“அண்ணா வழியில் எந்நாளும் அயராது உழைப்போம்”: உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி மடல்!
“அண்ணா வழியில் எந்நாளும் அயராது உழைப்போம்” எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
“தம்பி.. நான் உனக்குத் தலைவனில்லை. உனக்கு அண்ணன். உன் குடும்பத்தின் மூத்த மகன். ஒரே தாய், இந்த இயக்கத்தில் லட்சோப லட்சமாய் இணைந்திருக்கும் நம் அனைவரையும் சுமக்க முடியாது என்பதால், தனித்தனி தாயின் வயிற்றிலிருந்து பிறந்திருக்கிறோம்” என்று தம் உள்ளத்தில் நிறைந்திருந்த உயர்ந்த பாச உணர்வுகளைச் சொற்களில் வடித்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தைக் கொள்கைப் பற்றும் பாசமும் மிக்க இலட்சியக் குடும்பமாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாள்-பிப்ரவரி 3.
அவர் மறைந்து 52 ஆண்டுகளானாலும், அவர் நமக்கெல்லாம் ஊட்டி வளர்த்த அந்தப் பாச உணர்வு – இந்த இயக்கமே ஒரு குடும்ப விளக்கு என்ற எண்ணம் நம்மிடம் அணுவளவும் குறையாமல் மாறாமல் அப்படியே நீடிக்கிறது. அவர் வார்த்தெடுத்து வளர்த்த இலட்சியங்களின் வழியே திராவிட முன்னேற்றக் கழகம் இம்மியும் பிறழாமல் தொடர்ந்து பீடு நடைபோடுகிறது. பேரறிஞர் அண்ணா, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அன்று முன்வைத்த கொள்கைகள் இன்று இந்திய ஒன்றியம் முழுவதும் உரக்க முழங்கப்படுகிறது. அரை நூற்றாண்டு கடந்த பிறகும் திசை எட்டும் அனைவருக்கும் செறிவான வழிகாட்டும் அரசியல் கோட்பாடுகளை வழங்கிய தொலைநோக்குப் பார்வை கொண்டமேதையாக இன்றும் திகழ்கிறார் நம் பேரறிஞர்.
இந்தியாவிலேயே முதன்முதலாக, ஒரு மாநிலக் கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியும் என்பதை 1967ல் தமிழ்நாட்டில் தனது தலைமையில் அமைந்த தி.மு.கழக ஆட்சியின் வாயிலாக மெய்ப்பித்துக் காட்டியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அதனைத் தொடர்ந்தே இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த மாநிலக் கட்சிகள் வலிமை பெற்று ஆட்சியமைத்தன. இன்றும் நம் அண்டை மாநிலங்களிலும் இந்தியாவின் மேலும் பல மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் வலிமையான ஆட்சியை அமைத்துள்ளன.
முதன் முதலில் பேரறிஞர் அண்ணா அமைத்த தி.மு.கழகத்தின் ஆட்சி, அதன்பின் தலைவர் கலைஞர் அவர்களால் ஐந்து முறை அரியணை ஏறி, இப்போது உங்களில் ஒருவனான என் தலைமையில் ஆறாவது முறையாக அரசமைத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் தேர்தல் களத்தில் கிடைத்த வெற்றியின் வாயிலாக அமைந்த இந்த ஆட்சியை, பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில், அவர் துயிலுமிடத்தில் காணிக்கையாக்குவதை எனது கடமையாகக் கருதுகிறேன்.
பேரறிஞர் அண்ணா, தன் ஆட்சியில் தொடங்கி வைத்தவற்றை மாறாமல் தொடர்ந்திடும் பணியினை உங்களின் ஒருவனான என்னுடைய தலைமையில் அமைந்துள்ள நமது அரசு ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருகிறது. தாய்மொழியாம் தமிழுக்குத் தலைமையிடம், சமூக நீதி அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் சமத்துவமான நலன், கூட்டாட்சித் தத்துவத்தினை நிலைநாட்டும் வகையில் மாநில உரிமைகளுக்காக ஓயாது ஓங்கி ஒலித்திடும் குரல் – இவை அண்ணா அவர்களின் இன்பக் கனவு; அதை மெய்ப்பிக்க நம்முடைய அன்றாடச் செயல்பாடு.
