ரெபல் சினிமா விமர்சனம் : ரெபல் ஒடுக்கப்பட்ட தமிழ் கல்லூரி மாணவனின் ஆக்ரோஷமான உரிமைக்குரல் போராட்டம் | ரேட்டிங்: 3/5
ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ரெபல் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நிகேஷ்.
இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார் – கதிர், மமிதாபைஜூ – சாரா, கருணாஸ் – உதயகுமார், வினோத் – பாண்டி, ஆதித்யா பாஸ்கர் – செல்வராஜ், ஆண்டனி – பாரதி, வெங்கிடேஷ் வி.பி – ஆண்டனி, ஷாலுரஹீம் – சார்லி, சுப்பிரமணியன் சிவா – ராமலிங்கம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு – அருண் இராதாகிருஷ்ணன், இசை – ஜீ.வி. பிரகாஷ் குமார், படத்தொகுப்பு – வெற்றி கிருஷ்ணன், இணை தயாரிப்பு – நேஹா ஞானவேல்ராஜா, மக்கள் தொடர்பு – யுவராஜ்
80 கால கட்டங்களில் தொடங்கும் கதைக்களம் மூணாறு நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞன் கதிர் (ஜி வி பிரகாஷ் குமார்) மற்றும் அவரது நண்பர் செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்). இவர்களது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். வறுமையில் வாடும் இவர்களின் கனவு தங்களது பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். பாலக்காடு சித்தூரில் பிஏ வரலாறு படிக்கும் வாய்ப்பு கதிர் மற்றும் அவரது நண்பர் செல்வராஜ் இருவருக்கும் கிடைக்க,மூணாறு ஊர் மக்கள் இருவரையும் வழியனுப்பி வைக்கிறார்கள். பாலக்காடு கல்லூரியில் 25 சதவீதத்தினர் தமிழ் மாணவர்கள் படிக்கின்றார்களே தவிர அவர்களுக்கு பல பிரச்சனைகள் எஸ்.எப்.ஒய் மற்றும் கே.எஸ்.கியூ என்ற இரு மாணவ கேரள சங்கங்கள் ரேகிங் என்ற பெயரில் சாதி, இனம்,மொழி என்று பாராபட்சமின்றி தமிழ் மாணவர்களை இழிவாக நடத்துகிறார்கள். இதன் காரணமாக செல்வராஜ் உயிரிழக்க நேரிட இந்த சமயத்தில் கல்லூரி தேர்தல் அறிவிக்கப்பட அரசியல் லாபங்களுக்காக இரு சங்கங்களும் சமரசம் என்று பெயரளவில் வரிந்து கட்டி ஆதரவு தர கோருகின்றனர். இதனால் வெகுண்டெழும் கதிர் கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக என்ன முடிவு செய்தார்? தமிழ் மாணவர்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கை என்ன? இதனால் இரு சங்கங்களும் சந்தித்த பிரச்சனை என்ன? இறுதியில் தமிழ் மாணவர்களின் உரிமையை மீட்டெடுத்தாரா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.கதிராக ஜீ.வி. பிரகாஷ் குமார் தமிழ் மாணவராக சந்திக்கும் இன்னல்கள், நண்பனின் இறப்பு, அதன் பின் எடுக்கும் தீர்க்கமான முடிவு, மலையாள மாணவர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகள் என்று திறம்பட செய்துள்ளார்.
சாராவாக மமிதாபைஜூ முதலில் காதல் தேவதையாக அனைவரும் அறியப்படும் விதத்தில் வந்தாலும், பின்னர் அவரின் உருமாற்றம் படத்தில் தடுமாற்றத்துடன் காண்பிக்கப்பட்டு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது.
கல்லூரி பேராசிரியர் உதயகுமாராக வரும் கருணாஸ் தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து உந்து சக்தியாக தன் வசனங்களால் ஆட்கொள்கிறார்.
கல்லூரி நண்பர்களாக வினோத் – பாண்டி, ஆதித்யா பாஸ்கர் – செல்வராஜ் மற்றும் ஆண்டனி – பாரதி, வெங்கிடேஷ் வி.பி – ஆண்டனி, ஷாலுரஹீம் – சார்லி, சுப்பிரமணியன் சிவா – ராமலிங்கம் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பு.
மலைப்பிரதேசத்தின்; அழகையும், கல்லூரி வாழ்க்கையின் அராஜகங்களையும், 80காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்திற்கேற்ப தன் காட்சிக்கோணங்களால் உயிர் கொடுத்து சிறப்பு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண் இராதாகிருஷ்ணன்.
ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையும், பின்னணி இசையையும் ஒரு சேர படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் பலம் கொடுக்க முயற்சித்துள்ளார்.
படத்தொகுப்பு – வெற்றி கிருஷ்ணன் இன்னும் கவனமாக இரண்டாம் பாதியை கச்சிதமாக கொடுத்திருக்கலாம்.
1980களின் முற்பகுதியில், கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறில் இருந்து இரண்டு தமிழ் மாணவர்கள் பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் படிக்க அனுமதி கிடைக்க அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை மற்றும் கொடுமைப்படுத்துதல் அதற்கு அவர்கள் எவ்வாறு பதிலடி கொடுக்கிறார்கள் என்பதும். அதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழ் மாணவர்கள் எவ்வாறு சமத்துவம் கோருகிறார்கள் என்பதை கதைக்களமாக அமைந்துள்ளார் இயக்குனர் நிகேஷ். 80களில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தக் கதை அமைந்திருப்பதால், இந்தக் காட்சிகள் திரும்பத் திரும்பக் காட்டப்படும்போது, உண்மையில் எவ்வளவு கொடூரம் நடந்திருக்கிறது என்பதை யோசிக்காமல் இருக்க முடியாது. ரேகிங் பிரச்சனை, சாதி, இன, மொழிப் பிரச்னை என பல பிரச்சனைகளுடன் தமிழனின் உரிமை பிரச்சனையையும் கையிலெடுத்து மலையாளிகளை வெறுப்புணர்வோடு பார்க்கும் அளவிற்கு கதைக்களத்தை அமைத்து இயக்கியிருக்கிறார் நிகேஷ். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சொல்ல வந்த கருத்தும், சம்பவங்களும் பெரிய தாக்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியிருக்கும்.
மொத்தத்தில் ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ரெபல் ஒடுக்கப்பட்ட தமிழ் கல்லூரி மாணவனின் ஆக்ரோஷமான உரிமைக்குரல் போராட்டம்.