ஹர்கரா திரைப்பட விமர்சனம் : ஹர்காரா ஒரு வீரமிக்க அஞ்சல்காரரின் எழுச்சிமிக்க தியாகத்திற்கு உணர்ச்சிகரமான சல்யூட் | ரேட்டிங்: 3/5
கலர்ஸ் ஃபுல் பீட்டா மூவ்மென்ட் சார்பில் என்.ஏ.ராமு மற்றும் சரவணன் பொன்ராஜ் தயாரித்துள்ள ஹர்காரா படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, அருண் காஸ்ட்ரோ இயக்கியிருக்கிறார்.
இதற்கு முன்பு ‘வி1 மர்டர் கேஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்த ராம் அருண் காஸ்ட்ரோ, இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அவரே இந்தியாவின் முதல் தபால்காரர் வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக காளி வெங்கட், கன்னட நடிகை கவுதமி சவுத்ரி, இயக்குனர்கள் மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ், தீனா, ஒளிப்பதிவு: பிலிப் சு. சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன், இசையமைப்பாளர்: ராம் சங்கர்,எடிட்டர் : டானி சார்லஸ்,கலை இயக்குநர்: விஆர்கே ரமேஷ், மக்கள் தொடர்பு –ஏய்ம் சதீஷ்.
2023ல் போஸ்ட்மேன் காளி (காளி வெங்கட்) பற்றியும், 1870களில் முதல் தபால்காரராக பணியாற்றி மாதஸ்வரன் பற்றியும் இரு காலகட்டத்தில் நடந்த கதைக்களமாக படத்தில் விவரிக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் உச்சியில் இருக்கும் ஈசன் மலையில் குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமத்திற்கு தபால்காரராக காளி வெங்கட் அனுப்பப்படுகிறார். முதல் அரசு வேலை அதனால் திருமணம் நடக்கும் என்ற காரணத்தால் ஒத்துக் கொள்ளும் காளி வெங்கட் இங்கே வந்தவுடன் மக்கள் குறைந்த கல்வியறிவு, அஞ்சலகத்தை வங்கியாக பயன்படுத்துவது, தொலை தொடர்பு வசதிகள் இல்லாத இடம், மக்கள் எல்லோருமே மாதேஸ்வரன் பெயரை சொல்லி பயமுறுத்துவது என்பதை அறிந்து காளி தன் உயரதிகாரிகளிடம் இடமாற்றத்தை கோருகிறார். இருப்பினும், நகரத்தில் உள்ள அவரது அதிகாரிகள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து அங்கேயே வேலை செய்யும்படி சொல்கின்றனர். இந்த நேரத்தில்தான் தபால்காரருக்கு ஒரு யோசனை வருகிறது. கிராமத்தில் யாரும் படிக்கவில்லை என்பதால் தபால் நிலையத்தை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக கூட்டுறவு வங்கியைத் திறக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில் அரசுக்கு மனு ஒன்றை எழுதித் தருகிறார்.இந்த மனுவில் கிராமவாசிகளின் கட்டைவிரல் பதிவை அவர் வேறு காரணம் சொல்லி வாங்குகிறார். இந்த நடவடிக்கையால் தபால் நிலையம் மூடப்பட்டால் வேறொரு இடத்திற்கு மாற்றல் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். ஒரு நாள், பக்கத்து மலையில் மிக உயரமான இடத்தில் உள்ள ஒரு வயதான பெண்ணுக்கு வழங்க வேண்டிய கடிதம், அவரது தபால் நிலையத்திற்கு வருகிறது.காளி அதை வழங்குவதற்காக புறப்படுகிறார், மேலும் அவரது நீண்ட பயணத்தின் போது, ஒரு பெரியவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் காளிவெங்கட்டின் குறைகளை கேட்டுவிட்டு இந்த மலைக்கிராமத்தில் 150 வருடங்களுக்கு முன்பு முதல் முன்னோடி தபால்காரன் மாதேஸ்வரன் மற்றும் உள்@ர் மக்கள் இப்போது கடவுளாக வணங்கும் ஹர்காராவைப் பற்றியும் சொல்கிறார். ஹர்கராவின் கதை காளியின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அவரது மனதை மாற்றுகிறது. ஹர்கரா யார்? ஆங்கிலேயரிடம் வேலை செய்து பின்னர் நாட்டை காப்பாற்றுவதற்காக என்ன தியாகம் செய்தார்? ஏன் மலைவாழ் மக்கள் ஹர்கராவை தெய்வமாக கொண்டாடுகிறார்கள்? காளி மனம் மாறி என்ன முடிவு செய்தார்? ஈசன் மலையிலேயே வேலை செய்தாரா? என்பதுதான் க்ளைமேக்ஸ்.
