1982 அன்பரசின் காதல் திரைவிமர்சனம் : 1982 அன்பரசின் காதல் ஒரு தலைக்காதலின் வெற்றிபயணம் | ரேட்டிங்: 2.5/5

0
234

1982 அன்பரசின் காதல் திரைவிமர்சனம் : 1982 அன்பரசின் காதல் ஒரு தலைக்காதலின் வெற்றிபயணம் | ரேட்டிங்: 2.5/5

தேவகன்யா புரொடக்சன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின் கலையில் மற்றும் ஷைனி அலியாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உல்லாஷ் சங்கர் இயக்கியிருக்கும் படம் ‘1982 அன்பரசின் காதல்’.

இதில் ஆஷிக் மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ்  சிவப்பிரகாசம், செல்வா, சுமதி தாஸ், தமிழன் ஆகியோருடன் இயக்குநர் உல்லாஷ் சங்கரும் நடித்துள்ளார்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ஜிஸ்பின் செபாஸ்டியன், படத்தொகுப்பு- கிரேசன், இசை – எஸ். சிந்தாமணி , கலை- சிபு கிருஷ்ணா, சண்டைப் பயிற்சி -டின்ஸ் ஜேம்ஸ், ஸ்டில்ஸ் -நிதின் கே. உதயன்;, நடனம் – ராயீஸ் சுல்தான் , அனுமோட் சிவராம், பின்னணி இசை- பென்னி ,மக்கள் தொடர்பு- விஜய்முரளி.

கல்லூரியில் கேரள பெண் சந்தனாவை ஒருதலையாக காதலிக்கிறான் அன்பரசு(ஆஷிக் மெர்லின்). தன் காதலை சொல்ல முடியாமல் இறுதி ஆண்டு வரை அன்பரசு படித்து முடிக்கிறான். இருவரும் ஒன்றாகவே ஊருக்கு பயணிக்கின்றனர். அங்கிருந்து செல்லும் சந்தனாவிடம் காதலை சொல்ல தயங்கி வீட்டிற்கு வருகிறான். நண்பர்களின் கேலியையும் பொருட்படுத்தாமல் இருக்கிறான்.இதனிடையே அவசரமாக சந்தனா போனில் அழைத்து மலைப்பிரதேசத்திற்கு போக வேண்டும் என்று சொல்ல, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் மகிழ்ச்சியாக சந்தனாவைஅழைத்துக்கொண்டு மலைப்பிரதேசத்தில் பயணிக்கிறான். போகும் வழியில் ரவுடிகள் துரத்த கள்ளத்துப்பாக்கி செய்யும் உல்லாஷ் சங்கர் இவர்களை காப்பாற்றி தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் உல்லாஷ் சங்கரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு இருவரும் தப்பிக்க முயல்கின்றனர். உல்லாஷ் சங்கர் ஏன் இவர்களை துரத்துகிறார்? இவர்கள் தப்பித்தார்களா? அன்பரசின் காதல் கை கூடியதா? உல்லாஷ் சங்கரின் அதிர வைக்கும் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆஷிக் மெர்லின் காதல் வயப்பட்ட இளைஞனின் மனநிலையை அழகாக பிரதிபலித்திருக்கிறார். தன் காதலை தாய் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு தெரிவிக்காமல் பயணித்து தன் காதலியிடம் காதலை சொல்லாமல் தவிக்கும் இடங்களிலும், காதலியின் உண்மையான பயணத்தின் காரணத்தை இறுதியில் தெரிந்து கொண்டு அதிர்வதிலும்,பின்னர் காதலின் எண்ணம் ஈடேறாமல் போக மகிழ்வதும் என்று சின்ன சின்ன காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். சிரித்த முகத்துடன், இளமை துள்ளலுடன் டிரம்ஸ் வாசிக்கும் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.

இன்னொரு கதாநாயகனாக வரும் அமல் ரவீந்திரன் காதல் கைகூடாமல் தவிக்கும் இடங்களிலும், இறுதியில் காதலியை கைபிடிக்கும் தருணத்தில் சிறப்பாக செய்துள்ளார்.

சந்தனா அரவிந்த், அருணிமா ஆகிய இருவரும் மலையாள பெண்களாக அசத்தல் அழகுடன் வலம் வந்து காதலுக்காக எந்த ஆபத்தையும் சந்திக்க துணிச்சலான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இவர்களுடன் ஹரீஷ்  சிவப்பிரகாசம், செல்வா, சுமதி தாஸ், தமிழன் ஆகியோருடன் இயக்குநர் உல்லாஷ் சங்கரும் மிரட்டல் பார்வை, அருவாள், துப்பாக்கி என்று துரத்தலுடன் வசனம் குறைவு என்றாலும் தன்னுடைய முகபாவத்திலேயே எண்ணங்களை பிரதிபலித்து இயல்பாக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு-ஜிஸ்பின் செபாஸ்டியன், படத்தொகுப்பு- கிரேசன், இசை – எஸ். சிந்தாமணி , கலை- சிபு கிருஷ்ணா ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மலைப் பிரதேசத்தில்அழகை அள்ளித் தந்திருப்பதில் சிறப்பு.

நகரத்திலும், மலைப் பிரதேசத்திலும் பயணிக்கும் இரு வேறு காதல் கதையை சொல்ல வந்த இயக்குனர் உல்லாஷ் சங்கர் இடைப்பட்ட காட்சிகளில் அதை தவற விட்டு விட்டு இறுதியில் கதைக்கான கோணத்தை யூகிக்கும் அளவிற்கு சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக பேசப்பட்டிருக்கும். மலைப்பிரதேசத்தில் நடக்கும் கதைக்களம் எழில் கொஞ்சம் இயற்கை வளத்துடன் அழகாக காட்சிப்படுத்தி எடுத்திருப்பதற்காக இயக்குனர் உல்லாஷ் சங்கரை பாராட்டலாம்.

மொத்தத்தில் தேவகன்யா புரொடக்சன்ஸ் சார்பில் பிஜு கரிம்பின் கலையில் மற்றும் ஷைனி அலியாஸ் தயாரித்திருக்கும் 1982 அன்பரசின் காதல் ஒரு தலைக்காதலின் வெற்றிபயணம்.