சைரன் சினிமா விமர்சனம் : சைரன் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் தந்தைமார்களின் உன்னத தியாகத்திற்கும் அரவணைப்பை இழந்து தத்தளிக்கும் குடும்ப பாசத்திற்கும் சமர்ப்பணம் | ரேட்டிங்: 4.25/5

0
526

சைரன் சினிமா விமர்சனம் : சைரன் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் தந்தைமார்களின் உன்னத தியாகத்திற்கும் அரவணைப்பை இழந்து தத்தளிக்கும் குடும்ப பாசத்திற்கும் சமர்ப்பணம் | ரேட்டிங்: 4.25/5

ஹோம் மூவி மேக்கர்ஸ்  சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்திருக்கும் சைரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்டனி பாக்யராஜ்.

இதில் ஜெயம் ரவி, கீர்த்தி, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, துளசி, அழகம்பெருமாள், அருவி மதன், யுவினா பார்த்தவி, அஜய், சுரேந்தர் (கே பி ஒய்), சாந்தினி தமிழரசன், லல்லு பிரசாத், ப்ராதனா, முத்து குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :இணை தயாரிப்பாளர் – அனுஷா விஜய்குமார்,இசை – ஜி.வி. பிரகாஷ் குமார், பின்னணி இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு –செல்வகுமார் எஸ்கே, எடிட்டிங் – ரூபன், தயாரிப்பு வடிவமைப்பாளர் – கதிர் கே, கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ் எம், ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன், நடன அமைப்பு – பிருந்தா, ஆடை வடிவமைப்பாளர்கள் – அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேதா, நித்யா வெங்கடேசன், ஜெபர்சன் டி., நிர்வாக தயாரிப்பு – ஓமர், தயாரிப்பு நிர்வாகி – சக்கரத்தாழ்வார் ஜி, தயாரிப்பு மேலாளர் – அஸ்கர் அலி ஏ,மக்கள் தொடர்பு சதீஷ் (ஏய்ம்)

2019 ல் தொடங்கும் முதல் காட்சியில் முகம் மறைக்கப்பட்ட ஒருவர் வண்டியிலிருந்து ஒரு மூட்டையில் கட்டப்பட்ட ஒருவரை கிழே தள்ளி கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி கொலை செய்வது போல் கதைக்களம் தொடங்குகிறது. தன் மனைவியை கொன்ற கொலைக் குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதி திலக வர்மன் (ஜெயம் ரவி) 14 ஆண்டுகளுக்குப் பின் தன் தந்தை, தாய், உறவினர்கள் மற்றும் தன் மகளான மலரையும் (யுவினா பர்தவி) பார்க்க 14 நாட்கள் பரோலில் வெளியே வருகிறார். பலரின் உயிர் காக்கும் தன் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிய திலகவர்மன் நிரபராதி என்றாலும் கொலை குற்றம் சாட்டப்பட்ட கதையும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு பேச்சுப் போட்டியில் தந்தையின் பாசத்தை பற்றி பேசி முதல் பரிசைப் பெறும் மலரின் மனதில் தன் தாயை கொலை செய்த தந்தையை சிறு வயதிலிருந்தே வெறுக்கும் மலரை சுற்றி கதை நகர்கிறது. தன்னை வெறுக்கும் மகள் மலரை சந்திக்க ஆவலோடு வரும் திலகவர்மன் செல்லும் போது, மகளை கிண்டல் செய்யும் குற்ற பின்னணி கொண்ட ஒருவனை அடித்து விட போலீஸ் அந்த நேரத்தில் வருவதால் விட்டு விட்டு சென்று விடுகிறார். இந்நிலையில் காவலில் எடுத்து விசாரிக்கும் கைதி சித்திரவதையால் மரணித்ததாக கூறப்படும் குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் இன்ஸ்பெக்டர் நந்தினி (கீர்த்தி சுரேஷ்). ஆனால் தான் யாரையும் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறி அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பணிக்குத் திரும்பும் இன்ஸ்பெக்டர் நந்தினி, திலகன் தினந்தோறும் வந்து பரோல் கையெழுத்து போடும் அதே காவல் நிலையத்தில் பணிக்கு வருகிறார். பரோலில் வருவதால் வேளாங்கன்னி (யோகிபாபு) திலகவர்மனுக்கு பாதுகாப்பு காவலராக நியமிக்கப்படுகிறார். திலகவர்மன் பரோல் வந்த நேரத்தில் ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் மர்மமாக கொலை செய்யப்படுகின்றனர். இன்ஸ்பெக்டர் நந்தினி கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்து ஜெயிலில் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நபர்கள் பாணியில் கொலைகள் நடந்திருப்பதை அறிகிறார். இதற்கான தடயங்கள், ஆவணங்களை ஆராயும் போது, திலகவர்மன் மேல் சந்தேகம் வருகிறது. ஆனால் போதிய ஆதாரங்கள் கை கூடாமல் போக திலகவர்மனை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். அதே சமயத்தில் திலகவர்மன் அடித்து விரட்டிய குற்ற பின்னணி கொண்ட இளைஞன் காணாமல் போகிறான். அந்த இளைஞனை தேடும் பணியும் இன்ஸ்பெக்டர் நந்தினி மேற்கொள்ளும் போது கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. இறுதியில் இந்த கொலைகளை செய்தது யார்? இவர்களுக்கும் திலகவர்மனுக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன? இன்ஸ்பெக்டர் நந்தினி திலகவர்மனை கைது செய்தாரா? உண்மையான குற்றவாளி யார்? மலர் தந்தையின் பாசத்தை புரிந்து கொண்டாரா? என்பதே பரபரக்கும் கதையை இயக்கிய ஆண்டனி பாக்யராஜ் கொடுக்கும் க்ளைமேக்ஸ்.

ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் கைதி திலகவர்மனாக ஜெயம் ரவி இரு மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவராக இளமை துள்ளலுடன், துடிப்பான, கடமையை துரிதமாக செய்யும் இளைஞனாக, காதல் கை கூடி திருமணம் செய்து கொண்டு தந்தையாக மாறும் தருணம் என்று ஒருபுறம் பயணிக்க, பரோல் கைதியாக சால்ட் அண்ட பெப்பர் லுக்கில் இறுக்கமான முகபாவனை, அமைதி, பொறுமை, மகளின் பாசத்திற்கு ஏங்கும் தந்தையின் மனோபாவம், நடக்கும் சம்பவங்களை தன் புத்தி சாதுர்யத்தால் தப்பிப்பதும், வெறித்த பார்வையோடு தன் பழியை தீர்த்துக் கொள்ளும் தருணம் என்று படம் முழுக்க மாஸ், ஆக்ஷன் கலந்த மிரட்டல் ரகத்தோடு மின்னல் வேகத்தில் பயணிக்கிறார். அதிரடி சண்டைக்காட்சிகள், துரத்தில் காட்சிகளில் அசத்தியுள்ளார். வெல்டன்.

இன்ஸ்பெக்டர் நந்தினியாக கீர்த்தி சுரேஷ் ஒரு முழுமையான புதிர் பாத்திரமாக கண்டிப்பு,  வலிமை, அதட்டல், உருட்டல் என்று ஆர்ப்பாட்டமாக வந்து, விசாரிப்பதில் தன்னுடைய புத்தி கூர்மையை உபயோகித்து கண்டுபிடிக்கும் திறன் இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்தாமல் போகும் போது ஏற்படும் விரக்தி, தன் மேலாதிகாரியை கொலை செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து ஏற்படும் பதட்டம், அதை தடுக்க எடுக்கும் முயற்சி என்று முதிர்ந்த நடிப்பை மிடுக்கு குறையாமல் கொடுத்திருக்கிறார். இறுதியில் தந்தை மகளின் பாசத்தை சேர்த்து வைக்கும் இணைக்கும் கைகளாக விளங்கி கை தட்டல் பெறுகிறார்.

பேசும், கேட்கும் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளியாக அனுபமா பரமேஸ்வரன் கண்கள், செய்கைகள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதத்தில் மனதில் பதிகிறார்.

ஷேடோ போலீஸ் வேளாங்கன்னியாக யோகி பாபு சில இடங்களில் தன்னுடைய டிரெட் மார்க் வசனத்தை பேசி சிரிப்பை வரவழைக்கிறார்.

