ஹிட் லிஸ்ட் சினிமா விமர்சனம் : ஹிட் லிஸ்ட் வித்தியாசமான கோணத்தில் த்ரில்லிங், சஸ்பென்ஸ் கலந்த எகிற வைக்கும் தருணங்களுக்கு உத்தரவாதம் | ரேட்டிங்: 3.5/5
ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கும் ஹிட் லிஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன்.
இதில் சரத்குமார், விஜய் கனிஷ்கா (அறிமுகம்), ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப்-கருடா ராம்), சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : இணைத்தயாரிப்பு : ஆர்.ஜி.சி-ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ், இசை : சி.சத்யா, ஒளிப்பதிவு : கே.ராம்சரண், படத்தொகுப்பு : ஜான் ஆபிரகாம், திரைக்கதை-வசனம் : சூர்யகதிர் காக்கல்லர், கதை : எஸ்.தேவராஜ், கலை : அருண்சங்கர் துரை, சண்டைப் பயிற்சி : விக்கி – ஃபீனிக்ஸ் பிரபு, பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மிநாராயணன்.ஏ.எஸ், ஆடை வடிவமைப்பு : கவிதா.ஜே, ஆடைகள் : வி.மூர்த்தி, ஒப்பனை : கோதண்டபாணி, படங்கள் : விஜய்,விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக், தயாரிப்பு நிர்வாகி : ஜே.வி.பாரதி ராஜா, மக்கள் தொடர்பு : ரியாஸ்.கே.அஹ்மத்
ஐடி வேலை, மிடில் க்ளஸ் குடும்ப பின்னணி, ஜீவ காருண்ய கொள்கை கொண்டவர் விஜய் (விஜய் கனிஷ்கா) தனது சகோதரி கீர்த்தனா (அபி நட்சத்திரா) மற்றும் அம்மா (சித்தாரா) ஆகியோருடன் வசிக்கிறார். திடீரென ஒருநாள் தாயும், தங்கையும் காணாமல் போக நன்கு தெரிந்த போலீஸ் அதிகாரி யாழ்வேந்தனிடம் (சரத்குமார்) சொல்கிறார். தாய், தங்கையை தேடி அலையும் விஜய் கனிஷ்காவுக்கு, முகமூடி மர்ம மனிதனிடம் இருந்து அழைப்பு வருகிறது. தாயும், தங்கையும் உயிரோடு வேண்டுமானால் தான் சொல்கிற செயல்களை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறான். முதலில் ஒரு சேவலை கொல்லச் சொல்ல, தன் கொள்கைகளை விட்டு விட்டு அதை செய்து முடிக்க, அதன் பின் பிரபல ரவுடி ஒருவனை கொலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான் முகமூடி மனிதன். முதலில் மறுக்கும் விஜய்க்கு தன் தாயின் வெட்டப்பட்ட மோதிர விரல் பார்சலில் வர, வேறு வழியில்லாமல் முகமூடி மனிதன் சொல்லும் அந்த பிரபல ரவுடி ராமச்சந்திர ராஜுவை (கே.ஜி.எஃப்-கருடா ராம்) கொலை செய்கிறார் விஜய் கனிஷ்கா. அதன் பிறகு முகமூடி மனிதன் தன்னிடம் தாயும், தங்கையும் ஒப்படைப்பான் என்று எதிர்பார்க்கும் விஜய் கனிஷ்காவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. பிரபல மருத்துவமனை டீன் கௌதம் வாசுதேவ் மேனனை கொலை செய்ய சொல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறான் முகமூடி மனிதன். இறுதியில் இத்தனை கொலைகளை செய்ய தூண்டும் மர்ம மனிதனின் நோக்கம் என்ன? யார் இந்த முகமூடி மனிதன்? எதற்காக விஜய்யை டார்ச்சர் செய்கிறான்? மர்ம மனிதன் சொல்கிறபடி விஜய் செய்தாரா? விஜய்யின் அம்மாவும், தங்கையும் என்ன ஆனார்கள்? போலீஸ் அதிகாரி யாழ்வேந்தன் கண்டுபிடித்த மர்மம் கலந்த உண்மை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு ஹிட் லிஸ்ட் க்ளைமேக்ஸில் பதில் தெரியும்.போலீஸ் அதிகாரி யாழ்வேந்தனாக சரத்குமார் காணாமல் போகும் தாய் மற்றும் தங்கையைப் பற்றி சொல்லும் விஜய்யிடம் பதறாமல் அமைதியாக விசாரிப்பது, விஜய்யை கண்காணித்து முகமூடி மனிதனை பிடிக்க பல வழிகளை கையாள்வது, அதன் பின் இக்கட்டான நேரத்தில் விஜய்யை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவது, இறுதியில் அனைவரையும் காப்பாற்றினாலும், முகமூடி மனிதன் யார் என்ற மர்மத்தை துப்பு துலக்கும் இடத்தில் தனித்து நிற்கிறார். பொறுமையாக இருந்து, தனக்கான நேரத்தில் அழுத்தமான பதிவை செய்வதிலும், ஆக்ஷன் காட்சிகளிலும், க்ளைமேக்சிலும் அலட்டல் இல்லாமல் லாவகமாக கையாள்வதில் நின்று ஸ்கோர் செய்து கை தட்டல் பெறுகிறார்.
