பாம்பாட்டம் சினிமா விமர்சனம் : பாம்பாட்டம் சீறி பாய முயற்சிக்கவில்லை | ரேட்டிங்: 2/5

0
198

பாம்பாட்டம் சினிமா விமர்சனம் : பாம்பாட்டம் சீறி பாய முயற்சிக்கவில்லை | ரேட்டிங்: 2/5

வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் ஏ.பழனிவேல் தயாரித்திருக்கும் பாம்பாட்டம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் வி.சி.வடிவுடையான்.

படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா ஜீவன் (மாணிக்கவேல்) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு  – பண்ணை ஏ.இளங்கோவன், மக்கள் தொடர்பு – மணவை புவன்.

பெரிய சமஸ்தானத்தை ஆட்சி செய்யும் ராணி மங்கம்மா தேவி தைரியமும், வீரமும் நிறைந்த பெண்மணி. அவரின் ஆஸ்தான ஜோதிடர் கணித்தபடி எச்சரிக்கையாக இருந்தும் மங்கம்மா தேவி (மல்லிகா ஷெராவத்) பாம்பு கடித்து இறந்து விடுகிறார். அவரின் மகள் இளவரசி நாகமணிக்கும் (சாய் ப்ரியா) இத்தகைய தோஷம் இருப்பதால் தந்தை பாம்புகளே இல்லாத நியூசிலாந்தில் மகளை அழைத்துச் சென்று வளர்க்கிறார். மகளும் வளர்ந்து மீண்டும் சமஸ்தானத்தற்கு திரும்பி வந்து நல்லாட்சி செய்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக இளவரசி மற்றும் மகாராஜா இருவரும் பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும், அவர்களி;ன் ஆவி அரண்மனையை சுற்றி வருவதாகவும், உள்ளே செல்பவர்கள் பாம்பு கடித்து இறந்து விடுகிறார்கள் என்ற தகவல் பரவி அரண்மனைக்குள் ஊர் மக்கள் செல்லாமல் இருக்கின்றனர். இதனிடையே அரண்மனைக்குள்ளே வைரம், வைடூரியம், தங்க நகைகளின் புதையல் இருப்பதை அறிந்து கொள்ளையடிக்கும் கும்பல் உள்ளே செல்ல, அனைவரும் பாம்பு கடித்து இறந்து விடுகின்றனர். இந்த மரணங்களை விசாரிக்கவும் கண்டுபிடிக்கவும் இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல் (ஜீவன்) நியமிக்கப்படுகிறார். ஆனால் அவரின் மகன் சரவணன்(ஜீவன்) தந்தையை காப்பாற்ற அவரை அடைத்து வைத்து விட்டு அந்த அரண்மனைக்குள் நுழைகிறார். அங்கே சரவணன் கண்ட அதிர்ச்சி கலந்த காட்சி எது? சரவணன் உயிரோடு திரும்பி வந்தாரா? தந்தை மாணிக்கவேல் தப்பித்து என்ன செய்தார்? அரண்மனைக்குள் அமானுஷ்ய சக்தி நடமாட்டம் உள்ளதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

தந்தை மாணிக்கவேல் மற்றும் மகன் சரவணன் ஆகிய இரு வேடங்களில் ஜீவன் நடித்திருந்தாலும், தந்தை கதாபாத்திரம் தான் பேசும்படியான அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார்.

ஆரம்ப காட்சியில் மட்டுமே வரும் மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், இளவரசியாக சாய் ப்ரியா ( நாகமணி ) வித்தியாசமான மேனரிசம், வசன உச்சரிப்பு, சைகோ வில்லனாக வடிவுடையான் (காளி),  சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து முடிந்த வரை சிறப்பாக கொடுக்க முயற்சித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு பீரியட் படத்திற்கான மெனக்கெடலுடன் கொடுத்துள்ளனர். மோசமான சிஜி படத்தின் முக்கிய காட்சிகளை கெடுத்துவிட்டது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் மகாராணி ஆட்சி செய்த கதைக்களமாக படத்தை இயக்கியிருக்கிறார் வி.சி.வடிவுடையான். அதில் திகில், கொலை, அமானுஷ்ய சக்தி, பாம்பின் பழி வாங்குதல், விசாரணை, ஃபிளாஷ்பேக் காட்சிகள், இளவரசியின் வாழ்க்கை போராட்டத்துடன் திரைக்கதையமைத்து குழந்தைகள் காமிக் புக்கில் வருவது போல் கொடுத்துள்ளார் இயக்குனர் வி.சி.வடிவுடையான். படம் முழுவதுமே காட்சிகளுக்கு வலு சேர்க்காமல், தன் மனப்போக்கில் எடுத்து முடித்திருப்பது போன்று தெரிகிறது. தோய்வான கதைக்களத்திற்கு மேலும் அலுப்பூட்டுகிறது சிஜி தொழில்நுட்பம். படத்தில் ஜீவன் நடித்திருந்தாலும் பீரியட் பிலிமிற்கு முக்கிய ஜீவனே சிஜி காட்சிகள் தான், அதில் முழு கவனம் செலுத்தாமல் படத்தை எடுத்திருப்பதும் தெளிவில்லாமல் கதைக்களம் மாறி மாறி பயணிப்பதும் படத்தின் மைனஸ்.

மொத்தத்தில் வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் ஏ.பழனிவேல் தயாரித்திருக்கும் பாம்பாட்டம் சீறி பாய முயற்சிக்கவில்லை.