மகனின் இன்பத்தில் அகமகிழந்து அதை விட துன்பத்தை நேரில் பார்த்து பரிதவிக்கும் அம்மாவாக துளசி, சிரித்து சிரித்தே பேசி கவிழ்க்கும் வில்லன் அரசியல்வாதியாக அழகம்பெருமாள், காவல்துறை மேலாதிகாரி வில்லனாக சமுத்திரக்கனி, காவலராக அருவி மதன், மகளாக யுவினா பார்த்தவி, வில்லனாக அஜய், சுரேந்தர் (கே பி ஒய்), சாந்தினி தமிழரசன், லல்லு பிரசாத், ப்ராதனா, முத்து குமார் ஆகியோர் படத்தில் தேர்ந்த நடிப்;பை வழங்கியுள்ளனர்.

பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷின் பங்களிப்பு தந்தை மகள் பாசத்தை விவரிக்கும் விதத்தில் கவர்கிறார். இருந்தபோதிலும், சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தில் காட்சிகளுக்கு கூடுதல் சிலிர்ப்புடன்  அமைத்துள்ளார்.

செல்வகுமார் எஸ்.கே.வின் ஒளிப்பதிவு கதையின் சாராம்சத்தை நேர்த்தியாக காட்சிக் கோணங்களில் கொடுத்துள்ளது இருட்டில் நடக்கும் கொலை, எதிர் எதிர் விட்டின் காட்சி அமைப்புகள், ஆம்புலன்ஸ், மருத்துவமனை, சண்டை மற்றும் துரத்தல் காட்சிகள் சிறப்பு. ரூபனின் நான் லீனியர் வகையில் கொடுத்திருக்கும் வெட்டுக்கள் படம் முழுவதையும் கவர்ந்திருக்கிறது.

சுஜாதா விஜயகுமாரால் தயாரிக்கப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகிக்கப்பட்டிருக்கும் சைரன் நல்ல திறமையான வல்லுனர்களுடன் களமிறங்கி வெற்றி பெற்று வாகை சூடியிருக்கிறது.

தந்தை மகள் சென்டிமென்ட், பழி வாங்கும் படலம் என்று இரண்டு தொகுதிகளாக பயணிக்கும் கதைக்களத்தில் கொஞ்சம் காமெடி, காதல், பாசம், சண்டை, பழிவாங்குதல், சாதிவெறிதாக்குதல் என்று கதைக்குள் துணைக் கதைகளாக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்டனி பாக்யராஜ். இதில் புதுமை என்னவென்றால் பரோல் கைதி இத்தனை சம்பவங்களையும் செய்து விட்டு மீண்டும் சிறைக்கு செல்வதை எந்த சமரசமும் செய்யாமல் கொடுத்திருப்பதும், ஒலிகளை வைத்து காதிலும், மூக்கிலும் ரத்தம் வரவழைக்கும் டெக்னிக், சைகை மொழி பேசுபவர்களிடமிருந்து குற்றித்தின் பிண்ணனியை கண்டுபிடிப்பது, கதாநாயகனின் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தின் காட்சிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வழங்கப்பட்ட விதம் நேரடியான கதைக்களத்தை உயர்த்துகிறது என்பதே. நான் கொலை செய்யவில்லை என்ற வசனம் கைதி பேசுவது ஒரு கோணத்தில் காட்டப்பட்டு, இதே வசனம் காவல்துறை அதிகாரியும் உச்சரிப்பதின் காட்சிகளை வேறு கோணத்தில் காட்சிபடுத்தி காரணம் சொல்லியிருப்பதும் ‘ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இரண்டு தேவதைகள் இருக்கிறார்கள், அவருக்காகப் பிறந்தவர் ஒருவர், அவருக்குப் பிறந்தவர் இன்னொருவர்’ போன்ற டயலாக்குகளின் மூலம் சைரன் உணர்ச்சிகளை அதிகப்படுத்தும் வசனங்கள் சிறப்பு. எந்த ஒரு புதிரான காட்சி காட்டப்பட்டாலும் அதற்கான சம்பந்தப்பட்ட காரணம் படத்தில் உள்ளதை சிறப்பாக தெளிவுபடுத்தி நான் லீனியர் முறையில் கதைக்களம் பயணிப்பது கூடுதல் ப்ளஸ்.

மொத்தத்தில் ஹோம் மூவி மேக்கர்ஸ்  சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்திருக்கும் சைரன் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் தந்தைமார்களின் உன்னத தியாகத்திற்கும் அரவணைப்பை இழந்து தத்தளிக்கும் குடும்ப பாசத்திற்கும் சமர்ப்பணம்.