டைரக்டர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா புதுமுகம் அறிமுகம் என்றாலும், அப்பாவியான தோற்றத்தில் கொலை செய்ய முற்படும் நேரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமான முகபாவனைகள், தாய், தங்கையை காணாமல் பதறுவதும், அதற்காக எடுக்கும் முயற்சிகள், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் அசத்தும் நேர்த்தி, முகமூடி மனிதனிடம் மாட்டிக் கொண்டு தவிப்பது என்று பரபரவென காட்சிகள் நகரும் போது அதற்கு ஈடாக இவரின் இயல்பான நடிப்பு ஈடு கொடுத்திருப்பது படத்திற்கு ப்ளஸ், இவரின் வசனம் பேசும் இடங்கள் மென்மையாக இருக்கிறது இன்னும் அழுத்தமாக கம்பீரமாக தர முயற்சிக்கலாம். வெல்டன்.
ஆர்ப்பாட்ட ரவுடியாக ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப்-கருடா ராம்), அப்பாவாக சமுத்திரக்கனி, மகனை காப்பாற்ற சண்டையிடும் போதும், சுயநலமிக்க மருத்துவராக கௌதம் வாசுதேவ் மேனன், முக்கிய திருப்புமுனை கதாபாத்திரத்தில் மறக்க முடியாத நடிப்பை தந்திருக்கும் டாக்டராக ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் ஆகியோர் குறிப்பிட்டு சொல்லும்படி படத்திற்கு முக்கிய பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகளில் சி.சத்யா இசையும், பின்னணி இசையும் மிரட்டலும், அதிர்வையும் ஏற்படுத்தும் அசத்தல் ரகம்.
த்ரில்லிங் காட்சிகளுக்கும், மர்மத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலும், ஆக்ஷன் காட்சிகளிலும் தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண்.
திக் திக் நிமிடங்களை கையாண்டு, அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற செய்வதில் வெற்றி பெற்றுள்ளார் படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம்.
திரைக்கதை-வசனம் : சூர்யகதிர் காக்கல்லர், கதை : எஸ்.தேவராஜ் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.
வித்தியாசமான படைப்புகளைத் தந்திருக்கும் கலை இயக்குனர் அருண்சங்கர் துரை, சண்டைப் பயிற்சி : விக்கி – ஃபீனிக்ஸ் பிரபு, ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மிநாராயணன்.ஏ.எஸ், ஆடை வடிவமைப்பு : கவிதா.ஜே, ஆடைகள் : வி.மூர்த்தி ஆகியோரின் உழைப்பு படத்திற்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.
சாதாரண வாழ்க்கை வாழும் அப்பாவி இளைஞனின் வாழ்க்கையில் சதியாக முகமூடி மனிதன் நுழைய அவனின் வாழ்க்கை எவ்வாறு மாறிவிடுகிறது என்பதை பல திடுக்கிடும் கொலை சம்பவங்களுடன் கொரோனா காலத்து ஃபிளாஷ்பேக் காட்சிகளை இணைத்து பல திருப்பங்களுடன் கடைசி முப்பது நிமிட க்ளைமேக்ஸ் காட்சியில் எதிர்பார்க்காத முக்கிய திருப்புமுனையுடன் சிறப்பாக கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர் இயக்குனர்கள் சூரியகதிர் மற்றும் கே.கார்த்திகேயன்.
மொத்தத்தில் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கும் ஹிட் லிஸ்ட் வித்தியாசமான கோணத்தில் த்ரில்லிங், சஸ்பென்ஸ் கலந்த எகிற வைக்கும் தருணங்களுக்கு உத்தரவாதம்.