில்லாமல் அவை பிரிக்க முடியாத சக்தியாக இருப்பதை காணும் போது “பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப் போய்க் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது”.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சர்களாக இருந்த மாதவரம் மூர்த்தி, ராஜேந்திர பாலாஜி மற்றும் அப்போதைய நிர்வாக இயக்குனர்களாக இருந்த காமராஜ் ஐஏஎஸ், நந்தகோபால் ஐஏஎஸ், விற்பனை பிரிவு மேலாளராக இருந்த ரமேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது பால் கொள்முதல், இயந்திரங்கள் கொள்முதல், ஊழியர்கள் நியமனம், பால் விற்பனை, பால் பொருட்கள் உற்பத்தி என பல்வேறு பிரிவுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதிகாரிகள், அமைச்சரின் கூட்டு முறைகேடுகளால் ஆவினுக்கு பல நூறு கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதையும் பால்வள தணிக்கைத்துறை சுட்டிக் காட்டியிருப்பதையும் ஆதாரங்களுடன் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து குரல் எழுப்பி அவை ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த போது அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஆளுங்கட்சியை கடுமையாக சாடியது.
தேர்தல் பிரசாரத்தின் போது கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் பால்வளத்துறையில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம், ஊழல் முறைகேடுகளில் தொடர்புடைய அமைச்சர், அதிகாரிகள் எவரும் தப்பிக்க முடியாது என்றார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 16மாதங்கள் கடந்து விட்ட பிறகும் கூட இதுவரையிலும் ஆவின் ஊழல், முறைகேடுகளில் தொடர்புடைய ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதே சமயம் கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் முன்பை விட தற்போது அதிகமாக நடப்பதாக கூறி ஆதாரங்களுடன் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எழுகின்ற குரல்களுக்கு தமிழக அரசு மதிப்பளிப்பதில்லை
மேலும் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தவில்லை. ஆனால் ஆவின் பால் பொருட்களுக்கான விற்பனை விலையை மட்டும் 2019 முதல் நடப்பாண்டு வரை 4முறை உயர்த்தியுள்ளது.
அதே சமயம் கடந்த மூன்றாண்டுகளில் கால்நடைகளுக்கான தீவனங்களின் விலையேற்றம், மருத்துவ செலவினங்கள் என பால் உற்பத்திக்கான செலவினங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் தமிழகத்தில் தினசரி உற்பத்தி, விற்பனை ஆகும் பாலில் 16% கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனத்தின் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 15.00 ரூபாய் உயர்த்தி வழங்கிட உத்தரவிட வேண்டும்.
மீதமுள்ள 84% பால் கொள்முதல் மற்றும் விற்பனையை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருப்பதால் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை சுமார் 8முறை பால் விற்பனை விலையை லிட்டருக்கு 20.00 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. அதே சமயம் பால் கொள்முதல் விலையில் பெரிய அளவில் ஏதும் மாற்றங்களை கொண்டு வராததால் பால் உற்பத்தியாளர்களும், ஏழை, எளிய, நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் தனியாருக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தவும், அவை கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்களை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
(சு.ஆ.பொன்னுசாமி மாநில செயலாளர் – தொழிலாளர் நல அணி மக்கள் நீதி மய்யம்)