அரிமாபட்டி சக்திவேல் சினிமா விமர்சனம் : அரிமாபட்டி சக்திவேல் சாதி மீறிய திருமணத்தை ஒதுக்கும் கிராம கட்டுப்பாடு | ரேட்டிங்: 2.5

0
242

அரிமாபட்டி சக்திவேல் சினிமா விமர்சனம் : அரிமாபட்டி சக்திவேல் சாதி மீறிய திருமணத்தை ஒதுக்கும் கிராம கட்டுப்பாடு | ரேட்டிங்: 2.5

லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கே மற்றும் அஜிஸ்.பி ஆகியோர்கள் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’.

இதில் சார்லி, பவன்.கே, மேகனா எலோன், இமான் அண்ணாச்சி, சூப்பர் குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி, சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :கதை, திரைக்கதை – பவன் கே, ஒளிப்பதிவு – ஜே பி மேன, இசை – மணி அமுதவன, படத்தொகுப்பு – ஆர்.எஸ். சதிஸ்குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ்

1995 ஆம் ஆண்டு திருச்சிக்கு அருகில் உள்ள அரிமாபட்டி என்ற இடத்தில் கதை தொடங்குகிறது. ஒரே சாதியினரை மட்டுமே உள்ளடக்கிய அரிமாபட்டி என்ற ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வகுத்து  காதல் திருமணமோ அல்லது வேறு ஜாதியினரையோ திருமணம் செய்து கொள்ளக்கூடாது அப்படி செய்தால் ஊரை விட்டே காதலர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் ஒதுக்கி வைத்து விடுபவர்கள். இந்நிலையில் அரிமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (பவன்) பக்கத்து ஊரைச் சேர்ந்த கவிதா (மேகனா எல்லன்) என்ற வேறு ஒரு ஜாதி பெண்ணை காதலித்து அவர்களது  குடும்பத்தினருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி வேறு ஒரு ஜாதி பெண்ணை திருமணம் செய்த சக்திவேலை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க இருவரும் தங்கள் கிராமங்களை விட்டு சென்னைக்கு செல்கிறார்கள். அதே சமயம் கவிதாவின் அண்ணன் சுரேஷ் (பிர்லா போஸ்) சக்திவேல் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் விடுத்து சக்திவேலை கொலை செய்ய திட்டமிடுகிறார்.  இதற்கிடையில், கிராம மக்கள் சக்திவேல் குடும்பத்தினரையும் அவரது நண்பர்களின் குடும்பத்தினருக்கும் தண்டனை வழங்கி மன்னிப்பு கேட்க வைக்கின்றனர். சக்திவேல் தன் குடும்பத்தினரை சந்திக்கவோ, சொத்தோ தரக்கூடாது அப்படி செய்தால் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்கின்றனர். இந்நிலையில் இந்த செய்தியை கேட்டு சக்திவேலின் தாத்தா அதிர்ச்சியில் இறந்து விடுகிறார். அதன் பின் காதல் தம்பதியர் அரிமாபட்டிக்கு வந்தனரா? தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடிந்ததா? கவிதாவின் அண்ணன் பழி வாங்கினாரா? இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பது அரிமாபட்டி சக்திவேல் படத்தின் மீதிக்கதை.

சக்திவேல் கதாபாத்திரத்திற்கு பவன் மற்றும் கவிதா கதாபாத்திரத்திற்கு மேகனா எலென் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்வதும், அதன் பின் ஏற்படும் அவமானங்கள், சம்பவங்கள் அவர்களை ஊருக்கு வரவழைத்து சிக்கல்களை ஏற்படுத்துவதும் அதை சமாளிப்பதையும் சரியாக செய்துள்ளனர்.

குழந்தைவேல் கதாபாத்திரத்தில் தந்தையின் பாசத்தையும், இயலாமையையும், பஞ்சாயத்தில் தலை குனிந்து தண்டனை ஏற்றுக் கொள்வதும், மகனின் பாசத்தை விட ஊர் மக்களின் பழக்கத்தை மேலாக கருதும் வெள்ளேந்தி மனிதராக தேர்ந்த அனுபவ நடிப்பை  தந்துள்ள சார்லி மற்றும் அன்பழகனாக இமான் அண்ணாச்சி, அண்ணன் சுரேஷாக பிர்லா போஸ், சின்ன கலிங்கணாக அழகு, தங்கவேலாக சூப்பர் குட் சுப்ரமணி, கஜேந்திரனாக சேதுபதி ஜெயசந்திரன் உள்ளிட்டோரின் பங்களிப்பு பரவாயில்லை.

மணி அமுதவன் இசை மற்றும் பின்னணி இசை ஒகே ரகம்.

கிராமத்து இயற்கையை அழகை ஒளிப்பதிவாளர் ஜே பி மேன் திறம்பட காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தொகுப்பாளர் ஆர்.எஸ். சதிஸ்குமார் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட சாதியை மையப்படுத்திய கதைக்களத்தை இயக்கியிருக்கிறார் ரமேஷ் கந்தசாமி. இன்றளவும் இத்தகைய கிராமத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய இயக்குனர் ரமேஷ் கந்தசாமிக்கு திறம்பட திரைக்கதையை பவன் அமைத்திருந்தால் அழுத்தமான பதிவாக வந்திருக்கும் மனதில் பதிந்திருக்கும்.

மொத்தத்தில் லைப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன்.கே மற்றும் அஜிஸ்.பி ஆகியோர்கள் தயாரிக்கப்பட்ட அரிமாபட்டி சக்திவேல் சாதி மீறிய திருமணத்தை ஒதுக்கும் கிராம கட்டுப்பாடு.