தற்கால தபால்காரராக சுயநலமாக யோசிக்கும் மனிதராக காளி வெங்கட், இன்னுமொரு யதார்த்தமான நடிப்பை வழங்குகிறார். முதலில் மலைமக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளாமல் தடுமாறும் காளிவெங்கட் கோபப்பட்டு எடுக்கும் முடிவு அதன் பின்னர் தபால்காரரரை அம்மக்கள் எவ்வாறு நினைத்து நடத்துகிறார்கள் என்பதையறிந்து மனம் மாறி அவ்வூர் மக்களாகவே வாழ தொடங்கும் போது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்.
வி1 மர்டர் கேஸ்’ என்ற படத்தில் நாயகனாக வந்து இந்தப் படத்தில் ஹர்கராவாக நடித்திருக்கும் இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, ஊடுரூவும் கூர்மையாக பார்வை, மலைகளில் தபால்கள் எடுத்துக் கொண்டு வேகமாக கம்பீரமாக ஒடுவதும், சுறுசுறுப்பாக நேர்த்தியாக சிலம்பம் சுற்றி எதிரிகளை துவம்சம் ஆடுவது, அடிமை மக்களை கொடுமை படுத்தும் ஆங்கிலேயரிடமிருந்து காப்பாற்றும் ஆக்ஷன் காட்சிகள், ஆங்கிலேயருக்கு விசுவசமாக இருந்து பின்னர் அவர்களின் நயவஞ்சக சூழ்ச்சியை அறிந்து இறுதியில் முக்கிய ஆவணத்தை மறைத்து வைத்து தன் உயிரையே துச்சமென மதித்து எடுக்கும் முடிவு மெய் சிலிர்க்க வைக்கிறது. இறுதிக் காட்சியில் தத்ரூபமாக நடித்திருப்பது கண் கலங்க வைக்கிறது. இப்படத்தில் தான் ஏற்றுக்கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இவரின் கடின உழைப்பும், முயற்சியும், பயிற்சியும் பாராட்டுக்குரியது.
துர்காவாக கௌதமி சௌத்ரிக்கு சில வசனங்கள், சில காட்சிகள் இருந்தாலும் முக்கியமானவை.அவர் படத்தில் தன் கண்களாலேயே மௌன வெளிப்பாட்டுடன் காதல் கவிதையை படித்து விடுகிறார்.
படம் முழுவதும் ஒளிப்பதிவாளர் பிலிப் ஆர் சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் ஆகியோரின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் இயற்கை எழிலோடு படமாக்கப்பட்டு கண்களுக்கு குளுமையோடு, இருகால கட்டங்களின் வித்தியாசத்தை சிறப்பாக வெளிப்படுத்திய விதத்தில் கை தட்டல் பெறுகின்றனர்.
ராம் ஷங்கரின் இசை, முதல் பாதியில் சில நிமிடங்கள், சலசலப்பாக வந்து, உரையாடல்களைப் பின்பற்றுவதைக் சிரமமாக்குகிறது.இருப்பினும், கதை முன்னேறும்போது, அவரது பின்னணி ஸ்கோர் கதையுடன் ஒன்றிணைந்து, மனநிலையை மாற்றிவிடுவதோடு திரையில் அழகான காட்சிகளுடன் ஒன்றிடச் செய்கிறது.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தபால்கார்கள் ஹர்கரா என்று அழைப்பாடுவதும், அவர்கள் எடுத்துச் செல்லும் பணி எவ்வளவு சிரமங்கள், சிக்கல்கள், ஆபத்து நிறைந்தவை என்பதை எடுத்துரைத்து அத்தகைய காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாத நேரத்திலும் மக்களுக்காக வாழ்ந்த ஹர்கராக்களை போற்றும் விதமாக இந்தப் படத்தில் தபால்காரர்களின் உன்னத பணிக்கும் அர்ப்பணிப்பிற்கும் சமர்ப்பணமாக இந்தப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ. மெதுவாக நகரும் திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்.
கலர்ஸ் ஃபுல் பீட்டா மூவ்மென்ட் சார்பில் என்.ஏ.ராமு மற்றும் சரவணன் பொன்ராஜ் தயாரித்துள்ள ஹர்காரா ஒரு வீரமிக்க அஞ்சல்காரரின் எழுச்சிமிக்க தியாகத்திற்கு உணர்ச்சிகரமான சல்யூட்.