அறிஞர் அண்ணாவும், அவருடைய கொள்கைத் தம்பியரான தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் உள்ளிட்டோரும், கண்ணிமைக்காமல் கட்டிக் காத்த இயக்கம் நம் திராவிட முன்னேற்றக் கழகம். இது, தேர்தல் கள அரசியலைக் கடந்தும் மக்கள் நலப் பணிகளை ஆற்றுவதில் எப்போதும் முன்னிற்கும் சமூக இயக்கம். தேர்தல் தருகிற வெற்றி வாய்ப்புகளைப் பயன்படுத்தி மக்களின் நலனுக்கும், மாநிலத்தின் உரிமைக்கும் பயன்தரும் சட்டங்களையும் திட்டங்களையும் பாங்குற வழங்குவதே கழக ஆட்சியின் உயர்ந்த நோக்கமும்-ஓய்வில்லாத செயலும் ஆகும்.
“I belong to the Dravidian stock “ என்று 1962ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தவர் பேரறிஞர் அண்ணா; அது இமயம் முதல் குமரிமுனைவரை எதிரொலித்தது. மாநில சுயாட்சிக்கான அண்ணாவின் தொடர்ச்சியான குரலை, 1974ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிப்பெரும் தீர்மானமாக நிறைவேற்றியவர் அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். கழக உடன்பிறப்புகளுக்கு ஐம்பெரும் முழக்கங்களை நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கினார்.
‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்பது முதல் முழக்கம். ‘மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி’ என்பது ஐந்தாவது முழக்கம். தலைவர் கலைஞர் நமக்கு வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை என்றும் மறவாமல் கடைப்பிடிப்போம். பேரறிஞர் அண்ணா சுட்டிக் காட்டிய வண்ணம், ‘கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு’ காத்து, இயக்கத்தை நமது உயிராகக் கொண்டு வளர்ப்பதுடன், இந்த இயக்கத்தை பெரிதும் நம்பி, தமிழ்நாட்டு மக்கள் நம்மிடம் மனமுவந்து ஒப்படைத்திருக்கும் ஆட்சியினை சமூகநீதி-சுயமரியாதை-சமத்துவப் பாதையில் நடத்தி, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற உயர்ந்த இலட்சிய முகட்டினை எட்டிப் பிடித்து நிறைவேற்றிட இணைந்து சூளுரைக்கும் நாளாக பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாள் அமைந்திருக்கிறது.
அண்ணா அவர்களின் தேவை, முன்பைவிட இன்று அதிகமாகி இருக்கின்றது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் அண்ணா அவர்களின் ஆழமான சிந்தனைகள் அழகான வழிகாட்டியாக உள்ளன. மாநில உரிமைகளின் குரல், வலிமையாக -ஒற்றுமையாக ஒலித்திட வேண்டிய காலம் இது. அந்தக் குரலை, இந்திய அரசியல் களத்தில் முதன்மையாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியச் சுடரை, அவருடைய நினைவிடத்தில் எரிகின்ற அணையா விளக்கு போலக் காத்திட வேண்டிய கடமை, தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் உள்ளது.
உடன்பிறப்புகளின் உறுதுணையுடன் உங்களில் ஒருவனான நான், தி.மு.கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையிலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை வழிப் பயணத்தைத் தீர்மானமாக மேற்கொண்டிருக்கிறேன். ‘அண்ணா வழியில் எந்நாளும் அயராது உழைப்போம்’ என உறுதியேற்று, நெஞ்சுயர்த்திப் பயணிப்போம்; களங்களை, தோளுயர்த்திச் சந்திப்போம்; பேரறிஞரால் பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாட்டினை என்றும் வற்றாத வளர்ச்சிப் பாதையில் வாடாமல் பயணிக்கச் செய்து, உரிமைப்போரில் வெற்றிகளை குன்றெனக் குவித்திடுவோம்! ஆயிரம் ஆண்டுகளானாலும் அரை நொடியும் மறவாது, அண்ணா அவர்களின் திருப்பெயரை எந்நாளும் போற்றி, அவர்தம் குன்றாப் புகழ் பாடுவோம் !