ரோமியோ விமர்சனம்: ரோமியோ வித்தியாசமான சுவாரஸ்யம் கலந்த உணர்ச்சிகள் நிறைந்த கணவனின் காதல் போராட்டம் | ரேட்டிங்: 3.5/5
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் ரோமியோ படத்தை எழுதி இயக்கியுள்ளார் விநாயக் வைத்தியநாதன்.
இதில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, ஷா ரா, ரோஜு, ஷாலினி விஜயகுமார், அத்வைத் , ஜெய சம்ரிதா, முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-சூஃபரூக் .ஜே பாஷா- ஒளிப்பதிவாளர்இ பரத் தனசேகர் – இசையமைப்பாளர், விஜய் ஆண்டனி- எடிட்டர், ஷிமோனா ஸ்டாலின் -ஆடை வடிவமைப்பாளர், கமலநாதன் – கலை இயக்குனர், மக்கள் தொடர்பு- ரேகா.
முப்பத்தைந்து வயது வரை மலேசியாவில் வேலை செய்து நன்றாக சம்பாதித்து சொந்த ஊரான தென்காசிக்கு திரும்புகிறார் அறிவு(விஜய் ஆண்டனி). இவரின் பெற்றோர் பழனியப்பன்( இளவரசு)-விஜயா( சுதா) அறிவு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள். அறிவு காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். லீலா (மிருணாளினி ரவி) சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பொய் சொல்லிவிட்டு சினிமாவில் நாயகியாக நடிக்க சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார். தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஊருக்கு வரும் லீலாவை பார்க்கிறார் அறிவு. துக்க வீட்டில் (லீலா)மிருணாளினி ரவியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். லீலாவின் தந்தை மூர்த்திக்கு (தலைவாசல் விஜய்) பண நெருக்கடி ஏற்பட அறிவு உதவி செய்கிறார். அதன் பின் லீலாவின் பெற்றோர் சம்மதத்துடன் பத்து வயது வித்தியாசம் உள்ள லீலாவை திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்தவுடன் தான் லீலாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதும், ஹீரோயினாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் என்பதை அறிவு அறிந்து கொள்கிறார்.சென்னையில் புதுமண தம்பதிகள் குடியேறுகின்றனர். மனைவி லீலா தன் சினிமா நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் போட்டு அறிவை விவாகரத்து செய்ய வைக்க முயற்சிக்கிறார். ஆனால் அறிவு மனைவி லீலாவை ஒரு தலையாக காதலிப்பதால் அதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறார். லீலாவின் ரசிகன் விக்ரம் என்று பெயரை மாற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவு லீலாவை ஊக்கப்படுத்தி அவரின் லட்சியத்தை அடைய உதவி செய்கிறார். பின்னர் மனைவி லீலாவை கதாநாயகியாக வைத்து அவரின் சினிமா நண்பர்கள் உதவியுடன் ரோமியோ என்ற பெயரில் படம் தயாரித்து நடிக்க முடிவு செய்கிறார். இறுதியில் அறிவு மனைவி லீலாவின் கனவை வெற்றிகரமாக நிறைவேற்றினாரா? லீலா உண்மையான காதலை உணர்ந்தாரா? கணவனின் அன்பை ஏற்றுக் கொண்டாரா? நிராகரித்தாரா? திருமணம் பந்தம் தொடர்ந்ததா? அறிவு சிறு வயதில் தொலைத்த தங்கையை மீண்டும் சந்தித்தாரா? என்பதே படத்தின் எதிர்பார்த்த முடிவு.
அறிவாக விஜய் ஆண்டனி ஒரு தலைக்காதல் கணவனாக படிந்;து வாரிய தலை, குறுந்தாடி, கண்ணாடி, நடை, உடை, பாவனையுடன் மெச்சூரான கதாபாத்திரத்தில் பொறுமை, சகிப்புதன்மையுடன் மனைவியை கையாள்வதும், மனைவியின் லட்சியத்திற்காக முயற்சிகள் செய்வதும், தன் கடந்த கால சோக நிகழ்விலிருந்து விடுபடாமல் தவிப்பதும், தங்கையை பார்த்த பிறகு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெளியே வந்து அழும் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளுடன் கை கோர்த்து தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
லீலாவாக மிருணாளினி ரவி கணவனை வெறுக்கும் மனைவியாக, நவநாகரீக மங்கையாக உலா வருவதும், படம் முழுவதும் இவரைச் சுற்றி நகர்வதால் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார்.
லவ் பார் உரிமையாளராக யோகி பாபு திடீரென்று தோன்றி ஐடியாக்களை அள்ளி விட்டு விட்டு காணாமல் போகிறார். விடிவி கணேஷ் சிறிது நேரம் வந்து தன் கரகரப்பான குரலால் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, ஷாரா, ரோஜு, ஷாலினி விஜயகுமார், அத்வைத், ஜெய சம்ருதா, முரளி ஆகியோர் படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.
மலேசியா சம்பந்தபட்ட கண் கவரும் காட்சிகள், தென்காசி, சென்னையில் வசிக்கும் இயற்கை எழில் நிறைந்த வீடு, சினிமா ஹ_ட்டிங் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஃபிளாஷ்பேக் காட்சிகளின் தொகுப்பு என்று காட்சிக் கோணங்களில் ஒளிப்பதிவாளர் ஃபரூக் .ஜே பாஷாவின் திறமை பளிச்சிடுகிறது.
பரத் தனசேகர் இசை கவனிக்க வைத்து ரசிக்க வைத்துள்ளது.
கமலநாதனின் கலை இயக்கம் அசத்தல் ரகம்.
விஜய் ஆண்டனியின் எடிட்டிங் இரண்டாம் பாதியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
காதலுக்கு இலக்கணமாக திகழ்பவர் ரோமியோ. இந்த ரோமியோ ஒரு கட்டாய திருமண பந்தத்தில் ஏற்படும் பிணைப்பு, விலக நினைக்கும் மனைவியுடன் காதலாக உருமாற கணவன் எடுக்கும் முயற்சிகளைப் பற்றிய கதைக்களம். விநாயக் வைத்தியநாதன்; புதிய கோணத்தில் நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் ரோமியோ வித்தியாசமான சுவாரஸ்யம் கலந்த உணர்ச்சிகள் நிறைந்த கணவனின் காதல் போராட்டம்.